Shadow

கலை உத்தியஸ்தர்

ஐராவதம்

“எம்பெருமானே! இதென்ன மகாபாரதத்திற்கு வந்த சோதனை?”

பல நூறாண்டுகளுக்குப் பிறகு, இப்பொழுதுதான் லஷ்மியின் முகத்தில் இருந்து பார்வையை மீட்டு வலது பக்கமாகப் புரண்டு படுக்கிறார். உடனே வியாசன், பரந்தாமன் முகத்தினைப் பார்த்து தனது வியாகூலத்தை வெளியிடுகிறார்.

“ஏன் வியாஸரே!? மகாபாரதத்துக்கு என்ன நேர்ந்தது?”

“யாரோ ஜெமோ-வாம். தினம் ஒரு அத்தியாயமென பத்தாண்டுகளுக்கு மகாபாரதம் எழுதுகிறாராமே!?”

“யாரோ ஜெமோவா? என்ன சொல்கிறீர் வியாஸரே! முக்காலமும் உணர்ந்த நீரா இப்படி அலட்சியமாகப் பேசுவது?”

சற்று தயங்கிய வியாசர், “ஏன் பிரபோ? ஏதாவது தவறாகச் சொல்லிவிட்டேனா?” என பவ்யமாகக் கேட்டார்.

“தவறு செய்தால் பரவாயில்லையே! மாபெரும் குற்றமல்லவா இழைத்துவிட்டீர்?”

“ஆ.. அப்படி என்ன செய்துவிட்டேன்?”

“கதை சொல்லியான நீர்.. கலைக்காக வாழும் பேராசான் ஜெமோவைப் பற்றி அறியாதது பெருங்குற்றத்தில்தானே வரும்?”

‘பேராசானா?’ என யோசித்த வியாசர், “தாங்களே அவரது பெருமைகளை எடுத்து இயம்பினால் தன்யன் ஆவேன்” என்கிறார்.

“ஜெமோ என்பது அவரது பெயரின் சுருக்கம். பிரபஞ்சத்தின் பெரு வெடிப்பில் இருந்து தோன்றிய கண்ணைக் கூசச் செய்யும் பெரும் ஒளிக் கோளமொன்று காலத்தின் பெருவெளியில் மிதந்து கொண்டிருந்தது. சில லட்சம் கோடி வருடங்களுக்குப் பின், பால் வீதியும் சூரிய குடும்பமும் என் கருணையால் தோன்றியது. அதன் விளைவாக பூமியும் உமிழப்பட்டது. பூமி பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்குப்பின் பனியால் உறைந்தது. மிதந்து கொண்டிருந்த நெருப்புக் கோளம் பூமியில் தஞ்சமடைந்தது. அதுதான் ஞானத்தின் மாவித்து. கனன்று கொண்டிருந்த அதிலிருந்துதான், வேதங்களும் உபநிஷதங்களும் தோன்றியது. சத்ய யுகத்தின் தொடக்கத்தில் அந்த ஞானம் மானுட உரு பெற்றது. சின் முத்திரையுடன் மோனத்தில் ஆழ்ந்திருந்த அந்த உருவத்திற்கு “ஜெகதல மோனன்” எனப் பெயர் சூட்டினார்கள் நான்முகனின் நான்கு புதல்வர்களான சனாகதி முனிவர்கள்.

அந்தப் பெயருக்கு, “பூலோகத்தின் மெளனம்” எனப் பொருள். மெளனத்திலிருந்தே ஞானம் பிறக்கிறது. பரத கண்டத்தின் தொன்மையான ஞான மரபுக்கு வித்திட்டதே அவர்தான். இன்று கலி யுகத்தில் மகாபாரதத்தை மீட்டுருவாக்கம் செய்யும் திவ்ய பணியில் ஈடுபட்டுள்ளார்” என்றார் நாராயணன்.

“நான் எழுதிய மகாபாரதத்தை அவர் ஏன் மீட்டுருவாக்கம் செய்யணும்? எனது 18 புராணங்களை விடவும் புகழ் பெற்றதல்லவா நான் எழுதிய இந்த இதிகாசம்? நான் ஸ்தூல வடிவத்தை இழந்துவிட்டாலும், நான் படைத்த படைப்புகள் இன்னும் அழியாமல்தானே இருக்கிறது?”

“எத்தனை ‘நான்’ உன் கேள்விகளில்!!! உமது ஒரு லட்சம் ஸ்லோகங்களும், உபயோகத்தில் இல்லாத சமஸ்கிருதத்தில் உள்ளது. ஜெமோவோ, மக்கள் பயன்பெறும் வழியில் மிக மிக எளிமையான (!?) உரைநடையில் அனைவருக்குமே புரியும்படி” என அடக்கமுடியாமல் சிரித்து விட்டு, “எழுதி வருகிறார்” என்றார் எம்பெருமான்.

“வேறென்ன எழுதியுள்ளார்?”

“வியாஸா! அகந்தையில் பேசுகிறாயா? துவாபுர யுகத்து எழுத்தாளனான உனக்கு கலி யுகத்து எழுத்தாளன் பற்றி என்ன தெரியும்? எத்தனை சிரமங்களுக்கு மத்தியில் அவர் அயராது இயங்குகிறார் தெரியுமா? உனக்கு கமெண்ட் பாக்ஸ் என்றால் என்னவென்று தெரியுமா? அல்லது ராம்ஜி யாஹூவையாவது தெரியுமா? உன் கற்பனைக்கு எட்டாதது அவர் சிரமமும் உழைப்பும். அவரது நாராயணபுரம் என்ற நாவலை நீ படித்து முடிக்கவே உனக்கு 18 யுகங்கள் ஆகும். உத்திகளைப் பயன்படுத்தி, ஒடுக்கப்பட்டவர்கள் பற்றி அவரெழுதிய ‘ஐராவதம்’ என்ற புனைவு அவருக்கு பெரும்புகழை ஈட்டித் தந்துள்ளதை அறிவாயா?”

“நானும்தான் ஒடுக்கப்பட்டவர்கள் பற்றி எழுதியுள்ளேன். கெளரவர்களால் ஒடுக்கப்பட்டவர்கள்தானே பாண்டவர்கள்?”

“முனி புங்கவ! விதுரருக்கு வாரிசுகள் இருந்து அவர்களைப் பாண்டவர்களும் கெளரவர்களும் இணைந்து எதிர்த்திருந்தால் அது ஒடுக்கப்பட்டவர்கள் பற்றிய புனைவு எனச் சொல்ல முடியும். ஆனால், நீ எழுதியது வெறும் பங்காளி சண்டைதானே!”

“வெள்ளை யானையான ஐராவதத்தின் கதை யாது பிரபோ?”

“செயற்கைப் பஞ்சத்தால், தலித் மக்கள் கொத்துக் கொத்தாக இறக்கின்றனரே என ஆங்கிலேயரிடம் பணிபுரியும் கேப்டன் ஏய்டன் பைர்னின் ஐரீஷ் மனசாட்சி அவரை உறுத்துகிறது. அந்த உறுத்தல்தான் கதை.”

“இந்தக் கதையில் அவர் பயன்படுத்தியுள்ள உத்திகள் என்ன?”

“ஜெமோ துர்கைபுரத்துக்காரர். கதையோ செட்டியார் பட்டினத்தில் நடக்கிறது. அந்தப் பட்டணத்தின் பேச்சு வழக்கு கை கூட சுமார் பத்து வருஷம் காத்திருந்தார். கடைசியில் கேப்டன் பைர்னின் ஆங்கில மனசாட்சியாக நாவலை நீட்டிவிட்டார். விஜய்காந்த் படத்து தீவிரவாதிகள் தமிழ் பேசுவது போல், நாவலில் அனைவரும் ஆங்கிலம்தான் பேசுகின்றனர்.”

“நல்லாயிருக்கே இந்த உத்தி!! ஆனால் பேராசானுக்கே ஒரு வட்டாரத்தின் பேச்சு வழக்கு கை கூடலைன்னு நினைக்கும் பொழுதுதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு.”

“வியாசரே! உமக்கு ஏன் ஜெமோ மீது இவ்ளோ பொறாமை? அது 143 வருஷத்து முந்தைய கதை. மக்களுக்கு எளிமையாகப் புரிய வேண்டுமென அந்தப் பேச்சு வழக்கை கதையில் பயன்படுத்தவில்லை.”

வெள்ளை யானை“பின் ஏன் 10 வருஷம் காத்திருந்தார்?”

“அது தவமய்யா?”

“எதற்கு அந்த தவம்?”

“எழுத்திற்கான தவம்; கலைக்கான தவம்” என்றார் நாராயணன்.

“சரி, வேறென்ன உத்திகள் கதைகளில் பயன்படுத்தி உள்ளார்?”

“குடிக்கார கேப்டன் ஏய்டன் பைர்ன் தவிர கதையில் வரும் அனைவருமே ஞானவான்கள்.”

“அப்படியா? அதெப்படி சாத்தியம்?”

“தர்மருக்கு அனைவரும் நல்லவர்களாகத் தெரிந்தது போலவும், துரியோதனனுக்கு அனைவரும் கெட்டவர்களாகத் தெரிந்தது போலவும்.. ஜெமோவின் கதாபாத்திரங்கள் அனைவருமே அனைத்தும் தெரிந்தவர்கள். செயற்கைப் பஞ்சத்தை அழிக்கும் வழி பற்றியும், மேல்சாதி பெண்களின் அடிமை வாழ்க்கை பற்றியும், ஆங்கிலேயரின் லஞ்சம் எப்படிலாம் செயல்படுகிறது என்பதையும் சாமான்ய இந்திய மக்கள் கேப்டன் ஏய்டன் பைர்னுக்கு ஜெமோவின் சார்பாகச் சொல்லிக் கொண்டே இருக்கின்றனர். நீர் மகாபாரதத்தில் வியாசனாக வருகிறீர். ஜெமோ நேரடியாக வராவிட்டாலும் விஷய ஞானமாக அனைவருள் இருந்தும் ஊற்றாய் சுரந்து கொண்டேயிருக்கிறார்.”

“அப்போ கேப்டனுக்கு ஒன்றுமே தெரியாதா?”

“ஏன் தெரியாது? தனது கோச் வண்டியின் வரலாறையும், அது எப்படி உருவாக்கப்பட்டது என்பதையும் அவர் அறிவார். ஷெல்லியின் கவிதையும், விஸ்கியில் திளைத்திருப்பது எப்படியென்றும் அறிவார் அவர். பட்டினியால் இறக்கும் மக்களைக் கண்டு குபீரெனப் பரிதாபப்படவும் தெரிந்து வைத்திருக்கிறார்.”

கொஞ்சம் யோசித்து விட்டு, “வெண்முரசில் வேத வியாஸானாகிய நான் வருகிறேனா அல்லது பேராசானே என் பாத்திரத்தையும்..” என்று இழுத்தவாறு தலையைக் குனிந்து கொள்கிறார்.

பரந்தாமன் புன்முறுவலுடன், “பேராசான் எளியோன். உன்னைப் போல் அல்லன். பரத வர்ஷத்தில் சிறு துரும்பு அசைந்தாலும் அதை அறிந்து கொள்ளும் சர்வ வல்லமை பெற்ற சூதர்கள் அனைவரிலும் நீக்கமற உள்ளதே அவர்தான்” என்கிறார்.

‘பேராசான் புராணம்’ கேட்க தன் மனதுக்கு அவ்வளவு உவப்பானதாக இல்லையென்பதால், “வேறென்ன விசேஷம் ஐராவதத்தில்?” என பேச்சை மாற்ற முயல்கிறார் வியாசர்.

“குறியீடாக வைக்கப்பட்டிருக்கும் தலைப்பும், சென்னப்பட்டினத்தின் ஓவியங்களும், பெரும்பஞ்சத்தின் புகைப்படங்களும்.”

பஞ்சம்

“எப்படி இது ஒடுக்கப்பட்டவர்களின் கதை ஆனது?”

“ ‘அய்யகோ.. பார்த்தாயா எத்தனை பாவப்பட்ட மக்கள் இறந்து கிடக்கிறார்கள்!’ என்ற பரிதாபம் நாவல் முழுவதுமே கேட்கும். இது ஒரு சால சிறந்த உத்தியல்லவா?”

“பிரபோ.. பேராசானைத் தரிசிக்கும் ஆவலைத் தணிக்க முடியவில்லை.”

“அது சுலபம். ஆனால் அவரைச் சந்திக்கும் முன், நீர் உமது உள்மன படிமங்களைக் கடந்து விடுதல் நல்லது.”

“என்னையும் தன் வட்டத்தில் இணைத்துக் கொண்டு.. எனக்கும் தற்காலத்து கலை உத்திகளைச் சொல்லிக் கொடுப்பாரா?” என வியாசர் கேட்பதைக் கவனிக்காமல் நாராயணன் திரும்பிப் படுத்துக் கொள்கிறார். மீண்டும் திருமகள், நாராயணனின் காலைப் பிடிக்கத் தொடங்குகிறார்.

‘வியாஸன், தி புவர் அன்லக்கி ஃபெல்லோ’ என நினைத்துக் கொண்டது பரந்தாமனின் படுக்கையான ஆதிசேஷன்.

– தினேஷ் ராம்