Shadow

மெட்ராஸ்காரன் – பொங்கல் கொண்டாட்டத்திற்கான படம்

SR ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் B.ஜெகதீஷ் தயாரிப்பில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், புதுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ளது “மெட்ராஸ்காரன்” திரைப்படம். ஒரு சிறு ஈகோ, ஒருவனின் வாழ்வை எந்த எல்லைக்குக் கூட்டிச்செல்லும் என்பதே இப்படத்தின் மையம். ரங்கோலி படப்புகழ் இயக்குநர் வாலி மோகன் தாஸ், இப்படத்தில் ஒரு சிறு சம்பவம் பெரும் பிரச்சனையாகி இருவர் வாழ்க்கையைப் புரட்டி எடுப்பதைப் பரபரப்பான திரைக்கதையாகப் படைத்துள்ளார். இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் சாம் சி எஸ். இசையமைத்துள்ளார். இந்த பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டமாக, வரும் 2025 ஜனவரி 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்தப் பொங்கல் கொண்டாட்டமாக திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் முன் வெளியீட்டுப் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டு, படம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் B.ஜெகதீஷ், “டீசரை வெளியிட்டுத் தந்த எஸ் டி ஆருக்கும், டிரெய்லரை வெளியிட்டுத் தந்த விஜய் சேதுபதி அவர்களுக்கும் நன்றி. அடுத்ததாக விடாமுயற்சி டீமுக்கும் அஜித் சாருக்கும் நன்றி. அவர்களால் தான் இந்தப் படம் பொங்கலுக்கு வருகிறது. இந்தப் படத்தை ஆரம்பித்த போது பொங்கல் மாதிரி பண்டிகையில் வெளியிட வேண்டும் என நினைத்தோம், அது நடந்துள்ளது. இது பொங்கல் பண்டிகைக்கு ஏற்ற படம். காதல், ஆக்சன் என எல்லாம் அம்சங்களும் இப்படத்தில் உள்ளது” என்றால்.

நடிகை ஐஸ்வர்யா தத்தா, “இறுதியாக ஜனவரி 10 ஆம் தேதி மெட்ராஸ்காரன் திரைப்படம் பொங்கலுக்கு வருகிறது. தயாரிப்பாளர் ஜெகதீஷ்க்கு வாழ்த்துக்கள். இந்தத் திரைப்படத்திற்கு, எத்தனை தடைகள் வந்தாலும், விட்டுவிடாமல் தயாரித்துள்ளார். ஷேன் நிகம் வெல்கம் டு தமிழ் சினிமா, வாழ்த்துக்கள். நிஹாரிகாவுக்கும் வாழ்த்துக்கள். கலையரசன் மிகச் சிறந்த கோ ஸ்டார், அவருக்கும் வாழ்த்துக்கள்” என்றார்.

நடிகை நிஹாரிகா, “ஒரு படத்தைத் தயாரிப்பது எவ்வளவு கஷ்டம் என்பது, ஒரு தயாரிப்பாளரான எனக்குத் தெரியும். இந்த நிலைக்கு இந்தப் படத்தைக் கொண்டு வந்ததே வெற்றியின் முதல் படி தான். ஒரு மிகச் சிறந்த திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறீர்கள். இதில் பணிபுரிந்த அனைத்து கலைஞர்களும் தங்களது முழு உழைப்பைத் தந்திருக்கிறார்கள். எடிட்டர் வசந்த் மிக அட்டகாசமாகப் படத்தைத் தொகுத்து இருக்கிறார். இசையமைப்பாளர் சாம் சி எஸ், உங்களின் மிகத் தீவிர ரசிகை நான். மிக அற்புதமான இசையைத் தந்து இருக்கிறீர்கள். காதல் சடுகுடு பாட்டைத் தந்த சரிகமா நிறுவனத்திற்கு நன்றி. என்னுடன் இணைந்து நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. இயக்குநர் வாலி மோகன்தாஸ், இந்தப் படத்தில் இந்தக் கதாபாத்திரத்திற்காக என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு மிகப்பெரிய நன்றி. மெட்ராஸ்காரன் திரைப்படம் கண்டிப்பாக உங்களை ஆச்சரியப்படுத்தும், உங்களை மகிழ்விக்கும். இப்படத்தில் கலையரசன், ஷேன் நிகம் இருவருக்கும் கொடுக்கும் அன்பை, எனக்கும் தாருங்கள்” என்றார்.

நடிகர் கலையரசன், “மெட்ராஸ் என் சொந்த ஊர். எப்போதுமே எனக்கு மெட்ராஸ் பிடிக்கும். மெட்ராஸ்காரன் திரைப்படத்தில் ஒரு பங்காக நானும் இருப்பது மகிழ்ச்சி. நடிகர் ஷேன் நிகம் வெல்கம் டு தமிழ் சினிமா. தயாரிப்பாளர் ஜெகதீஷ்க்கு வாழ்த்துக்கள். மிகச்சிறந்த படத்தைத் தந்துள்ளீர்கள், ஒரு படத்தைத் தயாரிப்பதை விட, அதை ரிலீஸ் செய்வது மிகவும் கஷ்டம். இன்றைய நிலைமையில், தியேட்டர் ஓடிடி என பிசினஸ் பார்ப்பது, திரையரங்குக்குத் திரைப்படத்தைக் கொண்டு வருவது, மிகப் பெரிய படங்களுக்கே சிக்கலாக உள்ளது. அந்த வகையில் இந்தப் படத்திற்கு ட்ரெய்லருக்கு ஒரு விழா, டீசருக்கு ஒரு விழா என மிகச் சிறப்பாக விளம்பரப்படுத்தி வரும் தயாரிப்பாளருக்கு நன்றிகள். என்னிடம் சிலர், ‘என்ன தயாரிப்பாளர் நிறையப் பணம் வைத்திருக்கிறாரா?’ என்று கேட்டனர். ‘இல்லை. நல்ல மனது வைத்திருக்கிறார்’ என்று சொன்னேன். இந்தப் பொங்கலுக்கு நிறையத் திரைப்படங்கள் வருகிறது. ஒரு பெரிய படம் வரவில்லை என்றவுடன் இத்தனை திரைப்படங்கள் வருவது, நல்ல விஷயம் தான். ஆனால் இது நார்மலாகவே நடந்தால் நன்றாக இருக்கும். ஒரு பண்டிகையின் போது, முன்பெல்லாம் பல திரைப்படங்கள் வெளியாகும் நிலை இருந்தது, அந்த நிலை மீண்டும் வரவேண்டும்” என்றார்.

இயக்குநர் வாலி மோகன் தாஸ், “ஐஸ்வர்யா தத்தா, அவர் எனது நெருங்கிய நண்பர். இந்தப் படம் அவரால் தான் துவங்கியது. அவருக்கு என் நன்றிகள். ஷேன் நிகம் என்னை நம்பி இந்தப் படத்திற்குள் வந்ததற்கு நன்றி. நிஹாரிகா உங்களுக்கு ஒரு முறை தான் கதை சொன்னேன். என்னை நம்பி வந்ததற்கு நன்றி. கலையரசன் அண்ணன் உடன் நிறைய உரையாடினேன், மிகச் சிறந்த மனிதர் அவருக்கு என் நன்றிகள். நடிகர் கருணாஸ் என் வாழ்க்கையிலும் அவர் மிக முக்கியமான நபர். இந்தப் படத்தில் மிக சீரியஸ் ரோல் அதை மிக அழகாகச் செய்து தந்தார்” என்றார்.

நடிகர் ஷேன் நிகம், “நான் ரொம்ப லக்கி. மலையாளத்தில் கூட எனக்கு இப்படிச் சிறப்பான அறிமுகம் கிடைக்கவில்லை. தமிழில் ஒரு மிகச் சிறப்பான திரைப்படம் கிடைத்திருக்கிறது. தயாரிப்பாளர் ஜெகதீஷ்க்கு நன்றி. அவர் இப்படத்திற்காகக் கடுமையாக உழைத்து வருகிறார். என்னை இந்தக் கதாபாத்திரத்திற்கு யோசித்த இயக்குநர் வாலி மோகன் தாஸுக்கு நன்றி. என்னுடன் இந்தத் திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. நடிகர் கலையரசன் மிக இயல்பானவர். பார்த்தவுடன் மச்சான் என அழைத்து, மிக இயல்பாகப் பழகுவார். அவ்வளவு எளிமையானவர். ஒளிப்பதிவாளர் பிரசன்னா மிகச் சிறந்த ஒளிப்பதிவு தந்துள்ளார். இவரை விட வெகு வேகமாக வேலை செய்யும் ஒளிப்பதிவாளரை நான் சந்தித்ததே இல்லை” என்றார்.

மலையாளத்தில் புகழ்பெற்ற நடிகர் ஷேன் நிகம், இப்படம் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். இவருக்கு ஜோடியாக முன்னணி நடிகை நிஹாரிகா நடிக்கிறார். இவர்களுடன் நடிகர் கலையரசன், ஐஸ்வர்யா தத்தா முக்கிய பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.