Shadow

யசோதா விமர்சனம்

தங்கையின் மருத்துவச் சிகைச்சைக்காக, வாடகைத்தாயாகச் செல்கிறாள் யசோதா. உடனிருக்கும் வாடகைத்தாய்கள் திடீர் திடீரெனக் காணாமல் போக, அனுமதி மறுக்கப்பட்ட ஜோன் 2-க்குள் சென்று பல அதிர்ச்சிகரமான ரகசியங்களைப் பார்த்துவிடுகிறார். அது என்ன ரகசியம் என்பதும், அது அவருக்கு எத்தகைய ஆபத்தினைக் கொண்டு வருகிறது என்பதுதான் படத்தின் கதை.

மருத்துவர் கெளதமாக உன்னி முகுந்தனும், மருத்துவர் மதுபாலாவாக வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளனர். யூகிக்க முடிந்த திருப்பங்களுக்கே இவ்விரண்டு கதாபாத்திரங்களும் உதவியுள்ளனர். அவர்களது ஃப்ளாஷ்-பேக் கிளைக்கதை நன்றாக இருந்தாலும், சமந்தாவைக் கட்டிப் போட்டுவிட்டு பள்ளிக் குழந்தைகள் போல் ஒப்பிப்பது எல்லாம் திரைக்கதைக்கு இழுக்கு.

தனிக்கதாநாயகியாக சமந்தா நடித்துள்ளார். நாயகிக்கான ஆக்ஷனைக் கதை தான் என்றாலும், யசோதா முழுத் திருப்தியை அளிக்கவில்லை. ஒரு ஹாலிவுட் நடிகையின் மரணம், இந்தியாவில் ஷிவா – ஆருஷி இணையின் கொலை என கிளைக்கதைகள் விறுவிறுப்பைக் கூட்டினாலும், படத்தின் மையம் யசோதாவைச் சுற்றியே சுழல்கிறது. மருத்துவர் கெளதமை அவர் டீஸ் செய்வது, ஜோன் 2-வில் பிணங்களைக் கண்டு மிரட்சி அடைவதென நடிப்பில் அசத்தியுள்ளார். மிக சீரியசான ஓர் இடத்தில், துப்பாக்கியை நீட்டியவண்ணம், “அந்தக் கிருஷ்ணா பரமாத்வையே வளர்த்தவடா யசோதா!” என சமந்தா சொல்லும் இடத்தில் ‘கெதக்’கென்றிருக்கிறது. இது ஒரு தெலுங்குப் படமும் கூட என்ற சலுகையையும் தர முடியாத இடத்தில் அந்த வசனம் சொல்லப்படுகிறது. இயக்குநர்கள் ஹரி ஷங்கரும், ஹரீஷ் நாராயணனும் திரைக்கதையில் கவனம் செலுத்தாததால் படம் ஏற்படுத்தியிருக்க வேண்டிய தாக்கம் குறைவாகவே உள்ளது.