32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

யாத்திசை என்றால் என்ன?

Dinesh R சேலம் Published: 11/04/2023 2 நிமிட வாசிப்பு Updated: 18/04/2023 இது புதிது
எழுத்து அளவு:

யாத்திசை என்றால் தென் திசை என்று பொருள். ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தின் தென்திசையான பாண்டிய நாட்டிற்கெதிராகப் போராடிய எயிணர் எனும் தொல்குடியைப் பற்றிய கதைதான் ‘யாத்திசை’.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

‘யாத்திசை’ ட்ரெய்லர் வெளியான 6 நாட்களில் 6 மில்லியன் பார்வைகளைக் கடந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், திரைப்படத்தை ஏப்ரல் 21 அன்று தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளில் சக்திவேலனின் சக்தி ஃபிலிம் பேக்டரி வெளியிடுகிறது. வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை ஐங்கரன் இன்டர்நேஷனல் பெற்றுள்ளது.

வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே.ஜெ.கணேஷ் வழங்கும் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘யாத்திசை’. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பானது, ஏப்ரல் 10 அன்று சென்னையில் நடைபெற்றது.

இயக்குநர் தரணி ராசேந்திரன், “தயாரிப்பாளரிடம் கதை சொன்ன போது, ‘உன்னிடம் உள்ள தவிப்பு பிடித்துள்ளது. உன் டீம் பற்றிச் சொல்’ என்றார். இந்தப் படத்தின் உயிர் என்னுடைய டீம் தான். எடிட்டர் மகேந்திரன், இசையமைப்பாளர் சக்ரவர்த்தி இருவரும் இல்லையென்றால் நான் இல்லை. எங்களை நம்பி ஒவ்வொருவராக உள்ளே வந்தார்கள். ஒரு ஷெட்யூல் முடித்து காட்டச் சொன்னார்கள், அதன் பிறகே இந்தப் படம் உருவாவது உறுதியானது. 1300 வருடங்களுக்கு முந்தைய கதை என்பதால், அந்தக் காலகட்டம் அந்த மொழி வழக்கு அதையெல்லாம் உயிரோடு கொண்டு வருவது அத்தனை சவாலாக இருந்தது. அக்காலத்திய மொழியை எடுத்தால் இப்போது யாருக்கும் புரியாது என எல்லோரும் பயமுறுத்தினாலும், இதில் ஒரு கலை இருக்கிறது. சினிமா என்பது கலை, மக்கள் கொண்டாடுவார்கள் என்று தயாரிப்பாளர் தான் உறுதியாக நின்றார். அவருக்கு நன்றி. இப்படத்திற்கு முழு உயிர் தந்தது என் குழு தான். 25 உதவியாளர்கள் இப்படத்தில் வேலை செய்துள்ளார்கள். இந்தப் படத்தின் உயிர் எல்லோரையும் இழுத்து உடன் இணைந்து பயணிக்கிறது. இந்தப் படம் பொன்னியின் செல்வனுக்குப் போட்டியல்ல. ஆனால் யாத்திசை மிகப் பெரிய தாக்கத்தை உண்டு பண்ணும். இந்திய சினிமாவில் மிகப் பெரிய படமாக இருக்கும் எனும் நம்பிக்கை உள்ளது” என்றார்.

விநியோகஸ்தர் சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன், “‘யாத்திசை’ சக்தி ஃபிலிம் பேக்டரிக்கான பெருமை. எங்கள் நிறுவனத்தில் நிறைய பெருமையான படைப்புகளை வெளியிட்டுள்ளோம். அந்த வகையில் இந்தப் படம் மிக முக்கியமானதாக இருக்கும். இந்தப் படத்தின் ட்ரெய்லர் பார்த்துவிட்டே 30 பேருக்கு மேல் என்னை அழைத்துப் பேசினார்கள். எல்லோரையும் இந்தப் படம் சென்றடைந்துள்ளது என்பதே பெருமை. ட்ரெய்லரை விட இந்தப் படத்தில் இன்னும் பிரம்மாண்டம் இருக்கும். ஹாலிவுட் போர் படங்களில் கூட இல்லாத ஒரு அட்டகாசமான திரைக்கதை இந்தப் படத்தில் இருக்கிறது. கண்டிப்பாக இது மிக முக்கியமான படமாக இருக்கும்” என்றார்.

இத்திரைப்படம் ஏப்ரல் 21 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.