அஜித்தும், கெளதம் வாசுதேவ் மேனனும் இணைகிறார்கள் என்றால் ரசிகர்களின் எதிர்பார்ப்பினைக் கேட்கவும் வேண்டுமா?
காதலியின் மரணம் சத்யதேவ் ஐ.பி.எஸ்.-ஐ மிகவும் பாதிக்கிறது. அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதுதான் கதை.
அஜித்தின் முகத்தையும், நடையையும் எந்தக் கோணத்தில் காட்டினால் திரையில் நன்றாக இருக்குமென்ற புரிதல், அவரை வைத்து இயக்கும் இயக்குநர்களுக்கு வந்துவிட்டதெனத் தெரிகிறது. எல்லாம் வெங்கட் பிரபு வகுத்துக் கொடுத்த பாதை. மங்காத்தாக்கு பின்னான அஜித் திரையில் அங்குமிங்கும் நடந்தாலே போதுமென்பது கதையற்ற வீரம் படத்தின் திரையரங்கக் கொண்டாட்டத்தில் நிரூபணமாகிவிட்டது. சாதாரணமாகவே தன் படத்தில் நடிக்கும் நாயகர்களை பளிச்சென மாற்றிவிடுவார் கெளதம். அஜித் கிடைத்தால்? மீசையை கச்சிதமாக வெட்டியிருக்கும் இளமையான அஜித், தாடி வைத்த அஜித், தலை நரைத்த அஜித் என விதவிதமாய் அஜித்தை அழகாக திரையில் காட்டியுள்ளார். காக்க காக்க, வேட்டையாடு விளையாடு தொடர்ந்து மீண்டும் ஒரு கச்சிதமான காப் த்ரில்லர் படத்தை அஜித் கொண்டு கொடுத்துள்ளார் கெளதம்.
கெளதம் தான் நம்பும் அனைத்து மாயத்தையும் இப்படத்திலும் அப்படியே உபயோகித்துள்ளார். வாய்ஸ் – ஓவரில் திரைக்கதையைச் செலுத்துவது, பட்டும் படாத மனமுதிர்வான காதல், உச்சஸ்தாயில் பேசும் வில்லன் ஆகியவை இப்படத்திலும் உண்டு. வசனங்கள் பல இடங்களில் ஈர்த்தாலும், அனைத்துப் பாத்திரங்களுமே தனித்துவம் ஏதுமின்றி ஒரே மாதிரியாகப் பேசுகிறார்கள். ‘சத்தியமா’ என்ற சொல்லை விவேக் தவிர மற்ற பிரதான கதாபாத்திரங்கள் அனைவருமே உபயோகிக்கின்றனர்.
“சத்தியமா மைக் இல்லை” – அஜித்
“அன்னைக்கு குழந்தை நல்ல விதமா பிறந்ததக்கு சத்தியமா நான் காரணமில்ல” – த்ரிஷா
“சத்தியமா நமக்கு வேற குழந்தைங்க வேணாம்” – அஜித்
“சத்தியமா என்னை அங்க இறக்கி விட்டுடுங்க” – அனுஷ்கா
“உனக்கும் உன் சின்னப் பொண்ணுக்கும் விபரீதம் ஆகிடும். எனக்கு சத்தியமா இல்லை” – அருண் விஜய்
“ஹேமானிக்காவை எப்படிச் சாகடிச்சேன்னு சொல்லு. அதுக்கப்புறம் ரெண்டு நிமிஷத்தில் முடிச்சிடலாம். சத்தியமா..” – அஜித்
என்ற ரீதியில் சத்தியத்திற்கு அதிகப்படி அழுத்தம் தந்துள்ளனர் வசனங்களில். இது ஏதாச்சும் குறியீடாக இருக்குமோ என்ற சந்தேகம் வந்த பின்தான் படம் முழுமையாகப் புரியத் தொடங்கியது. நாயகனின் பெயரே சத்யதேவ் என்பதை நினைவுகூர்க!
படத்தின் அடிநாதமே சத்தியத்தையும் தர்மத்தையும் நிலைநாட்டுவதுதான். இந்த ஒட்டுமொத்த படமுமே கீதா உபதேசத்தின் ஒரு சுருக்கமாகப் படுகிறது. சத்யதேவான அஜித் தான் அர்ஜூனன்; அவரது தந்தையாக வரும் நாசர் தான் கிருஷ்ணன். அஜித் தன்னை அறிய பயணம் அவசியமென உபதேசிக்கிறார் நாசர். அர்ஜூணனும் போருக்கு முன்னே தெற்கே ஷேத்ராடணம் கிளம்புவார்; இங்கே அஜித் வடக்கே போகிறார். படத்தின் முடிவில், கெட்டவன் அழிந்து உலகம் சமநிலை அடைந்ததென பாஞ்சஜன்ய முழக்கமும் கூட உண்டு.
கூச்ச உணர்வேயின்றி, என்கவுன்ட்டர் என்பது திரைப்படங்களில் ஹீரோயிஸமாகச் சித்தரிக்கப்பட்டு பல காலங்கள் ஆகிறது. தர்மத்தின் பொருட்டு சில பல உயிர்கள் காவு வாங்கப்பட்டால் பரவாயில்லை என்பது ஆதி காலத்தில் இருந்து வெவ்வேறு வகையில் வலியுறுத்தப்பட்டுக் கொண்டே வருகிறது. அதை இந்தப் படமும் செவ்வனே செய்கிறது.
விவாகரத்துப் பெற்ற பெண்ணின் ஒழுக்கம் இங்கே சந்தேகிக்கப்படுகிறது. விவாகரத்தையும், மறு விவாகத்தையும் சமூகம் இன்னும் குற்றவுணர்வோடே அணுகுகிறது. தமிழ்ப் படங்களில் அப்படி ஏதேனும் நாயகிக்கு மறு விவாகம் நடந்தால், தமிழ்ப் பட நாயகன் புரியும் உச்சபட்ச தியாகமாக அது சித்தரிக்கப்படும். ஆனால் கெளதம் அதை இயல்பான ஒரு நிகழ்வாய் மீண்டும் ஒருமுறை திரையில் காட்டியுள்ளார். சில மாயங்களை கெளதம் மீண்டும் மீண்டும் நிகழ்த்துவதில் தவறில்லை என்றே தோன்றுகிறது.
‘உலகத்திலே ரொம்ப அழகான ஆண்’ என அஜித்தை ரசிக்கும் அனுஷ்காவை விட, ‘இப்படி ஸ்மார்ட் ஆயிட்டே போனா நாங்கலாம் என்னப் பண்றது?’ என அஜித்தைக் கேட்கும் ஆறு வயது பெண்ணின் தாயாக நடித்திருக்கும் த்ரிஷா அதிகமாகக் கவர்கிறார். தமிழ்ப் படங்களின் விடலைத்தனமான நாயகன் நாயகிகள் இப்படியே கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமல் போனால் நன்றாகயிருக்கும். அருண் விஜயும் பார்வதி நாயரும், தாங்கள் அருமையான கதாபாத்திரத் தேர்வுகள் என்பதை படத்தில் நிரூபித்துள்ளனர். அஜித்தின் மகளாக நடிக்கும் குட்டிப் பெண் அனிகாவும் கலக்கல்.
என்னை அறிந்தால்… வழக்கமான கெளதம் வாசுதேவின் பாணியில், அஜித்தின் ஸ்டைலிஷான ஹீரோயிசத்துடன் இணைந்து முதல் பாதி நிதானமாகவும், இரண்டாம் பாதி விறுவிறுப்பாகவும் உள்ளது.