Shadow

மிரள் விமர்சனம்

முதற்பாதியில், கதைக்கான அடித்தளத்தை அமானுஷ்யமாக அமைத்துவிட்டு, இரண்டாம் பாதியில் மிரள வைத்துள்ளார் இயக்குநர் M. சக்திவேல்.

பரத்தின் மனைவியான வாணி போஜனுக்கு, அமானுஷ்யமான கனவுகள் துரத்தியவண்ணம் உள்ளன. அந்தக் கனவுகளில் இருந்து, தன் மனைவியை மீட்க வழி தெரியமல் தவிக்கிறார் பரத். ‘குலதெய்வம் கோயிலுக்குப் போய் படையல் இட்டால் எல்லாம் சரியாகும்’ என பரத்தின் மாமியார் மீரா கிருஷ்ணன் சொல்ல, பரத் தன் மனைவி மற்றும் மகனுடன் கிராமத்திற்குக் கிளம்புகிறார்.

கிராமத்தில் இருந்து மீண்டும் ஊருக்குத் திரும்பி வரும் வழியில், அத்துவானக் காட்டில் குடும்பத்துடன் சிக்கிக் கொள்கிறார். அவரைச் சூழ்ந்து நெருக்கும் அமானுஷ்ய இடரில் இருந்து பரத்தால், அவரது குடும்பத்தைக் காப்பாற்ற முடிந்ததா என்பதே படத்தின் கதை.

காட்சிகளுக்கு அளித்த கவனத்தை வசனத்திற்கு அளிக்கத் தவறியுள்ளனர். ஹாரர் படத்திற்கான க்ரிப்பிங்கான முதற்பாதியாக இல்லாவிட்டாலும், க்ளைமேஸில், முதற்பாதியில் ஒட்டாமல் நகரும் காட்சிகள் அனைத்திற்கும் முழுமையான நியாயத்தைச் செய்துள்ளனர்.

தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது எனத் தெரியாமல் தவிக்கும் பாத்திரத்தில் பரத் நன்றாக நடித்துள்ளார். தன்னை உள்ளிருந்து அழுத்தும் ஏதோ பாரத்தைச் சுமக்க முடியாதவராக வாணி போஜன் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ரணத்தை விட, ரணத்தை அளித்தவன் அருகிலேயே இருக்கும் ஒருவனெனத் தெரிந்து அவர் ரெளத்திரம் கொள்ளும் இடத்தில், அவரது மனநிலையைப் பார்வையாளர்களுக்குக் கச்சிதமாகக் கடத்துகிறார். அத்துவானக் காட்டில், கனவில் கண்டது போலவே முகமூடி ஒருவனின் சைக்கோத்தனமான செயற்பாடுகளால் அல்லலுறும் நடிப்பிலும் ஸ்கோர் செய்கிறார்.

கே.எஸ்.ரவிக்குமாரின் கதாபாத்திரம் க்ளைமேக்ஸில் ஒரு முழுமையைப் பெற்றாலும், பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமளவிற்கு அவருக்குக் காட்சிகள் இல்லை. படத்தின் நாயகன், ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலாவைச் சொல்லலாம். இரவு நேரத்தில், அத்துவானக் காட்டில் அரங்கேறும் சம்பவங்களை படு மிரட்டலாகக் காட்சிப்படுத்தியுள்ளார். அத்துவானக் காடு வரை காத்திருக்காமல், படத்தின் தொடக்கம் முதலே, எஸ்.என்.பிரசாத்தின் பின்னணி இசை, ஒரு ஸ்லாஷர் த்ரில்லருக்கான முஸ்தீபுகளுடன் ஒலிக்கத் தொடங்கிவிடுகிறது.

படத்தின் க்ளைமேக்ஸ் எதிர்பாராத அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அமானுஷ்யத்தையும் மீறிய கண்ணுக்குப் புலப்படாத ஆபத்துகள் சூழ் உலகின் எதார்த்தத்தையும் அச்சுறுத்தலையும் படம் பார்வையாளர்களிடம் ஆழமாக ஏற்படுத்துவதே படத்தின் பலம்.