Shadow

செஞ்சி விமர்சனம்

ஓர் ஓலைச்சுவடியில் கிடைக்கும் துப்பினைக் கொண்டு, மூவர் குழு ஒன்று, புதையலைத் தேடிச் செல்கிறது. செஞ்சியில் தொடங்கும் அந்தப் பயணம், மதுரை (கல் மலை), ராஜபாளையத்திலுள்ள இதய வடிவப்பாறை, தென்காசி எனப் பயணித்து கேரளாவின் கல்லார் (Kallar) மலைப்பகுதியில் முடிகிறது. புதையல் வேட்டையை மையமாகக் கொண்ட தமிழ்ப்படங்கள் அரிது.

கணேஷ் சந்திரசேகர், ரஷ்ய நடிகை கெசன்யா மற்றும் பலர் நடித்துள்ள படம். கதையை எழுதிப் படத்தைத் தயாரித்து இயக்கியதோடு நடித்தும் உள்ளார் கணேஷ் சந்திரசேகர். ஏலியன் பிக்சர்ஸ் சார்பில் இந்தப் படம் உருவாகி உள்ளது. ஆக்சன் ரியாக்சன் வெளியிடுகிறது.

பிரான்சிலிருந்து பாண்டிச்சேரிக்கு வரும் சோஃபியா தனது மூதாதையர் வீட்டை அடைகிறாள். அங்கே நிலவறையில் பழைய புராதனக் கலைப்பொருட்கள் ஏராளமாக இருக்கின்றன. அங்கே ஏதோ ஓர் அமானுஷ்யத்தை உணரும் சோஃபியா, ஓர் ஓலைச்சுவடியைக் கண்டெடுக்கிறாள். அதைத் தொல்பொருள் ஆராய்ச்சி செய்யும் ஜாக் ஆண்டர்சனிடம் காட்டுகிறாள். புதையலைப் பற்றியும், புதையல் அடைவதற்கான வழிமுறைகளையும், முதல் தடயம் கிடைக்கும் இடத்திற்கும் அவ்வோலைச்சுவடி அவர்களை இட்டுச் சொல்கிறது. ஒன்றிலிருந்து மற்றொன்று என, வெவ்வேறு இடங்களில் கிடைக்கும் தடயங்களின் முடிவில் அவர்களுக்குக் காத்திருக்கும் ஆபத்தும் ஆச்சரியமும்தான் படத்தின் கதை.

திடீரென கிளைக்கதையாக, ஐந்து சிறுவர்களின் வால்தனம் காட்டப்படுகிறது. அதுவும் அப்படியே நிறுத்தப்பட்டு, மீண்டும் புதையல் வேட்டைக்குப் படம் திரும்புகிறது. இடைவேளைக்குப் பின், சாத்தனூருக்கும் செஞ்சிக்கும் இடைப்பட்ட மலைக்காட்டில் தீவிரவாதிகளின் ஊடுருவல் உள்ளதாக மற்றொரு கிளைக்கதை தொடங்குகிறது. மையக்கதை, சிறுவர்களின் கதை, தீவிரவாதிகளின் கதை என மூன்றையும் சினிமாட்டிக்காகச் செஞ்சியில் (!?) முடித்து வைக்கிறார். படத்தொகுப்பாளர் ஆனந்த் ஜெரால்டு, படத்தொகுப்பில் கவனம் செலுத்தி நீளத்தைக் குறைப்பதிலும், கிளைக்கதைகளை நேர்த்தியாகக் கோர்ப்பதிலும் கூடுதல் கவனத்தை நல்கியிருக்கலாம்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த ஐவர் இணைந்து சென்றால்தான் புதையலைக் கண்டடைய முடியும் என்பது ஓலைச்சுவடியிலுள்ள பிரதான விதி. தொல்பொருள் ஆராய்ச்சியாளரான ஜாக் ஆண்டர்சனோ, அந்த விதியைப் பொருட்படுத்தாது, தன்னோடு உதவியாளர் மற்றும் ஃப்ரென்ச் பெண்ணுடன் சேர்ந்து புதையல் தேடிச் செல்வது வேடிக்கையாக உள்ளது.

நாயகனாக நடித்துள்ள கணேஷ் சந்திரசேகர், அந்தக் கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்தினாலும், சில இடங்களில் அவரது அனுபவமின்மை எட்டிப் பார்க்கிறது. சோஃபியாவாக நடித்துள்ள ரஷ்ய நடிகை கெசன்யாவின் நடிப்பு ரசிக்க வைக்கிறது. மாஸ்டர் சாய் ஸ்ரீனிவாசன், மாஸ்டர் தர்சன் குமார், மாஸ்டர் விதேஷ் ஆனந்த், மாஸ்டர் சஞ்சய், பேபி தீக்ஷன்யா ஆகிய சிறுவர்களின் லூட்டி ரசிக்க வைக்கிறது.

‘இது தங்கம்’ என சிறுவர்கள் ஆடும் குதூகலமான பாடல், L.V.முத்து கணேஷின் இசையில் ரசிக்க வைக்கிறது. ஹரிஷ் ஜிண்டேவின் ஒளிப்பதிவில் வனப்பகுதிகள் அட்டகாசமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. புதையல் வேட்டை படமென்பதால், லோக்கேஷன்கள் முக்கியமான பங்கு வகிக்கிறது. கேரள மலைப்பகுதியில் அடர்வனத்தைத் தேர்ந்தெடுத்து, அசாத்தியமான இடங்களில் படப்பிடிப்பு நடத்தி கண்ணைக் கவரும் காட்சிகளை அளித்துள்ளனர்.

அடுத்த பாகத்திற்கான அமானுஷ்யமான சுவாரசியத்தோடு படத்தை முடித்துள்ளனர். செஞ்சியில் தொடங்கி கேரளக் கல்லாரில் முடிகிறதென புதையல் வேட்டை கதை சொல்லப்படுகிறது. ஆனால், செஞ்சியில் முடிவதாகக் கிளைக்கதைகள் சொல்கின்றன. இது போன்ற சின்னஞ்சிறு குழப்பங்கள், மற்றும் கச்சிதமான படத்தொகுப்பு முதலியவற்றில் கவனம் செலுத்தியிருந்தால், கணேஷ் சந்திரசேகரின் இந்த முயற்சி பரவலான கவனத்தைப் பெற்றிருக்கும்.