Shadow

கடவுளும் கணிப்பொறியும்

‘தேவனாகிய கர்த்தர் மனுஷனை பூமியின் மண்ணாலே(!?) உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார். மனிதன் ஜீவாத்துமாவானான்.’

‘கடவுள் மனிதனை மண்ணில் இருந்து தான் படைத்தாரா? சரி.. கடவுள் தான் மனிதனைப் படைத்தாரா?’ இது போன்று சிக்கலான கேள்வியை எல்லாம் தொல்லியல் துறையினரிடம்  விட்டு விடுவோம். ஆனால் மனிதன் தன் சொந்த முயற்சியிலும், கடின உழைப்பிலும் இன்று உலகில் அனைவருக்கும் பயனை அள்ளித் தரும் கணிப்பொறியை மண்ணில் இருந்து தான் உருவாக்கி இருக்கிறான். சுமேரியர்கள் காலத்திலேயே இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பே கணிப்பொறியை உருவாக்கினார்கள். இன்றைய எலக்ட்ரானிக் கணிப்பொறியின் வளர்ச்சியை, சார்லஸ் டார்வினின்  பரிணாமக் கொள்கையினோடு ஒப்பிட்டு சொல்லலாம். அதாவது எப்படி உயிரினங்களின் தோற்றம் படிப்படியாக ஒரு செல் உயிரில் இருந்து ஊர்வன, பறப்பன என தொடங்கியதோ, அதே போல் சிலிக்கா எனும் மண்ணில் இருந்து டயோடு, டயோடு டிரான்ஸ்ஸிஸ்ட்டராகி, ட்ரான்ஸ்சிஸ்டர் இன்ட்டக்ரேட்டட் சர்க்யூட்களாக மாறி, இன்ட்டக்ரேட்டட் சர்க்யூட்டுகள் மைக்ரோ ப்ராஸசர்களாகி, இப்ப கணிப்பொறியாக உருவெடுத்து நிற்கின்றன.

உடலும் உயிரும் இணைந்து மனிதனின் இயக்கத்திற்கு உதவுவது போல, கணினியில் மென்பொருள் மற்றும் வன்பொருள் இணைந்து அதன் இயக்கத்திற்கு உதவுகிறது. மனிதர்களாகிய நமக்கு மூளையே பிரதானமாக இருந்து, உடல் உறுப்புகளை கட்டுப்படுத்தி தன்னையும் கட்டுப்படுத்திக் கொள்கிறது. அது போல, கணினியில் இயக்கச் செயலியே (ஆப்ரேட்டிங் சிஸ்டம்) பிரதானமாக இருந்து வன்பொருளை (ஹார்டுவேர்) கட்டுப்படுத்தி தன்னையும் கட்டுப்படுத்திக் கொள்கிறது.

பூமியில் பிறக்கும் அனைவருக்கும் சாதி, மத, ஏழை, பணக்காரன் என்ற எந்தப் பாகுபாடுமின்றி ஒரே ஆற்றல் கொண்ட மூளையையே இயற்கை வழங்குகிறது. ஒருவரது தனிப்பட்ட முயற்சியும், சூழ்நிலையும் அவரது சிந்தனையை (அறிவு) உருவாக்குகிறது. இதுவே காந்தப்பனையும், கார்ல் மார்க்ஸையும் பிரிக்கிறது. அதுபோல கணினியில், அடிப்படையில் அனைத்தும் ஒரே ஆற்றல் கொண்டதாகவே உள்ளது. இருப்பினும், பதிவுசெய்யப்படும் நிரலியை (அறிவு எனக்கொள்வோம்) பொருத்து கணினியின் பயன்பாடு வேறுபடுகிறது. இந்த நிரலி எனும் அறிவுதான் தெருமுனையில் இருக்கும் மருந்து கடை கணிணியையும் அவதார் பட கணினியையும் பிரிக்கிறது.

நாம் காலையில் எழுந்து பல் துலக்கும் பற்பசையிலிருந்து, இரவு படுக்கை வரை கணிப்பொறியின் பங்கு இருக்கிறது. இயற்பியல், வேதியியல், கணிதம், மானுடவியல், பொறியியல்,தொழில்நுட்பம், மருந்துவம், தொல்லியல், பொருளாதாரம், வரலாறு, விளையாட்டு என காணும் இடங்களில் எல்லாம் மனிதர்கள் இருப்பது போல் அனைத்து துறைகளிலும் கணிப்பொறி நீக்கமற வியாபித்துள்ளது. கடவுளால் மட்டுமே அப்படி நீக்கமற வியாபிக்க சாத்தியம் என நம்பப்பட்டது. ஆனால் அந்த அழகான கற்பனை கணினி விஷயத்தில் உண்மையாக்கப் பட்டுள்ளது. கடவுளை மறுப்பவர்கள், ஏற்பவர்கள் என இரு பிரிவினர்கள் இருக்கிறார்கள். பல நூற்றாண்டுகளாக இருக்கும் கடவுளாலேயே தன்னை மறுப்பவர்களை ஏற்க செய்ய முடியவில்லை. ஆனால் கணினியை கேட்டு கேள்வியின்றி அனைவரும் ஏற்கின்றனர். இப்படி கடவுளால் முடியாத எத்தனையோ கணினியால் சாத்தியமாகிறது. ஆனால் இன்னும் மனிதன் கடவுள் என்னும் கவர்ச்சியில் இருந்து மீளவே இல்லை.

தலைக்கு விளக்கெண்ணெய் வைத்து சீவியது போன்ற அலங்காரத்தில் இருக்கிறார் ஆசிர்வாதம் டி.வி. ஆலன் பால். கரு கரு முடியுடன் யானை கலர்ல சஃபாரி சகிதம் மேடையில் பேசிக் கொண்டிருந்தார். ஒரு ஆயிரம் பேருக்கு மேல் இருப்பார்கள். அனைவரும் சமூக, பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டு வாழ்வில் எதாவது மாற்றம் வந்துவிடாதா என்று ஏங்குபவர்கள்.  இவர் கடவுளிடம் நம்மை இணைத்து விடுவார் எனவும், வாழ்வியல் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து விடும் என்று நம்பிக் கொண்டு கைகளை உயர்தியபடி அல்லேலுயா சொல்லிக் கொண்டிருந்தார்கள். மக்கள் தம் கண்களை மூடிக்கொண்டு கண்ணீருடனும், முக பாவனைகளை விசித்திரமாக மாற்றிக் கொண்டும், ஏதோ முணுகிக் கொண்டிருந்தனர். நடு நடுவே பிள்ளைகளே கைகளை உயர்த்தி அல்லேலுயா சொல்லுங்க என ஆலன் பால் கட்டளையிட்டார். இப்படி ஒரு வழியாக உபவாசம் உச்சத்தை அடையும் விதமாக காணிக்கை பாடல் பாடப்படுகிறது. தன்னார்வலர்கள் எனும் பேட்ஜுடன் சிலர் பெரிய பெட்டியுடன் கூட்டத்தின் மத்தியில் சென்று பணம் வசூலிக்கின்றனர். பணத்தை காணிக்கை செலுத்துவதன் மூலம் பாவத்தில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளலாம் என நம்ப வைக்கப்பட்டு உள்ளனர். இந்தத் தந்திரம் தான் மத நிறுவனங்களின் வெற்றி. இப்படி ஒவ்வொரு மத நிறுவனமும் தங்களுக்கென பிரத்தியேக வசூல் முறைகளை கொண்டுள்ளது. இந்தத் தருணத்தில் பணம் கொடுத்து பொருள் வாங்கும் வனிகத்தை நினைவு கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

இப்படி, இந்தப் பூமியில் உள்ள அனைத்து மனிதனும் தாயின் கர்ப்பத்தில் இருந்து வெளிவந்தவுடன்  கடவுளின் பெயரில் நடத்தப்படும் ஏதாவது ஒரு நிறுவனத்துக்குள் வலுக்கட்டாயமாக விசையுடன் தள்ளப்படுகிறான். இந்த நிறுவனங்களின் கடவுள் மாறலாம், பெயர் மாறலாம், மொழி மாறலாம், வழக்கு மாறலாம். ஆனால் கொள்கை மாறுவதே கிடையாது. ஆம், தன் உறுப்பினர்களிடம், பல சூப்பர் ஹீரோ கதைகள் பல புனைந்து கடவுளின் பெருமையை தொடர்ந்து சொல்லி கடவுளே மேலானவன் எனும் மாய பிம்பத்தை ஊட்டி இவர்களை அடிமைபடுத்தி வைப்பது. இதன் மூலம் தனிமனித உழைப்பை சிறுமைபடுத்தி உழைப்பின் பலன்களை சுரண்டுவது. இது மட்டுமா நம் டி.வி சீரியல்கள் கதாபாத்திரங்களுக்கிடையே பிரச்சனைகளை பின்னி பார்வையாளர்களை தொடர்ந்து தக்கவைத்து கல்லா கட்டுவது போல, தன் சொந்த உறுப்பினர்களிடையே பிரிவினை வித்துக்களை விதைத்து (வித்துக்கள் பல வடிவில் இருக்கும் சாதியாக, மொழியாக, நிறமாக,தொழிலாக) எப்போதும் ஒருவகை பிரச்சனைகளில் உழல விடுகிறது. அதன் மூலம் அப்பாவி உறுப்பினர்களை தங்கள் உறுப்பினர் அட்டையை ரினிவல் செய்ய வைத்து, நிரந்தர அடிமைகளை அறுவடை செய்கிறார்கள். அப்படி மக்களை அறுவடை செய்து புகழ் பெற்றவர்களே பிரேமானந்தா, நித்தியானந்தா போன்றோர். இவர்களை போல் புகழ் பெறாமல் பலர் அறுவடை செய்து கொண்டே தான் உள்ளனர்.

நிறுவனம் என்று ஒன்று இருந்தால் அதில் பங்குதாரர்கள் இருப்பார்கள் அல்லவா? ஹ்ம்ம்.. ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகளே இது போன்ற நிறுவனங்களின் பங்குதாரர்கள். இவர்களின் பங்குக்கு உருவாக்கி வைத்திருக்கும் சூப்பர் ஹீரோக்களை, போட்டி  நிறுவனத்தின் ஹீரோக்களுடன் மோதவிடுவார்கள். இங்குதான்  திரைக்கதையில் ட்விஸ்ட். ஹீரோக்களை நேரடியாக மோதவிட முடியாது அவர்கள் எல்லாம் கற்பனை பாத்திரம் என்பதால் ரசிகர்களை மோதவிடுவார்கள். இந்த மோதி விளையாடுதலின் மூலம் அவர்கள் பங்குக்கு கல்லாவை நிரப்பிக் கொள்வார்கள். இதை தான் மார்கண்டே கட்ஜு, 90% இந்தியர்கள் முட்டாள்கள் என காட்டமாக விமர்சித்துள்ளார். எப்பொழுது தான் நாம் தன்னறிவு பெற்று இதிலிருந்து எல்லாம் மீள்வோமோ!?

“மனித குலம் படைத்தளித்திருக்கும் கருவூலங்கள் யாவற்றையும் பற்றிய தெளிவான அறிவைப் பெற்று  தன் சிந்தனையை வளமாக்கிக் கொள்பவனே உண்மையான கம்யூனிஸ்ட்”  என்றார் லெனின். கம்யூனிஸ்ட் என்பது கெட்ட வார்த்தையாக சிலருக்கு படலாம். அதை “மனிதன்” என மாற்றிக் கொள்ளுங்கள். மனித குலம் படைத்தளித்திருக்கும் கருவூலங்கள் யாவற்றையும் பற்றிய தெளிவான அறிவைப் பெற்று  தன் சிந்தனையை வளமாக்கிக் கொள்பவனே உண்மையான மனிதன்.

– மணவாளன்

Leave a Reply