(முக்கிய நடிகர்கள்: பி.யு.சின்னப்பா, பி.கண்ணாம்பா, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், டி.பாலசுப்ரமணியம், யு.ஆர்.ஜீவரத்தினம்)
ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பான ‘கண்ணகி’ 1942 இன் ஆகப் பெரிய வெற்றிச் சித்திரம்.
ஜூபிடர் பிக்சர்ஸ் அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமாக விளங்கிய சிறந்த படத்தயாரிப்பு நிலையங்களில் ஒன்று. இந்த நிறுவனத்தின் முந்தைய படங்கள் ‘சந்திரகாந்தா (1936)’, மற்றும் எழுத்தாளர் வை.மு.கோதைநாயகி அம்மாளின் கதையான ‘அனாதைப்பெண் (1938)’. இப்படங்களைத் தொடர்ந்து வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த படம் ‘கண்ணகி’.
சிலப்பதிகாரம் தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று. தமிழ் மொழிக்கு இக்காப்பியத்தின் வாயிலாகப் பெருமையைச் சேர்ந்தவர் இளங்கோவடிகள்.
சிலப்பதிகாரப் பாத்திரங்களான கோவலன், கண்ணகி, மாதவி போன்றோர் பின்னிப் பிணைந்த மகத்தான கதையம்சம் கொண்ட ‘கண்ணகி’ கதையை ஜூபிடரின் கண்ணகி வெளிவருவதற்கு முன்பே தயாரித்து வெளியிட்டவர்களும் உண்டு. ‘கோவலன்’ என்கிற பெயரில் 1933இலும் இதே பெயரில் 1934இல் ராயல் டாக்கீஸ் தயாரிப்பாகவும் வெளிவந்திருக்கிறது.
ஆனால் அவைகள் பெறாத வெற்றி, ஜூபிடரின் கண்ணகிக்குக் கிடைத்ததற்கு முக்கிய காரணம் சிலப்பதிகாரத்திற்கு இளங்கோவடிகள் கிடைத்தது போல் இக்‘கண்ணகி’ திரைப்படத்திற்கு வசனம் எழுத ஓர் இலக்கியவாதி எழுத்தாளர் இளங்கோவன் என்பவர் கிடைத்தது தான். இந்த இளங்கோவன் ‘தினமணி’ பத்திரிகையிலும், இலக்கிய இதழ் ‘மணிக்கொடி’யிலும் பணி புரிந்து சிறப்பான இலக்கிய அனுபவம் பெற்றவர். இவரது கண்ணகியில் தமிழ் பேசியது.
சிலப்பதிகாரக் கதை அனேகமாக அனைத்துத் தமிழ் மக்களும் அறிந்த ஒன்று என்கிற காரணத்தினால் கதை இங்கே விவரிக்கப்படவில்லை.
எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த ‘அம்பிகாபதி (1937)’, ‘அசோக்குமார் (1941)’, ‘கதம்பம் (1941)’ போன்ற படங்களுக்கு முன்பே வசனம் எழுதியிருந்த இளங்கோவன் ‘கண்ணகி’ படத்திற்கு வசனம் எழுதியதன் மூலம் ஒரு நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றார். இவருக்குப் பின்னால் வந்த வசனகர்த்தாக்களுக்கு ஒரு முகவரி தேடிக் கொடுத்த பெருமை இந்த இளங்கோவனையே சாரும்.
‘பசுப லேட்டி கண்ணாம்பா’. இவர் தெலுங்கு மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட ஒரு தெலுங்கு நடிகை. ஆனால் எந்தத் தமிழ் நடிகையும் பேசி நடிக்க முடியாத அளவிற்கு தமிழ் மொழியைத் தவறில்லாமலும், நேர்த்தியாகவும் பேசி நடித்தவர். நீண்ட, நெடிய வசனங்களெல்லாம் இவருக்கு ஒரு பொருட்டே அல்ல. அதே சமயம் நடிப்பிலும் கை தேர்ந்தவர். இப்படத்தில் இவர் தான் கண்ணகி.
கோவலனாக நடித்தவர் பி.யு.சின்னப்பா. இவர் இக்கால கட்டங்களில் பாடுவதுடன், துடிப்பாக நடிக்கவும் தெரிந்த ஒரே நடிகராக அறியப்பட்டிருந்தார். இவர் நடித்திருந்த ‘உத்தமபுத்திரன்’ (2 வேடங்கள்), ‘ஆர்யமாலா’ போன்ற திரைப்படங்களின் வெற்றியில், புகழின் உச்சியில் இருந்த காலகட்டத்தில், இளங்கோவனின் வசனமும், அதற்கு இணையாகச் சில அற்புதமான பாடல்களும், பி.கண்ணாம்பாவின் நடிப்பும் இப்படத்திற்கு மேலும் அதிகப்புகழைச் சேர்த்தன.
இப்படத்தின் வெற்றிக்கு மற்றுமொரு சிறப்பான காரணம் இதன் பாடல்கள். இசையமைத்திருந்தவர் எஸ்.வி.வெங்கட்ராமன். இவர் ஆரம்ப காலத்தில் திரைப்படங்களில் நடிக்க முயற்சி செய்திருந்தாலும், ஏவி.மெய்யப்பச் செட்டியார் தயாரித்து 1938இல் வெளிவந்த ‘நந்தகுமார்’ எனும் படத்தின் வாயிலாக முழு நேர இசையமைப்பாளராக உருவானார். நடிகர் டி.ஆர்.மகாலிங்கம் இப்படத்தின் வாயிலாகத்தான் திரையுலகிற்கு அறிமுகமானார். 1935இல் வெளிவந்த ‘நளதமயந்தி’ படத்தில் இவர் நடித்ததோடு, இசையமைக்கவும் செய்தார் என்கிற பதிவும் இருக்கிறது.
‘கண்ணகி’ படத்தில் எஸ்.வி.வெங்கட்ராமனின் இசையமைப்பில் அனேகமாக அனைத்துப் பாடல்களுமே மாபெரும் வெற்றியை ஈட்டின. கதையுடன் ‘கண்ணகி’யை ஒரு சிறந்த இசைச்சித்திரமாகவும் பரிமளிக்கச் செய்தார்.
‘அன்பில் விளைந்த அமுதமே,
அன்னமே என் கண்ணகி’
‘சந்திரோதயம் இதிலே காணுவது
செந்தாமரை முகமே – ஆனந்த’
‘பத்தினியே உன் போல்
இத்தரை மீது உற்றவர்
யார் புகல்வார் – தர்ம பத்தினியே’
‘மானமெலாம் போன பின்னே
வாழ்வது தான் ஒரு வாழ்வா?’
‘தேவமகள் இவள் யார்
இவள் யாரோ’
போன்ற பாடல்கள் அடைந்த பிரபலத்திற்குக் கணக்கே கிடையாது! இப்பாடல்களை முணுமுணுக்காதவர்கள் அக்காலத்தில் எவருமே கிடையாது என்கிற அளவுக்குப் புகழப்பட்டன.
இந்த எஸ்.வி.வெங்கட்ராமனை நாம் சாதாரணமாக எடை போட்டுவிடக் கூடாது. ஜி.ராமனாதன் திரை இசையில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்த காலத்தில் அவருக்கு இணையாகப் பல படங்களுக்கு இசையமைத்தவர். இவர் இசையமைத்த ‘மீரா’, ‘ஞான செளந்தரி’, ‘கிருஷ்ணபக்தி’, ‘மனோகரா’, ‘இரும்புத்திரை’ போன்ற படத்தின் பாடல்கள் இவரது இசை மேதமையைக் கட்டியம் கூறுகின்றன.
ஞான செளந்தரி என்கிற திரைப்படத்தில் இவரது இசையமைப்பில் வெளிவந்த ‘அருள் தாரும் தேவ மாதாவே / ஆதியே இன்ப ஜோதி’, ‘கன்னியே மாமேரி தாயே / காணிக்கை என் கண்ணீரே’ போன்ற கிறிஸ்தவ பக்திப்பாடல்கள் அக்காலத்தில் கிறிஸ்தவ மக்கள் அல்லாது அனைத்து இசை ரசிகர்களும் மெச்சிப் போற்றும் வகையில் சிறப்பாக இசையமைக்கப்பட்டிருந்தது.
அதுபோலவே இஸ்லாமிய மக்கள் மிக விரும்பிக் கேட்கும் நாகூர் அனிபாவின் குரலில் ஒலித்த, ‘இறைவனிடம் கையேந்துங்கள் / அவன் இல்லையென்று சொல்லுவதில்லை’ பாடல் இவரது இசையமைப்பில் பரிமளித்து இன்றும் மேடைகளிலும், இஸ்லாமியத் திருவிழாக்களிலும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் ஆரம்பிக்கப்பட்ட புதிதில் இசையமைப்பாளர்களுக்கு அப்போது வழங்கப்படவில்லை. ஆனால் அதன் எல்லை விரிவுபடுத்தப்பட்டு, இசையமைப்பாளர்களுக்கும் வழங்கலாம் என முடிவெடுத்த முதல் வருடமான 1965இல் கலைமாமணி பட்டம் இவருக்கு வழங்கி தமிழக அரசு தன்னை கெளரவப்படுத்திக் கொண்டது.
என்.எஸ்.கிருஷ்ணன் இந்தப் படத்தில் இஞ்சிப்பத்தர் என்கிற வேஷத்தில் நடித்திருந்தார். அடிக்கடி, ‘என்னாச்சர்யம்?’ என்கிற வார்த்தையைப் பயன்படுத்துவார். மூலக்கதையில் வஞ்சிப்பத்தர் என்பவர் ஒரு பொற்கொல்லர். அவர் தான் கோவலனின் மரணத்திற்கேக் காரணமாக இருந்தவர்.
அதற்கு இணையாக கற்பனையில் வேடிக்கையாக உருவாக்கப்பட்ட பாத்திரம் தான் இஞ்சிப்பத்தர்.
இஞ்சிப்பத்தர் ஒரு நகைத்தொழிலாளி. அவரிடம் ஒரு பெண்மணி ஒருநாள் தங்க வளையல் ஒன்றைக் கொண்டு வந்து விற்க முயற்சி செய்வார். அதை உரைத்துப் பார்த்து வெறும் பித்தளை எனச் சொல்லி ஏமாற்றி விடுவார். இதை அவரது மனைவியாக நடித்தவர் பார்த்து விடுவார். தனது கணவனைக் கண்டிப்பார். ஆனால் அவர் மனைவியை அடித்து வாயை மூட வைத்து விடுவார். ஏமாற்றுவது இஞ்சிப்பத்தரின் வாடிக்கை.
இவ்வேளையில் வாட்டசாட்டமாகச் சிலர் ஒருநாள் அங்கே வருகிறார்கள். அவர்கள் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னரின் ஆஸ்தான பொற்கொல்லர் வஞ்சிப்பத்தரின் ஆட்கள். வஞ்சிப்பத்தரின் மகளுக்கு உடல்நிலை சரியில்லையென்றும், அதைக் குணப்படுத்தவல்ல வைத்தியர் அவ்வூரில் இருப்பதாக அறிந்து, அவரை அழைத்துப் பொக அங்கு வந்திருக்கிறார்கள். இவர்களில் முக்கியமான நடிகர்கள் புளிமூட்டை ராமசாமி மற்றும் சிங்கம் கிருஷ்ணமூர்த்தி என்பவர்கள்.
ஒரு பெண்மணி, இஞ்சிப்பத்தர் தான் அதற்குத் தகுதியான வைத்தியர் எனக் கூறி, அவர் மறுப்பார் என்றும், வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று விட வேண்டும் எனவும் சொல்ல, அங்கு வந்தவர்கள் வீட்டுத்திண்ணைப் பட்டறையில் அமர்ந்து வேலை செய்துகொண்டிருந்த இஞ்சிப்பத்தரை அணுகி அவரைக் கூப்பிட, அவர் தான் வைத்தியர் அல்ல எனவும் கூறுவார். வந்தவர்கள் வஞ்சிப்பத்தரை நையப்புடைப்பார்கள். அந்நேரம், அவ்வழியாக வந்த உள்ளூர் ஆசாமி ஒருவர் இஞ்சிப்பத்தரின் நிலையைப் பார்த்து, ‘நன்றாக வேண்டும், உதைத்து அழைத்துப் போங்கள்’ எனக் கூறிச் சென்று விடுவார்.
சுதாரித்த இஞ்சிப்பத்தர் உடனே, அந்த நபர் தனக்கு மருந்து அரைத்துக் கொடுத்து உதவி செய்பவர் என்றும், அவர் இல்லாமல் மருந்து தயாரிப்பது கடினம்; எனவே அவரையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கூற, அந்த நபரையும் பிடித்து உதைத்து, வலுக்கட்டாயமாக இஞ்சிப்பத்தருடன் சேர்த்து மதுரைக்கு அழைத்து வந்து விடுவார்கள்.
ஆக, போட்டுக் கொடுத்தவனையே மாட்டி விட்டு விடும் காட்சியை அன்றே காண நேர்ந்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு, இது போன்ற காட்சிகள் பல்வேறு வடிவில் பிற்காலத்தில் கவுண்டமணி – செந்தில் போன்றோரிடமிருந்து கிடைத்துக் கொண்டே இருந்தது.
கிருஷ்ண பக்தையாக மனநலம் குன்றியவர் போல் நடித்தவர் டி.ஏ.மதுரம். படத்தில் இவரது பெயர் பார்வதி. அவரிடம் இஞ்சிப்பத்தரை அழைத்துச் செல்ல, இஞ்சிப்பத்தரைத் தாக்க ஆரம்பித்து விடுவார் பார்வதி. பார்வதியின் அடியிலிருந்து தப்பி ஓடி வந்து விடுவார் இஞ்சிப்பத்தர்.
இஞ்சிப்பத்தரும், உடன் வந்த அவரது நண்பரும் அங்கிருந்து தப்பி ஓடுவதற்கான திட்டங்களைத் தீட்ட ஆரம்பிப்பார்கள். நண்பராக நடித்தவர் பெயர் பி.ஜி.குப்புசாமி. இவர் பல படங்களில் ஆரம்பத்தில் நகைச்சுவைப் பாத்திரத்திலும், பின் குணசித்திர வேஷத்திலும் நடித்து பெயர் பெற்றவர்.
இஞ்சிப்பத்தர் கிருஷ்ணரைப் போல் வேஷம் கட்டிக்கொண்டு, நண்பருடன் ஒருநாள் தப்பிச் செல்ல முயலும் போது பார்வதியிடம் மாட்டிக் கொண்டு விடுகிறார். கிருஷ்ண பக்தையான பார்வதி, கிருஷ்ணர் வேஷத்தைப் பார்த்ததும், அவர் தான் உண்மையான கிருஷ்ணர் என நம்பி, தன்னைத் திருமணம் செய்து கொள்ள இஞ்சிப்பத்தரிடம் அடம் பிடிப்பார்.
குப்புசாமியை யார் எனக் கேட்கிறார். அவர் தான் போர்த்திக் கொண்டிருந்த சால்வையை ஒரு பறவையின் சிறகுகள் போல் விரித்து ஆட்டி, கருடன் போல் கத்துவார். அவரை கருடாழ்வார் என அறிமுகம் செய்துவைப்பார் இஞ்சிப்பத்தர்.
ஆக பி.ஜி.குப்புசாமியாக இருந்தவர் இந்தப் படத்திற்குப் பிறகு ஆழ்வார் குப்புசாமி என அறியப்பட்டு, பல வருடங்கள் திரைப்படங்களில் நடித்தார்.
இவர்களது இம்மாதிரியான நகைச்சுவைக் காட்சிகள் மக்களிடையே பெரும் வரவேற்பை அந்த நாளில் பெற்றது.
‘கண்ணகி’ படம் மாபெரும் வெற்றியடைந்து வசூலை அள்ளிக்கொடுத்ததன் விளைவாக, அதன் தயாரிப்பாளர்கள் கோயம்புத்தூரில் சென்ட்ரல் ஸ்டுடியோவை குத்தகைக்கு எடுத்து மேலும் பல நல்ல திரைப்படங்களை அங்கிருந்து உருவாக்கினார்கள். ‘கண்ணகி’ படம் அதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது எனலாம்.
இப்படத்தை இதன் தயாரிப்பாளர்களில் ஒருவரான சோமசுந்தரம் என்பவரும், அந்நாளில் மிகப் பிரபலமான எடிட்டராக இருந்த ஆர்.எஸ்.மணி என்பவரும் கூட்டாக இயக்கியிருந்தார்கள்.
பி.கண்ணாம்பா, பி.யு.சின்னப்பா போன்ற முன்னணி நடிகர்களுடன் என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், எஸ்.வி.சகஸ்ரநாமம், டி.பாலசுப்ரமணியம், எம்.ஆர்.சுவாமிநாதன், டி.ஆர்.ராமச்சந்திரன், எம்.எஸ்.சரோஜா போன்ற தேர்ந்த நடிகர்களும் நடித்திருந்தார்கள்.
யு.ஆர்.ஜீவரத்தினம் இப்படத்தில் கெளந்தி அடிகளாக நடித்தும், பாடியுமிருந்தார்.
தமிழ் இலக்கியத்தின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தை மிகவும் அக்கறையுடன் நல்ல தமிழில், தமிழ்த்திரைக்கு அளித்தார்கள் என்கிற வகையில் மறக்க முடியாத திரைக்காவியம் இக்“கண்ணகி”.
– கிருஷ்ணன் வெங்கடாசலம்