
ஏறக்குறைய ஆசஷ் தொடருக்கு இணையாகப் புகழ் பெற்ற தொடர்தான் பார்டர் கவாஸ்கர் டிராஃபியும். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே இருக்கும் மிகப் பெரிய வரலாறோ, சில வலிகளோ, கோபங்களோ இல்லாவிடினும், 90களின் மத்தியில் இருந்து இந்திய அணி பெற்று வந்த எழுச்சியும், மிக வலுவான அணியாக இருந்த ஆஸிக்கு, 2000 க்குப் பின்பு நெருக்கடியைக் கொடுக்கும் முக்கிய அணியாக இந்தியா மாறியதும், இந்தக் கோப்பைக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வைத்தது.
தவிர, அதே சமயத்தில்தான் இந்தியாவுடனான போட்டியில் எப்போதும் சுவாரசியத்தைக் கொடுக்கும் பாகிஸ்தான் அணியின் திறமையும் மங்க ஆரம்பித்ததால், அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் போட்டியாக ஆஸி உடனான போட்டிகள் வந்து நின்றது. சாம்பியனை வீழ்த்தினால், எப்போதும் கூடுதல் சந்தோஷம் அல்லவா?
இந்த முறை, பார்டர் காவஸ்கர் தொடருக்கான டெஸ்ட் போட்டிகள் ஆரம்பிக்கும் முன்பு, இரு அணிகளும் 3 வெற்றிகளைப் பெற்றிருந்தனர். ஒரு நாள் தொடரை ஆஸி வென்றிருந்தால், டி20யை இந்தியா வென்றிருந்தது. மீதமிருப்பது டெஸ்ட் தொடர் மட்டுமே.
ஆஸியை அவர்கள் மண்ணில் வீழ்த்துவதென்பது அவ்வளவு சாதாரண விஷயமில்லை.
2000க்குப் பின்பு ஏறக்குறைய 38 டெஸ்ட் தொடர்கள் ஆஸ்திரேலியாவில் நடந்திருந்தால், அதில் ஆஸி தோற்றது 6 தொடர்களை மட்டுமே. அதில் மூன்று தென்னாப்பிரிக்காவும், இங்கிலாந்து ஆசஸை ஒரு முறையும், சமீபத்திய தொடரையும் சேர்த்து இந்தியா இரண்டு முறையும் வென்றிருக்கிறது!
சுமார் 28 தொடர்களை ஆஸிதான் வென்றிருக்கிறது! பெரும்பாலும், அவர்களிடம் தொடரை டிரா செய்தாலே, வென்ற சந்தோஷத்துடன் வீடு திரும்புவதுதான் பெரும்பாலான அணிகளின் எண்ணமாக இருந்தது.
அதற்கு ஏற்றாற்போலவே, பார்டர் கவாஸ்கர் டிராஃபி போட்டிகளும் அமைந்தது. 2017 வரை, ஆஸ்திரேலியாவில் நடக்கும் தொடரில் ஆஸியும், இந்தியாவில் நடக்கும் தொடரில் இந்தியாவும் வெற்றி பெறுவது வாடிக்கையாயிற்று. 2003இல் மட்டும், இந்தியா, ஆஸ்திரேலியாவில் நடந்தத் தொடரை சமன் செய்து புதிய சாதனையைப் படைத்தது போல் பெருமை அடைந்தது என்றால், அடுத்த வருடம் ஆஸ்திரேலியா, இந்தியாவை இந்திய மண்ணிலேயே வென்று பழி தீர்த்துக் கொண்டது.
99இல் இருந்து 4 முறை உலகக்கோப்பையை வென்று, யாராலும் வெல்ல முடியாத அணியாக கோலோச்சினாலும், இந்தியாவை, இந்திய மண்ணில் தோற்கடித்து, பார்டர் கவாஸ்கர் கோப்பையை வெல்ல முடியாதது ஆஸ்திரேலியாவுக்கு கடுப்பு என்றால், டிராவிட், சச்சின், கங்குலி, லக்ஸ்மன், சேவாக், தோனி போன்றோர் இருக்கும் போது கூட ஆஸ்திரேலியாவை அவர்கள் மன்ணில் வெல்ல முடியவில்லையே என்ற கடுப்பு இந்தியாவுக்கு இருந்து வந்தது!
இந்த நீண்ட கண்ணாமூச்சி ஆட்டம், 2018இல், இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று, அவர்களை அந்த மண்னிலேயே வென்ற போதுதான் முடிவுக்கு வந்தது. அந்த வருடம், வார்னரும், ஸ்மித்தும் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்த நேரம், இந்திய அணி ஏறக்குறைய தன் முழு பலத்துடன் இருந்தது, அதனால் வெற்றி பெற்றது என்பதையே தாங்கிக் கொள்ள முடியாத ஆஸ்திரேலிய அணியினருக்கு,
இப்போது நடந்து முடிந்த தொடரில், வார்னரும், ஸ்மித்தும் வந்த பின்னர், இந்தியாவின் முக்கிய வீரர்கள் பலரும் இல்லாமலேயே அடைந்த வெற்றி எந்த விதமான உணர்வினைக் கொடுக்கும் என்று சொல்ல வேண்டுமா என்ன?
அதனாலேயே இந்தத் தொடர் இந்திய ரசிகர்கள் பலருக்கும் மனதுக்குப் பிடித்தமானதாக இருக்கிறது.
வெளிநாடுகளில் இந்தியா டெஸ்ட் விளையாடும் போது, முதல் போட்டியினைத் தோற்பதுதான் பெரும்பாலும் நம் அணியின் வழக்கமாக இருக்கும். ஆனால் இந்தத் தொடரில், யாரும் எதிர்பாராத் வண்ணம், முதல் போட்டியின் முதல் இன்னிங்சில், 50 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்று ஆச்சரியம் கொடுத்தது. ஆனால், அந்த ஆச்சரியம் அடங்கும் முன்னர், இரண்டாவது இன்னிங்சில் 36க்குச் சுருண்டது.
ஒட்டு மொத்த இந்திய ரசிகர்களுக்கும் எரிச்சலைக் கொடுத்த இன்னிங்ஸ் அது. அனைத்து கிரிக்கெட் வல்லுநர்களும், இந்தியா வொயிட்வாஷ் ஆகி, முகத்தில் கறி பூசிக் கொண்டு வரும் என்றுதான் கணித்தார்கள். ஏனெனில், முதல் இன்னிங்சில் ஓரளவு நன்றாக விளையாடிய கோலியும் நாடு திரும்புகிறார் என்பதும், பந்து வீச்சாளர்கள் பலருக்கும் காயம் ஏற்பட்டதும், இந்த மகத்தான தோல்வியிலிருந்து மனரீதியாக மீள்வது கடினம் என்பதாலும் அவ்வாறு கணிக்கப் பட்டது. ஆனால், அப்படிச் சொன்ன அனைவர் முகத்திலும் கறியைப் பூசியது இந்திய அணியின் எழுச்சி!
இனி இழக்க எதுவுமில்லை எனும் போது ஒரு விரக்தி வரும்! எல்லார் மீதும் கோபம் வரும்! கொஞ்சம் நிலைப்படுத்தி திரும்பிப் பார்த்தால், அதுவே தோல்வியின் மேல் ஒரு காதலைக் தரும்! ஏனெனில் வெற்றியினை நோக்கித் தள்ளக் கூடிய உந்து சக்தியாக இருக்கப் போவதும், அந்தத் தோல்வியே!
இந்திய அணி இந்தத் தொடரை வெல்லுவதற்க்கு உந்துசக்தியும் அந்தத் தோல்விதானோ என்னமோ!
ஆஸ்திரேலியாவின் மெக்கிராத் சொல்லுவார். பல சமயங்களில் ஆஸ்திரேலியா அணி போட்டி துவங்கும் முன்னரே ஜெயித்திருக்கும், ஏனெனில் டெஸ்ட் போட்டி என்பது நம் மனதின் திடத்தைச் சோதிக்கும் போட்டி என்றால், அந்த விளையாட்டை, மிகத் தெளிவாக விளையாடுவதில் ஆஸ்திரேலியா வித்தகர்கள்.
ஆஸ்திரேலியாவிடம் எப்போதும் ஒரு ஆக்ரோஷ குணம் இருக்கும். அது, மற்ற அனைவரும் டிரா செய்ய விளையாடும் போது, ஆஸி அணியை மட்டும் வெற்றிக்காக ஆட வைக்கும். களத்தில், எதிரணி வீரர்களை, பந்துகளை மட்டுமல்ல ஆஸ்திரேலியாவின் வார்த்தைகளையும், உடல்மொழியையும் சேர்த்தே எதிர்கொள்ள வைக்கும்!
எதிரணியின் பலவீனங்கள்தான் இவர்களது குறி. அவர்களின் பேச்சுகளுக்கு பதில் சொல்லும் போதுதான் அவர்களின் வளையத்திற்குள் எதிரணியினர் இழுக்கப் பட்டிருப்பார்கள். இந்தச் சக்கர வியூகதை, அபிமன்யுவைப் போல் தகர்த்துக் கொண்டு சென்ற வீரர்கள் பலர் உண்டு. ஆனால், அதில் மீண்டு வந்தவர்கள் மிகச் சிலரே! ஏனெனில், அதை வீழ்த்த அர்ச்சுனனோ, கிருஷ்ணனோ தேவை.
அதனால்தான், சச்சின், டிராவிட், சேவாக் போன்றோர் கூட, பெரும்பாலும் அவர்களுக்கு வார்த்தைகளில் பதில் சொல்ல முயலுவதில்லை. இதே விளையாட்டைக் கொஞ்சம் வேறு மாதிரி விளையாடும், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா கூட, இந்த விளையாட்டில் ஆஸியை வீழ்த்தியதில்லை.
ஆனால் இந்திய அணியோ, முதன் முறையாக அந்தச் சக்கர வியூகத்தை தவிடு பொடியாக்கியிருக்கிறார்கள். அதை விட மகிழ்ச்சியைத் தருவது, இதை உடைக்க அவர்கள், அர்ச்சுனனையோ, கிருஷ்ணனையோ முன்னிறுத்தவில்லை. மாறாக, அபிமன்யுவைக் கொண்டே, ஆஸியின் சக்கர வியுகத்தை அடித்து நொறுக்கியிருக்கிறார்கள் என்பதுதான் இதன் கூடுதல் சிறப்பு.
அவர்களுடைய பாணியை அவர்களுக்கு திருப்பிக் காட்டிய அதே சமயத்தில், இயல்பான இந்திய பாணியையும் அவர்களுக்குக் காட்டியே சென்றார்கள் நமது அணியினர்.
தொடர் முடிந்து திரும்பிப் பார்க்கும் போது, வெற்றி தோல்வியைத் தாண்டி, சிராஜின் மீதான இனவெறி வசை, ஸ்மித் ஆடுகளத்தில் செய்த செயல், டிம் பெய்ன், பண்ட் மற்றும் அஸ்வினை திசை திருப்பப் பேசிய பேச்சுகள், மேத்யூ வேட், ஹனுமன் விகாரியின் காயத்தைக் கிண்டல் செய்த செயல் போன்ற பல காரணங்களுக்காக ஆஸ்திரேலியா அணி நினைவுகூரப்படுமாயின்,
பயிற்சி ஆட்டத்தில் காமரூன் க்ரீனுக்கு தலையில் அடிபட்ட உடன், ஓட வேண்டிய ஓட்டத்தை விட்டு விட்டு, முதல் ஆளாகச் சென்று அவரைப் பார்த்த சிராஜின் செயலும், பாடிலைனில் தொடர்ச்சியாகப் பந்து வீசிய போதும் அதை அமைதியாக எதிர் கொண்ட புஜாராவின் செயலும், தொடரை வென்ற பிறகு, கோப்பையைத் தூக்கி நடராஜனின் கைகளில் கொடுத்த, 100 டெஸ்ட் போட்டிகள் விளையாடிய சாதனைக்காக, இந்திய அணி வீரர்களின் கையெழுத்துகளைக் கொண்ட ஜெர்சியை பரிசளித்த ரகானேவின் செயலும்தான் அனைவரின் மனதிலும் நின்று கொண்டிருக்கிறது!
அதன் உச்சம்தான் நாடு திரும்பிய பிறகு, கங்காரு படம் கொண்ட கேக்கினை வெட்ட மறுத்த ரகானேவின் செயல்.
‘ரவுத்திரம் பழகு ‘என்பதை கையிலெடுத்த இந்திய அணியினர், அவர் நாண நன்னயம் செய்து விடல் என்பதை முன்னிறுத்தவும் தவறவில்லை.
கோப்பையை வென்று இந்திய ரசிகர்களின் மனங்களை வென்றவர்கள், தங்கள் நடத்தையால் உலக ரசிகர்களின் மனங்களையும் வென்று வந்திருக்கிறார்கள்.