Shadow

இதே ஊர்தான்டா..!

மெட்ராஸ் விமர்சனம்

ஒரு சுவரை ஆக்கிரமிக்க இரண்டு கட்சிகளுக்குள் நடக்கும் போட்டிதான் கதையின் மைய இழை.

ஆனால் அது மட்டுமே கதை அல்ல. சுவரில் வரையப்படும் படமும் அதன் மூலம் கட்சியின் பெயரும் அதிகாரமும் அங்கேயே நிலை பெற செய்ய என்னென்ன அரசியல் நடக்கிறது அதில் எளிய மக்களின் நம்பிக்கைகள் எப்படிப் பயன்படுத்தப் படுகின்றன என்பதை விலாவாரியாகப் பேசுகிறது மெட்ராஸ் படம். அது வெறும் சுவர் இல்ல.. அதிகாரம்.

காளியும் அவன் நண்பன் அன்பும் மைய கதாபாத்திரங்கள். அன்பு நடுவிலே கொலை செய்யப்படுவதால் காளியை கதாநாயகனாக கொள்ளவேண்டி இருக்கிறது. இரண்டு நாயகன்கள் போலவே இரண்டு நாயகிகளுக்கும் சமமான பாத்திரங்கள். காதல்? படத்தில் காதல் இருக்கிறது. வாழ்க்கையில் வருவது போல. இப்ப தான் அப்பா அம்மாக்கு முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார் என்று குழந்தை சாதாரணமாக சொல்லுமளவுக்கு இயல்பாக வருகிறது. ஆனால் படத்தைக் கொண்டு செல்வது காதல் அல்ல. காளி படித்த, நல்ல வேலையில் இருக்கும் ஒரு கோபக்கார நடுத்தர வர்கத்துப் பையன். கல்வியறிவு இருப்பினும் தெளிவான அரசியல் பார்வை இல்லை. நேர்மாறாக அன்பு தெளிவான அரசியல் பார்வை இருந்தும் கட்சி அரசியல் மற்றும் கல்வியறிவு இன்மை காரணமாகத்தான் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள அக்கறை இல்லாதவனாக இருக்கிறான். சுவரை ‘மீட்க’ அன்பு போடும் சண்டைகளால் ஏற்படும் பிரச்சினையில் அவன் கொலை செய்யப்படுகிறான். அன்பு மீது வைத்திருக்கும் அன்பு, காளியை அரசியலுக்கு இழுக்கிறது.

அரசியல் படங்கள் எடுக்கப் படாமல் இருக்க அதிகார பலம், மிரட்டல், விரட்டல், ஜேப்படி, வழிப்பறி என்று பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதற்கு விருப்பமின்மையே முதல் காரணம் என்று இப்படம் நிரூபிக்கிறது. சென்னை வாழ்க்கை என்றாலே தென் சென்னையின் சாஃப்ட்வேர் வாழ்க்கையையும், ECR கார்களையும், பீச் ரிசார்ட்டுகளையும் தாங்கி வரும் படங்களில், இதுவும் நீங்கள் குறிப்பிடும் “அதே ஊர் தான்டா” என்று சொல்கிறது இந்தப் படம். ‘ரத்தமும் சதையுமாக’ படம் எடுக்க மதுரை பக்கம் போய் வெள்ளை வேட்டி கட்டி கூலிங் கிளாஸ் போட்டவன் சாதி பார்த்து வெட்டுறதை மட்டும் காட்டி பெருமைப்பட தேவை இல்லை என்றும் சொல்கிறது. நகரத்து சேரிகளில் பெரிய அளவில் சாதி வன்முறை நடக்காவிட்டாலும் அரசியல் காரணங்களுக்காக எளிய மக்கள் வேட்டையாடப்படுவதைத் தோலுரிக்கிறது. வாழ்க்கைத் தரம் உயராமல் இருக்க பணம் இல்லாதது காரணம் இல்லை என்று முகத்துக்கு நேராகச் சொல்கிறது. வடச் சென்னை எப்படி இருக்கும் என்பது பற்றி அறியாதவர்களுக்கு அம்மக்களின் வாழ்வை கண் முன் நிறுத்துகிறது. ஹவுஸிங் போர்டு குடியிருப்புகளில் வாழ்ந்த/வாழ்கிறவர்களுக்கு இது இன்னும் மனதுக்கு நெருக்கமான படமாக அமையும்.

அது எந்தக் கட்சியாக இருந்தாலும் மேலிடங்கள் தங்களுக்குள் ‘அனுசரணையாக’ தான் இருக்கின்றன. அடித்துக்கொண்டு சாவது என்னவோ அடிமட்ட தொண்டர்கள் தான். தன் நண்பன் கொலை செய்யப்படுவது எதிர்க்கட்சியால் அல்ல, சொந்த தலைவனால் என்று அறியும் வேளையில் ஒரு பழிவாங்கும் படலத்தில் இறங்கி கொலைவெறியுடன் தாண்டவம் ஆடியிருந்தால், அது பாலா படம் போல சாதாரண பழிவாங்கல் படமாக முடிந்திருக்கும். தலைவனின் உயிரை எடுத்து வெறியை தற்காலிகமாக தணித்துக்கொள்வதை விட அவர்களிடமிருந்து அதிகாரத்தை கைப்பற்றுவதும் அவர்களின் நிஜ முகத்தை மக்களுக்குக் காட்டுவதும் முக்கியம் என்கிறது இப்படம். சற்றே மன நிலை பிறழ்வு இருந்தால் தான் நாம் சமூகத்தில் உண்மையை அதன் நிறம் மாறாமல் பேச முடியும் என்பதை ஜானி உணர்த்துகிறார்.

இயக்குநர் ரஞ்சித்இதுவரை எந்தப் படமும் அம்பேத்கரை இந்த அளவு நேர்மையுடன் காட்டியது இல்லை. அதுவும் கிளைமேக்ஸ் என்று சொல்லப்படும் இறுதிக்காட்சியில் அம்பேத்காரிடமிருந்து பெறப்படும் அரசியல் மற்றும் சமூக அறிவுடன் கூடிய கல்வி தான் நமது இன்றைய தேவை என்பதை வலியுறுத்துகிறது. இரட்டைமலை சீனிவாசனின் வசனங்கள் இறுதியில் அச்சுவரில் இடம்பெறுகின்றன.

வெற்று வேட்டு வசனங்களை வைத்து ‘அரசியல்’ செய்யும் பெரிய ஹீரோக்கள் அரசியல் என்றால் என்ன என்று கற்றுக்கொள்ள இப்படம் உதவும். ஆனா அவங்களுக்கு புரியுமா என்பது தெரியவில்லை. தமிழ்நாட்டின் வரலாறு இதுவரை கண்டிராத அரசியல் படம். ஒவ்வொருவரும் தவற விடக்கூடாத படம். அம்பேத்கரையும் இரட்டைமலையாரையும் முன்னிறுத்த இதுவரை தமிழ் கூறும் நல்லுலகில் எந்த இயக்குநருக்கும் இல்லாத துணிச்சலுக்காகவே இத்திரைப்படத்தை இயக்கிய ரஞ்சித்துக்கு பாராட்டு மட்டுமல்ல நன்றியும் கூற வேண்டும்.

இதைத் தவிர்த்து முதல் பாதி ஸ்லோ, இரண்டாம் பாதி பட்டையைக் கிளப்புகிறது. பின்னணி இசை பரவாயில்லை என்று கூறி இப்படத்தை பத்தோடு பதினொன்றாக சேர்க்க எனக்கு விருப்பம் இல்லை.

– பாரதி