Shadow

அந்தி நேர சாயை – 2

அந்தி நேர சாயை – 1

முதல்ல இந்த ஊருக்கு வெளியில் இருக்கிற பெரிய பெரிய மரத்தை எல்லாம் வெட்டணும். இல்லன்னா பேய் இருக்கு, பிசாசு இருக்குன்னு கதைய கிளப்புறவங்க நாக்க வெட்டணும். வீட்டுத் தோட்டத்துல பயமுறுத்திக்கிட்டு இருந்த பேயெல்லாம் டார்ச்-லைட் வந்தப்புறம் இந்த மாதிரி ஊருக்கு வெளியில இருக்கிற பெரிய மரத்துக்கு குடி வந்துடுச்சுன்னு எங்க தாத்தா விளையாட்டா சொல்வார். சரி தான். பேய்ன்னு தனியா ஏதாச்சும் இருக்கா என்ன? மனசுல இருக்கிற பயத்துக்கு பேர் தான் பேய். இந்த ஊர்க்காரங்க தான் சொல்றாங்கன்னா கேசவுக்கு புத்தி எங்க போச்சுன்னு தெரில. கப்பூரார் மனைவி தான் அவர கொன்னாங்களாம். கொல்றவங்களா இருந்தா ஏன் இவ்ளோ நாளுக்கு அப்புறம் கொல்லணும்? அதுவும் 300 கிலோ மீட்டர் தாண்டி வந்து இந்த ஊர்ல தான் கொல்லணுமா?

ஊருக்குள்ள வர்றப்பவே கேசவ் சொன்ன மரம் எதுன்னு சுலபமா கண்டுபிடிக்க முடிஞ்சது. ரொம்ப பெரிய மரம் தான். நின்னு ரெண்டு நிமிஷம் பாத்துட்டு தான் வந்தேன். இலைய தவிர வேறெதுவும் அந்த மரத்துல இருக்கிற மாதிரி தெரில. அந்தப் பக்கம் போனவர்னு மும்மரமா கூப்ட்டு என்னைப் பயமுறுத்துற மாதிரி சொன்னார். இந்த மரத்துல நிஜமாவே பேய் இருக்கான்னு அவருகிட்ட தெரியாம கேட்டுட்டேன். என்ன இப்படிக் கேட்டுட்டீங்கன்னு அவங்க தாத்தா காலத்தில் இருந்து இந்த மரத்துப் பேய் எத்தன பேர கொன்னு இருக்குன்னு விவரமா சொன்னாரு. ஹாஃப் சென்ச்சுரி போட இன்னும் 4 கொல தான் பாக்கியாம். ரொம்ப கோவக்காரப் பேயாம். அதுவும் ஆம்பளைங்கள மட்டும் தான் கொல்லுற கன்னிப் பேயாம். நைட் பத்து மணிக்கு மேல எவ்ளோ பெரிய கொம்பன் வந்தாலும் அவ்ளோ தானாம். ஒரே அடி.. செவலு கொயிங்க்னு கேக்குமாம். நீங்க வாங்கி இருக்கீங்களான்னு கேட்டுட்டேன். அவருக்கு செம கோபம் வந்துடுச்சி. என்னால தான் ஊர் உலகத்துல மழைப் பெய்யலன்னு, க்ளோபல் வார்மிங்குக்கு நான் தான் காரணமுங்கிற மாதிரி திட்டிட்டு போயிட்டார். கப்பூரார கொன்னது அவர் மனைவின்னு ஃபோன்ல கேசவ் சொன்னான். ஆனா ஊர்க்காரங்க அவங்க ஊர்ப் பேய் தான் கொன்னுச்சுன்னு நம்புறாங்க.

கேசவ் முகத்த பார்க்கவே சகிக்கல. பாவம் நாங்கலாம் இல்லாம தனியா ரொம்பவே துடிச்சுப் போயிட்டான். மரணங்கிற தோல்விய மனுஷனால் அவ்ளோ சுலபமா ஒத்துக்க முடில. எனக்கு லீவ் கிடைக்காததால் கப்பூராரோட இறுதிச் சடங்கிற்கு வர முடியாமல் போயிடுச்சு. அவர் முகத்த கடைசியா பார்க்க கொடுத்து வைக்கல. முன்னவே ப்ளான் பண்ண மாதிரி நேரா நிச்சயதார்த்த தேதிக்கு தான் வர முடிஞ்சது. ஆனா நிச்சயதார்த்தத்தை நிறுத்த பார்த்தாங்க. என்னால இன்னொரு நாளுலாம் லீவ் போட முடியாது. அடுத்து இவன் கல்யாணத்திற்கு தான் போடணும்னு நினைச்சிருக்கேன். நிறைய தடங்கல் வரும்.. நின்னுச்சுன்னா அப்புறம் ரெண்டு வருஷத்துக்கு திரும்ப கல்யாணம் நடக்காதுன்னு ஜோசியக்காரர் சொன்னது ஞாபகம் வந்துச்சு. அத கேசவ் அப்பாக்கிட்ட சொல்லி.. சும்மா சாதாரணமா நிச்சயம் பண்ணிக்குங்க என்று கெஞ்சிக் கூத்தாடி சம்மதிக்க வச்சுட்டேன். கேசவுக்கு தான் சுத்தமா என் யோசன பிடிக்கவே இல்ல. என்னப் பண்ண.. இயந்திர உலகத்துல இந்த மாதிரி சின்ன சின்ன சமாதானம் தேவப்படுதே!! மேலும் கப்பூரார் அவங்களுக்கு இரத்த சம்மந்த உறவும் இல்ல. கொஞ்சம் இரக்கமில்லாத மாதிரி தான் நடந்துக்கிறேன் போல. என்னப் பண்ண? எனக்கும் தான் கப்பூரார ரொம்ப பிடிக்கும். ஆனா இப்ப இருக்கிறவங்கள பத்தி தான் எனக்கு கவலை. இறந்தவங்கள பத்தி இல்ல.

ரம்யாவும் என்னை மாதிரி இறந்தவங்கள பத்தி கவலைப்படாம இருந்திருந்தா எவ்ளோ நல்லா இருந்திருக்கும். மனசு வேகமா தேவையில்லாததை தான் கெட்டியா பிடிச்சுக்குது. நானும் ரம்யாவும் காலேஜ் ஃபர்ஸ்ட் இயர்ல இருந்தே லவ் பண்ணோம். ஃபைனல் இயர் வரைக்கும் கேசவ்க்கு கூட சொல்லல. சொல்லக் கூடாதுன்னு இல்ல. அதென்னமோ ஒரு தயக்கம். அவனுக்கு தெரிஞ்சதும்.. என்னைய சரியான கல்லுளி மங்கன்னு திட்டிட்டு இருந்தான். ரம்யாவும் அவ ப்ரென்ட்ஸ் யாருகிட்டயும் சொல்லல. அவ ப்ரென்ட் மாலதிக்கு என் மேல லவ்வாம். எங்க விஷயம் தெரிஞ்சதும், ‘என்னை ஏமாத்திட்ட இல்ல. நீ நாசமா போயிடுவ’ன்னு ரம்யாகிட்ட சொல்லிட்டு ஹாஸ்டல் மாடில இருந்து விழுந்து தொலைச்சிட்டா. பாவம் ரம்யா ரொம்ப பயந்துட்டா. இந்தப் பயம் தான் மனுஷன என்ன பாடு படுத்துது?

கல்யாணம் ஆகி நாலு வருஷம் நல்லா தான் போச்சு. நாங்க காலேஜ் முடிஞ்சதுமே கல்யாணம் பண்ணிக்கிட்டோம். மொட்ட மாடில துணி காயப் போடுறப்ப யாரோ ரம்யாவ இடிச்ச மாதிரி இருந்துச்சாம். அன்னிக்கு நைட்ல இருந்து ஆரம்பிச்சது வினை. மாலதி என்னை வாழ விட மாட்டா.. பழி வாங்க வந்துட்டான்னு ஒரே கூச்சல். நான் யாருகிட்டயும் சொல்லல. சொன்னா பேய் பிடிச்சிடுச்சுன்னு பிரச்சனைய பெருசாக்கிடுவாங்க. ரம்யாக்கு அவ்ளோட பயத்த புரிய வச்சு.. சைக்காட்ரிஸ்ட் கிட்ட கூட்டிட்டுப் போனேன். ‘டெலுஷன்’ தான் காரணம்னு சொல்லிட்டாரு. ரம்யா மத்தவங்க மாதிரி இல்லாம ஒழுங்கா ட்ரீட்மென்ட்டுக்கு கோ-ஆப்ரேட் பண்ணா. இருந்தாலும் அதுக்கு அப்புறம் மொட்ட மாடிக்கு போறத நிறுத்திட்டா. தற்கொல மாதிரி நியூஸ்லாம் முடிஞ்ச வரைக்கும் அவளுக்கு தெரியாத மாதிரி பாத்துக்க ட்ரைப் பண்றேன். இப்ப எந்தப் பிரச்சனை இல்லன்னாலும்.. ரிலாப்ஸ் ஆகாம இருக்க மெடிகேஷன் கன்ட்டினியூ பண்றோம். கப்பூரார் கிட்டயும் சொல்லிப் பார்த்தேன். அவர் கேட்கல.

எங்க பெரியப்பாவும் இப்படித் தான் பயந்து பயந்தே கடைசியா செத்தாரு. வயலுக்கு காவல் போனவர முனி தாத்தா ரூபத்தில் வந்து நைசா பேசி கிணத்துக்குள்ள தள்ளிருச்சாம். முனி நினைச்ச உருவத்தை எடுக்குமாம். அதுக்கு கால் இருக்காது. நைட்ல அதெல்லாம் எங்க பார்க்குறது. தாத்தா மாதிரியே பேச்சு கொடுத்துக்கிட்டே வந்து கிணறுகிட்ட வந்ததாம் வேலையைக் காட்டிடுச்சாம். அதுக்கு அப்புறம் அவர் வயல் பக்கம் போகவே இல்ல. முனிய எப்படியாச்சும் பார்த்துடனும்னு நானும் சித்தப்பா கூட பல தடவ வயலுக்கு சின்ன வயசுல போயிருக்கேன். ம்ம்.. கண்ல சிக்கவே இல்ல. இருந்தா தான சிக்கும்.

சம்பிரதாயமா நிச்சயதார்த்தத்த அமைதியா முடிச்சுக்கிட்டாங்க. கேசவ் கடைசி வரைக்கும் பொண்ண நிமுந்து பாக்கவே இல்ல. குற்றவுணர்வோட தான் இதுவரைக்கும் இருக்கான். என்ன சொன்னாலும் அவன் முகத்த விளக்கெண்ண குடிச்ச மாதிரியே தான் வச்சிருந்தான். நாளைக்கு ஊருக்குப் போறோம். ஊருக்குப் போறதுக்கு முன்னாடி அந்த மரத்துல பேய், பிசாசு இல்லன்னு எப்படியாவது நிரூபிக்கணும்னு தோணுச்சு. அந்த மரம் அவர் மனைவி இறந்த மரத்த ஞாபகப்படுத்தி இருக்கும். அவருக்கு அவர் மனைவி ஞாபகம் வர்றப்பலாம் அவங்களோட தாலிய பார்த்துட்டிருப்பாரு. சாகுற அன்னிக்கும் அவர் கையில் அவங்க தாலிய இறுக பிடிச்சிக்கிட்டு இருந்தாராம். பொதுவா மனுஷனுக்கு வேதனைய மேலும் கிளறி விட்டு அழறதுக்கு ரொம்ப பிடிக்கும். அப்படித் தான் கப்பூராரும் அந்த மரத்தைப் பார்த்து, பழசலாம் நினைச்சு நினைச்சு அழுது இருக்கணும். அவர் மனசு ஃபுல்லா துக்கம்.. அதனால் ஸ்ட்ரோக் வந்துட்டிருக்கும். காக்கா பனம்பழம் கதை மாதிரி அதுக்கு பேய் தான் காரணம்னு கதை விட்டுட்டாங்க.

எல்லாம் தூங்கின பிறகு நைட் பதினொன்ற கிட்ட எழுந்து அந்த மரம் இருக்கிற பக்கமா மெதுவா நடந்தேன். ஸ்கூல் படிக்கிறப்ப இந்த மாதிரி நைட்ல வயலுல நடந்திருக்கேன். எங்க ஊர விட மரங்க அடர்த்தியா வளந்து, அதிக இருட்டா எப்படியும் என்னப் பயமுறுத்திப் பார்க்கணுங்கிற மாதிரியே இருந்துச்சு. என்னமோ சில்வண்டு மட்டும் ஜாலியா கத்திக்கிட்டே இருக்கு. டெயில் கத்துது. அதுக்கெல்லாம் ஒரே வேலைய செய்ய போரே அடிக்காது போல. மரத்துக்கு கீழயே வந்துட்டேன். எவ்ளோ அழகான மரம். பாவிங்க பேய் மரம்னு சொல்லிட்டாங்களே. கிட்டத்தட்ட பேயோட நேரமான பன்னண்டு ஆயிடுச்சு. நின்னு நின்னு பார்த்தேன். பேய் வரல. விடிய சுமார் அஞ்சு மணி நேரத்துக்கு மேல இருக்கு. உட்காந்த பேய் வரமாட்டன்னா சொல்லுச்சுன்னு உட்காந்துட்டேன். லைட்டா தூக்கம் வந்துச்சு. தூக்கம் வராம இருக்க பாட ஆரம்பிச்சேன். எங்க என் குரல் கேட்டு பேய் பயந்துடுமோன்னு மெதுவா பாடினேன். பேய் பயப்படுதோ இல்லையோ.. இந்தப் பக்கம் போற யாராச்சும் கேட்டுட்டு பேய் ஏ.ஆர். ரகுமான் பாட்ட ஆம்பளக் குரல்ல பாடுதுன்னு நாளைக்கு கதை கிளப்பாம இருக்கணுமேன்னு மெதுவா பாடிக்கிட்டே மரத்தடியில் சாஞ்சு உக்காந்தேன். அப்படியே தூங்கிட்டு இருப்பேன் போல. எங்கயோ கொலுசு சத்தம் கேட்கிற மாதிரி இருந்துச்சு. டக்குன்னு முழிச்சு பார்த்தா..

 கொலுசு சத்தம் என் பக்கம் வேகமா வந்துச்சு. இருளுக்கு கண்ணைப் பழக்கி பார்க்கும் முன் ஏதோ உருவம் எனக்கு ரொம்ப பக்கத்துல வந்துடுச்சுங்கிறத உணர முடிஞ்சது. கார்த்திக் இப்ப நீ பயப்படக் கூடாது. என்னப் பண்ணலாம்னு யோசிக்கும் முன்.. காதுல யாரோ பலமா அடிச்

 கொயிங்ங்ங்ங்..

கடவுளே இது ரம்யாக்கு தெரியக் கூடாது. மாலதி மேல இருக்கிற பயம் அதிகமாகி தற்கொல பண்ணாலும் பண்ணிக்குவா.

தொடரும்..

– தமிழ் ப்ரியா

Leave a Reply