Shadow

ஈட்டி விமர்சனம்

ஈட்டி விமர்சனம்

தனது பலவீனத்தை, முறையான பயிற்சியின் மூலமாக எதிர்கொண்டு விருப்பப்பட்ட துறையில் புகழ் சாதிக்கிறானா இல்லையா என்பது தான் கதை.

புகழாக அதர்வா. குறி தப்பாது காற்றைக் கிழித்துக் கொண்டு செல்லும் ஈட்டி போல் அவரது உடம்பு கச்சிதமாக உள்ளது. நாயகன் என்பதால் வென்று விடுவான் என்ற சினிமாத்தனத்தை மீறி, இந்த முயற்சிக்கு வெல்லாமல் எப்படி என்ற உணர்வைத் தருவது தான் அதர்வாவின் வெற்றி. வசன உச்சரிப்பின் போது, கடைசி வார்த்தையைக் கத்தரித்தது போல் பேசுவார். இப்படத்தில், அதர்வாவின் அக்குறையும் கலையப்பட்டுள்ளது. கதாபாத்திரத்திற்கு ஏற்ற நாயகனாய் அனைவரையும் கவர்கிறார்.

சிறந்த துணை நடிகராய்த் தன்னை நிரூபித்து வரும் ஆடுகளம் முருகதாஸை அசட்டுத்தனமான நகைச்சுவைகளுக்குப் பயன்படுத்தியுள்ளார் இயக்குநர் ரவி அரசு. காட்சிகளின் நீளத்தை அதிகரிக்கவே அவர் பயன்பட்டுள்ளார். கதையோடு பொருந்தாமல், துருத்திக் கொண்டிருக்கும் சில காட்சிகளைக் கத்திரித்திருந்தால் விறுவிறுப்பு இன்னும் கூடியிருக்கும். வழக்கம் போல் நாயகனின் தந்தையாக வரும் ஜெயப்ரகாஷும், கோச்சாக வரும் ஆடுகளம் நரேனும் தன் பங்கினைச் செறிவாகச் செய்துள்ளனர். எனினும், நாயகனுக்கும் அவர்களுக்கும் இருக்கும் பிணைப்பினை இன்னும் அழுத்தமாகச் சித்தரித்திருக்கலாம்.

கேட்டுக் கேள்வியின்றி ஓடோடி நாயகனின் மொபைலுக்கு ரீசார்ஜ் செய்து விடும் லூசுப் பெண்ணாக ஸ்ரீதிவ்யா. மிஸ்டு கால் அழைப்பால் தொடங்கும் நாயகன் நாயகி பழக்கம், காதலாகப் பரிணமித்த பின், ஸ்ரீதிவ்யா நார்மலாகி ஈர்க்கிறார்.

ஸ்ரீதிவ்யாவின் அண்ணனாக களவாணி படத்து வில்லன் திருமுருகன் நடித்துள்ளார். எல்லா விஷயத்திலும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டுமென நினைக்கும் ஒருவருக்கு வீட்டிலேயே மதிப்பு இருக்காது என்பதை இந்தக் கதாபாத்திரத்தின் மூலம் அழகாகச் சித்தரித்துள்ளனர். சாலையில் நின்று கொண்டிருக்கும் அதர்வாவை வீட்டுக்கு அழைக்கும் காட்சியில், நாயகியின் அண்ணன் என்ற மனத்தடையையும் மீறி அவரைப் பிடிக்கத் தொடங்கி விடுகிறது. 😉

பிரமாதப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் சரவணன் அபிமன்யு. ஓடுகளத்தில் எடுக்கப்பட்டுள்ள காட்சிகள் எல்லாம் அட்டகாசமாய் உள்ளது. நம் கவனத்தை இழுத்து நிறுத்தி, ஆடாமல் அசையாமல் உட்கார வைத்து விடுகிறது. ஒரு காட்சியில் இருந்து அடுத்த காட்சிக்கு மாறும் பொழுதெல்லாம், ஒரு அழகான தொடர்பை இழைய விட்டுள்ளார் இயக்குநர். அந்தத் தொடர்பை அழகாகக் கொண்டு வந்துள்ளார் படத்தொகுப்பாளர் ராஜா மொஹமத்.

இயக்குநர் ரவி அரசு எறிந்திருக்கும் ஈட்டி தன் இலக்கை எட்டி விட்டது.