இந்தியாவிற்கு அடுத்து இந்திய ரசிகர்களுக்குப் பிடித்த அணி என்றால் அது மேஏகு இந்தியத் தீவுகள் அணிதான். முதல் மூன்று உலகக்கோப்பையில் கோலாச்சிய மேற்கு இந்தியத் தீவுகள், இந்த முறை நேரடியாகத் தகுதி பெற முடியாமல், தகுதி சுற்றின் மூலமாக இடம் பெற்றது, அதுவும் இரண்டாவது அணியாக.
விவியன் ரிச்சார்ட்ஸ், வால்ஷ், லாரா, என ஐ.பி.எல் முன்னரே மேற்கு இந்தியத் தீவு வீரர்களுக்கென தனி ரசிகர் கூட்டம் இந்தியாவில் உண்டு. ஐ.பி.எல்.க்கு பின்னர் இது இன்னும் பலமடங்கு பெருகியுள்ளது. மேற்கு இந்தியத் தீவுகள் உலகக்கோப்பையில் சந்தித்த முதல் தோல்வி, இந்தியாவிற்கு எதிராக தான் 1983 லீக் சுற்று நடந்தது. பெரிய அணிகளுக்கு எதிராக இந்தியா உலகக்கோப்பையில் பெற்ற முதல் வெற்றியும் இது தான்.
இந்த உலகக்கோப்பையில் தன் முதலாட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பான பந்துவீச்சால் வெற்றி பெற்ற மேற்கு இந்தியத் தீவுகள், அதன் பிறகு தொடர்ச்சியாக மற்ற ஆட்டங்களைத் தோற்றது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு எதிராக வெற்றிக்கு அருகில் வந்து தோற்றனார். முதல் ஆட்டத்தை தவிர மற்ற ஆட்டங்களில் அவர்களின் பந்துவீச்சும் சிறப்பாக எடுபடவில்லை.
இந்தியா அணி டாஸ் வென்று, பேட்டிங்கைத் தேர்தெடுத்தது. இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. காயம் காரணமாக மேற்கு இந்தியத் தீவுகள் அணியில் லூயிஸ்க்கு பதில் அம்பரஸ் சேர்க்கப்பட்டார், நர்ஸுக்கு பதில் ஆலன் சேர்க்கப்பட்டார்.
ராகுல், ரோகித் ஜோடி வழக்கம் போல் முதல் சில ஓவர்களை மிகவும் பொறுமையாக விளையாண்டாது. நாலாவது ஓவரில் இந்தியாவிற்கான முதல் பவுண்டரியை ரோகித் அடித்தார். அடுத்த ஓவரில் சிக்ஸரும் பறக்கவிட்டார். ஆனால் அதே ஓவரின் கடைசி பந்தில் கீப்பர் கேட்சுக்கு மேற்கு இந்தியத் தீவுகள் முறையிட, நடுவர் மறுத்தார். மேற்கு இந்தியத் தீவுகள் ரெவ்யூ செல்ல, மூன்றாவது நடுவர் அவுட் கொடுத்தார். பந்து பேட்டில் பட்டாத இல்லை பேட்டில் பட்டதா என உறுதியாகத் தெரியாத நிலையில், மூன்றாவது நடுவர், கள நடுவர் தீர்ப்பை மாத்தினது, இந்திய ரசிகர்கள், ரோகித் சர்மா மனைவி, ரோகித் சர்மா என அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
பின்னர் கோலி, ராகுல் இணை தொடர்ந்து விளையாட ஆரம்பித்தது, ஒருபுறம் கோலி வாய்ப்பு கிடைத்தப்ப எல்லாம் பவுண்டரி அடிக்க, ராகுல் அநியாத்திற்குப் பொறுமையாக விளையாடினார். சிங்கிள் எடுக்கவே தடுமாறினார். மேற்கு இந்தியத் தீவுகள் கேப்டன் ஹோல்டர் வீசிய முதல் இரண்டு ஓவரையும் மெய்டினாக வீசினார். தொடர்ந்து சிறப்பாக பந்து வீசின அவர் ராகுலை 48 ரன்னில் கிளீன் போல்ட் ஆக்கி வெளியேற்றினார். விஜய் சங்கர் அடுத்து களமாறினார். தொடர்ந்து சிறப்பாக பந்து வீச வந்த ஹோல்டரின் ஓவரின் இரண்டு பௌண்டரி அடித்து நம்பிக்கை ஊட்டினார்.
37 ரன்களை அடித்த போது, சர்தேச அளவில் 20000 ரன்களை கோலி கடந்தார். குறைந்த இன்னிங்ஸில் (417), 20000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையையும் கோலி படைத்தார். இதற்கு முன்னர் இந்தியாவின் சச்சின், மேற்கு இந்தியத் தீவுகளின் லாரா 453 போட்டிகளில் கடந்ததே முந்தைய சாதனை.
பந்து வீச்சில் மாற்றம் செய்து, ரோஞ்சைக் கொண்டுவந்தார் ஹோல்டர். அதற்கு முதல் பந்திலயே பலன் கிடைத்தது, விஜய் சங்கர் 14 ரன்னில் கீப்பர் ஹோப்பிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து ஜாதவ் களமிறங்க, கோலி தன் அரை சதத்தை நிறைவு செய்தார். இந்த உலகக்கோப்பையில் தொடர்ச்சியான நாலாவது அரை சதம்.
ஜாதவ், ரோஞ்ச் ஓவரில் நாலு அடித்த வேகத்தில் நடையைக் கட்டினார். ரோஞ்ச் வீசிய பந்தில், கீப்பர் ஹோப்பிடம் கேட்ச் கொடுத்தார். கள நடுவர் மறுத்த இந்த அவுட்டை, மேற்கு இந்தியத் தீவுகள் ரெவ்யூ செய்தனர், மூன்றாவது நடுவர் அவுட் என அறிவித்தார்.
அடுத்த தோனி களமறிங்கினார், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவரது ஆட்டம் பயங்கர விமர்சனத்துகுள்ளனாது. பொதுவாக வீரர்களின் ஆட்டத்தை பத்தி விமர்சிக்காத சச்சின் கூட தன் அதிருப்தியை வெளியிட்டுயிருந்தார். வந்த வேகத்தில் ஃபோர் அடித்த தோனி, மீண்டும் ஃபார்முக்கு வந்து கட்டையைப் போட ஆரம்பித்தார், ஸ்ட்ரைக் ரோட்டேட் பண்ண சிங்கள் எடுக்கவே தடுமாறினார் .
ஆலன் வீசிய பந்துவீச்சில் ஸ்டெம்பிங் கண்டத்திலிருந்து தப்பினார் தோனி, தன் ஒருநாள் சர்வதேச பயணத்தில் இருமுறை மட்டுமே ஸ்டெம்பிங் ஆகியிருந்த தோனி, தொடர்ச்சியாக இரண்டு போட்டியில் ஸ்டெம்பிங் ஆகும் கண்டத்திலிருந்து தப்பினார்.
38வது ஓவரை வீசிய ஹோல்டரின் முதல் பந்தில் ஃபோர் அடித்த கோலி, அடுத்த பந்தில் அவுட்டானார். 72 ரன்னில் டேரன் பிராவோவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்த பாண்டியா-தோணி இணை சேர்ந்தது, பேட்டிங்கில் கடைசி நம்பிக்கை ஜோடியான இவர்கள் பொறுப்புடன் விளையாட ஆரம்பித்தனர். பாண்டியா வாய்ப்பு கிடைக்கும் பொழுது பவுண்டரி அடிக்க, ஒரு ரன், இரு ரன்னாகச் சேர்க்க ஆரம்பித்தனர்.
பாண்டியா 46 ரன்னில் வெளியேறினார். இந்த உலகக் கோப்பையில் இராண்டாவது முறையாக அரை சத வாய்ப்பை நழுவவிட்டார். ஆஸிக்கு எதிராக 48 ரன்னில் வெளியேறினார். இந்திய பேட்ஸ்மேன்களில், ஸ்ட்ரைகிங் ரேட் 100 க்கு மேல் இந்த மேட்சில் வைத்திருந்த ஒரே வீரர் பாண்டியா மட்டுமே. அதே ஓவரில் வந்த வேகத்தில் ஷமி பூஜ்ஜியத்திற்கு நடையைக் கட்டினார். கடைசி ஓவரில் சிங்கிள்களை மறுத்துவிட்டு ஃபோர், சிக்ஸ் அடித்து தோனி அரை சதத்தை நிறைவு செய்தார்.
50 ஓவர் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்களைக் குவித்தது. தோனி 56 ரன்களுடன், குல்தீப் பூஜ்ஜியத்துடனும் களத்தில் இருந்தனர். 268 ரன்கள் போதுமா என்று தெரியாத நிலையில் ரசிகர்கள் இருந்தனர். காரணம் மேற்கு இந்தியத் தீவுகள் நீண்டு பேட்டிங் வரிசையைக் கொண்டிருந்தது. திடீரென முன்னூறும் அடிப்பர்கள், நூறிலும் ஆல் அவுட் ஆவார்கள்.
இந்திய ரசிகர்களின் ஒரே நம்பிக்கை, 2011 உலகக்கோப்பை இதே 268 ரன்களை அடித்து மேற்கு இந்தியத் தீவுகளை வென்றிருந்தது. அதுவே இப்போட்டியிலும் நடக்கும் என்று நம்பினர். கெயில், அம்ரிஸ் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்க, ஷமி முதல் ஓவரை வீசினார், அந்த ஓவரில் கெயில் முதல் பவுண்டரியை அடித்தார் .
அடுத்த ஓவரை பும்ரா வழக்கம் போல் சிறப்பாக வீசனார். ஐந்தாவது ஓவரில் ஷமி, கெயிலை வெளியேற்றினார். ஜாதவிடம் கேட்ச் கொடுத்து 5 ரன்னில் வெளியேறினார். அடுத்து பும்ரா பந்துவீச்சில் கேட்ச் கண்டத்தில் தப்பினார் ஹோப், பேட்டில் பட்ட பந்து ஸ்லிப்பில் இருந்த கோலிக்கு சற்று முன்னாடி விழுந்தது.
இந்த அதிர்ஷ்டம் நீண்ட நேரம் ஹோப்பிற்கு ஹோப் கொடுக்கவில்லை. ஷமி வீசிய அடுத்த ஒவரில் அருமையான பவுண்டரி அடித்த ஹோப், அடுத்த பந்தில் போல்டாகி 5 ரன்னில் வெளியேறினார். 16/2 என்ற மேற்கு இந்தியத் தீவுகள் இருந்த நிலையில் பூரன் களமிறங்கினார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது, சொல்லப் போனால் பெறுப்பாக விளையாடின ஒரே இணை அம்ரிஸ், பூரன் இணை மட்டுமே. கொஞ்சம் அதிர்ஷ்டமும் அவர்களுக்கு வேலை செய்தது, பாண்டியா பந்துவீச்சில் அம்ரிஸ் அடித்த பந்து, பீல்டருக்குக் கொஞ்சம் முன்னாடி விழுந்து கேட்ச் கண்டத்திலிருந்து தப்பினார். அதுவும் ஓரே ஓவரில் இரண்டு முறை டாப் ஏட்ஜ் ஆகி ஜாதவுக்கு சற்று முன்பாக விழுந்தது.
பவர் ப்ளே முடிவில் மேற்கு இந்தியத் தீவுகள் 29/2 என்ற நிலையில் இருந்தது. இந்த உலகக்கோப்பையில் பவர்பிளேவில் அடிக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோர் இதுவே.
குல்தீப் வீசின பதினேழாவது ஓவரில், கேட்ச் கண்டத்திலிருந்து இம்முறை பூரன் தப்பினார். அவர் அடித்த பந்து லாங்-ஆனில் இருந்த ஜாதவிற்கு சற்று முன்பாக விழுந்தது. அடுத்த ஓவரில் பாண்டியா பந்துவீச்சில் பூரன் அடித்த பந்து ரோகித்துக்கு சற்று தள்ளி விழுந்தது, மறுபடியும் கேட்ச் கண்டத்தில் தப்பினார். ஆனால் அதே ஓவரில் அம்ரிஸை LBW முறையில் வெளியேற்றினார். அம்பயர் அவுட் கொடுத்தவுடன், கைதட்டி வழியானுப்பினார் பாண்டியா.
31 ரன்னில் அம்ரிஸ் வெளியேற, அடுத்து களமிறங்கினார் ஹெட்மியர். அடுத்த ஓவரை குல்தீப்பின் முதல் பந்தில் கடினமான ஸ்டெம்பிக் வாய்ப்பைத் தவறவிட்டார் தோனி. குல்தீப் வீசின பந்து லெக் சைடில் பேட்ஸ்மேன், கீப்பர் ஏமாற்றி பைஸாகப் போனது. இந்த மேட்சில் தோணி பைஸில் கொடுத்த 9 ரன்கள் தான் ஒருநாள் சர்வதேச போட்டியில் அவரின் மோசமான சாதனையாகும். அதே ஓவரின் கடைசி பந்தில், ஹொட்மியரை குல்தீப் LBW கேட்க நடுவரும் கொடுத்துவிட, ஹெட்மியர் உடனடியாக மூன்றாவது நடுவரிடம் மேல் முறையிட்டிற்குப் போனார். ரீப்ளேவில் பந்து பேட்டில் பட்டது தெரியவர ஹெட்மியர் தப்பினார் .
அடுத்து குல்தீப் வீசிய ஓவரில் ஷமியிடம் கேட்ச் கொடுத்து 28 ரன்னில் வெளியேறினார். அதிலிருந்து மேற்கு இந்தியத் தீவுகளின் சரிவு தொடங்கியது. கேப்டன் ஹோல்டர் 6 ரன்னில் சஹால் பந்துவீச்சில் ஜாதவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பும்ரா, ப்ராத்வெயிட்டை ஒரு ரன்னிலும், ஆலனை பூஜ்ஜியத்திலும் அடுத்தடுத்த பந்தில் வெளியேற்றினார். அந்த ஓவரை மெய்டினாகவும் முடித்தார் .
அடுத்து ஹெட்மியரும் ஷமி பந்துவீச்சில் 18 ரன்னில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த கட்ரேல் தன் பங்கிற்கு சஹால் பந்தில் தலா ஒரு ஃபோர், சிக்ஸ் அடித்து அதே ஒவரில் LBW முறையில் பத்து ரன்னில் வெளியேறினார். அவருடைய ட்ரேட் மார்க் சல்யூட்யுடன் வழியனுப்பி வைத்தனர்.
சஹால் வீசிய அடுத்த ஓவரில் ஸ்லிப்பில் ரோகித் பிடித்த கேட்ச், ரீப்ளேவில் கீழே பட்டது தெரிய வர, தாமஸ் தப்பினார். அதோ ஓவரின் கடைசி பந்தில் தாமஸ் கொடுத்த கேட்சைத் தவறவிட்டார் ராகுல். இந்த உலகக்கோப்பையில் இந்தியா தவறவிட்ட இராண்டாவது கேட்ச் இது, இரண்டையுமே ராகுல் தான் தவறவிட்டார்.
கடைசியாக ஷமி பந்துவீச்சில் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் தாமஸ். மூன்றாவது நடுவரிடம் முறையிட்டு இத்தீர்ப்பை இந்தியா பெற்றது. மேற்கு இந்தியத் தீவுகள் 143 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, இந்தியா 125 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா தரப்பில் ஷமி தொடர்ச்சியாக இரண்டாவது முறை நாலு விக்கெட்களை வீழ்த்தினார். கோலி ஆட்டநாயகன் விருதினைப் பெற்றார். இந்த வெற்றியுடன் இந்தியா புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மேற்கு இந்தியத் தீவுகளுக்கு அரையிறுதி வாய்ப்பு பறிபோனது.
– இராஜேஷ் ஜெயப்பிரகாசம்