Shadow

யூகி விமர்சனம்

ஒரு மிஸ்ஸிங் கேஸை அடிப்படையாக வைத்து, அதோடு சிற்சில எமோஷ்னல் விசயங்களையும் தூவிப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.

படத்தின் துவக்கத்திலே கயல் ஆனந்தி காணமால் போனதிற்கான விசாரணை துவங்குகிறது. அடுத்த காட்சி ஜான்விஜய் கொலை செய்யப்படுகிறார். இவை சம்பந்தமான விசாரணைகளும் விபரிப்புகளும் நடைபெறுகின்றன. ஒரு பக்கம் மாலை போட்ட கெட்டப்போடு நட்டி விசாரணைகளை நடத்துகிறார். மறுபுறம் டிடெக்டிவான நரேன், கதிரோடு இணைந்து விசாரிக்கிறார். இந்த மூன்று விசாரணைகளின் பின்னணியிலும் ஒரே விசயம் தான் பின்னப்பட்டிருக்கிறது. மேலும் இவர்கள் மூவரில் ஒருவரே இதைச் செய்திருக்கிறார் என்பதும் தெரிய வருகிறது. அது யார் என்பதே படத்தின் திரைக்கதையாக விரிகிறது

டிடெக்டிவ் ஆபிசராக நரேன் பொருத்தமான உடல்மொழியை வெளிப்படுத்தி அந்தக் கேரக்டருக்கு நியாயம் சேர்த்துள்ளார். நட்டி நடிப்பில் இயல்புத்தன்மை மிஸ்ஸிங். ஒருவேளை அவரது கேரக்டரின் வடிவம் முழுமை பெறாமல் இருப்பதால் அவரது நடிப்பு எடுபடாமல் இருக்கலாம். கதிர், கடைசி 15 நிமிடம் ஒட்டுமொத்த படத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடுகிறார். ஜான் விஜய் காட்டியிருக்கும் நடிப்பு படத்திற்கு பலம். வினோதினி உள்ளிட்ட நடிகர்கள் யாவரும் குறைவின்றி நடித்துள்ளனர். நாயகி கயல் ஆனந்தி சென்டிமென்ட் காட்சிகளில் வெகு இயல்பாக நடித்துள்ளார்.

தேவையற்ற இரைச்சலை நிறைய இடங்களில் வைத்துள்ளார் இசையமைப்பாளர். பின்னணி இசையில் இன்னும் கூடுதல் கவனம் எடுத்திருக்கலாம். ஒளிப்பதிவில் நல்ல மெச்சூர்ட்தன்மை தெரிகிறது. ஜெயில் சம்பந்தப்பட்ட ஒருசில காட்சிகளில் விஷுவல்ஸ் ‘நச்’ ரகம்.

ரசிகர்கள் யூகித்து விடக்கூடாது என்பதற்காக நிறைய யோசித்துள்ளார் இயக்குநர். அதுவே படத்திற்கு வில்லனாகவும் அமைந்துள்ளது. திரைக்கதையை யூகிக்க முடியாத அளவில் அமைத்த இயக்குநர் அந்தத் திரைக்கதை நம்மோடு கனெக்ட் ஆகவேண்டும் என்பதை மறந்து விட்டார். யாரோட சோகம், யார்மீது கோபம் என எந்தக் கதாபாத்திரத்துடனும் நாம் பயணிக்க முடியாத குழப்ப நிலையிலே படம் பார்க்க வேண்டியுள்ளது. யூகிப்பதற்கு இடம் கொடுக்காத இயக்குநர் படத்தில் எமோஷ்னலுக்கு இடம் கொடுத்திருந்தால் யூகி இன்னும் ஈர்த்திருக்கும்.

– ஜெகன் கவிராஜ்