Shadow

கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி

மாயலோகத்தில்..

கல்கி

கல்கி என்கிற இலக்கியவாதியை அறியாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்கவே முடியாது என்கிற அளவில் மிகவும் பிரபலமான தமிழ் எழுத்தாளர். வெகுஜன வாசகர்களை இவரைப்போல் தன்வசம் இழுத்தவர்கள் மிகவும் குறைவு.

1899இல் புத்தமங்கலம் எனும் ஊரில் பிறந்தார். இது மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது. படித்துக்கொண்டிருக்கும்போதே பாதியில் படிப்பை உதறிவிட்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். 1922ஆம் ஆண்டில் முதல் சிறைவாசம். விடுதலை ஆகி வெளிவந்த பின் திரு வி. கல்யாண சுந்தரனார் ஆசிரியராக இருந்த ‘நவசக்தி’ பத்திரிகையில் வேலைக்கு அமர்ந்தார். சிறிது காலம் சென்றபின், நவசக்தியை விட்டு விலகி, திருச்செங்கோட்டில் ராஜாஜி நடத்தி வந்த பத்திரிகை ஒன்றின் உதவி ஆசிரியராக சேர்ந்து, திருச்செங்கோடு ஆசிரமத்திலேயே வாழ்ந்து வந்தார். 1930இல் மறுபடியும் சுதந்திரப்போராட்டம், சிறைவாசம், 1932இல் விடுதலையாகி வந்த பின், எஸ்.எஸ்.வாசனின் ஆனந்த விகடனில் துணை ஆசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இவரது முதல் நாவல் ‘கள்வனின் காதலி’ 1937இலிருந்து ஆனந்த விகடனில் தொடராக வெளிவர ஆரம்பித்தது. 1939இல் தயாரிக்கப்பட்டு பெரும் வெற்றியை அடைந்த ‘தியாகபூமி’ படத்தின் கதை கல்கி அவர்கள் எழுதியது. கே.சுப்ரமணியத்தின் இயக்கத்தில் உருவான இப்படத்தில் பாபநாசம் சிவன் நடித்திருப்பது ஓர் அரிய செய்தி. இப்படம் இன்றளவும் ஒரு திரைக்காவியமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆனந்த விகடனிலிருந்து விலகிய கிருஷ்ணமூர்த்தி, சதாசிவம் அவர்களுடன் கூட்டாகச் சேர்ந்து ‘கல்கி’ பத்திரிகையை 1941இல் நிறுவினார். இதன் பிறகு இவர் கல்கி என்றே அறியப்பட்டார். ‘கல்கி’ பத்திரிகையில் தொடர்ந்து இவரது நாவல்கள் பிரசுரம் கண்டன. கல்கி மிகவும் பாப்புலரான எழுத்தாளராக உருவெடுத்தார். தொடராக கல்கியில் பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், அலை ஓசை, பொன்னியின் செல்வன் போன்று வெளிவந்த நாவல்கள் வாசகர்களிடையே மிகுந்த செல்வாக்கைப் பெற்றன. கல்கி தமிழ் வாசகர்களிடையே ஒரு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று தலைசிறந்த வெகுஜன எழுத்தாளராக மதிக்கப்பட்டார்.

இடையில் ‘மீரா’ திரைப்படம் 1945இல் வெளிவந்து மிகவும் புகழ் பெற்றது. கதை, வசனம் கல்கி. அதோடு இப்படத்தில் சில பாடல்களும் எழுதினார். குறிப்பாக ‘காற்றினிலே வரும் கீதம்‘ இம்மியளவும் சுவை குன்றாமல் எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களால் பாடப்பெற்று, இன்றளவும் சாகாவரம் பெற்ற பாடலாகத் திகழ்ந்து வருகிறது. இதே படத்தில் இவரது மற்றொரு பாட்டான ‘மறைந்த கூண்டிலிருந்து விடுதலை அடைந்த பறவை விரைந்தோடுதே‘ என்கிற பாடல் தான் என்னளவில் மிகச்சிறந்த பாடலாக எண்ணத் தோன்றுகிறது. ‘காற்றினிலே வரும் கீதம்‘ மிகச்சிறிய சந்தங்களில் எவரும் எளிமையில் பாடிவிடும் விதமாக அமைக்கப்பட்ட மெட்டில் உருவானது. விசேஷமான உணர்ச்சிகளெல்லாம் அதில் கிடையாது. ஆனால் மேவார் ராணாவின் அரண்மனையில் கூண்டுக்கிளியாக அடைபட்டுக் கிடந்த மீரா, அக்கூண்டிலிருந்து விடுபட்டு, தான் விரும்பும் கண்ணனை நோக்கி துவாரகை புறப்படும்போது பாடப்படும் உணர்ச்சி வெள்ளமான இப்பாடல், ‘காற்றினிலே‘ பாடலைப் போல் பிரபலமடையாமல் போனது துரதிருஷ்டவசமானது. ‘மீரா’ படத்தின் டி.வி.டி.க்கள் கிடைக்கிறது. வாசகர்கள், இசை ஆர்வலர்கள் நிச்சயமாகக் கேட்க வேண்டிய பாடல்.

1953இல் ‘மின்மினி’ என்றொரு படம். இப்படம் தோல்வியைத் தழுவிய படம். கல்கி இதில் சில பாடல்கள் எழுதியிருக்கிறார். சொல்லிக் கொள்ளும்படியாக எதுவுமில்லை.

‘மீரா’வுக்குப் பிறகு திரைப்படமாகத் தயாரிக்கப்பட்ட இவரது நாவல் ‘பொய்மான் கரடு’ இந்த நாவல் ‘பொன்வயல்’ என்கிற பெயரில் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது. தயாரித்தவர் பிரபல நகைச்சுவை நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரன். இப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு ஒரு புதிய மிகப்பெரிய பின்னணிப்பாடகர் அறிமுகமானார். சீர்காழி கோவிந்தராஜன் இப்படத்தில் பாடிய ‘சிரிப்புத்தான் வருகுதய்யா‘ என்கிற பாடல்தான் சீர்காழியின் முதல் திரைப்படப்பாடல். பாடலை எழுதியவர் கவியோகி சுத்தானந்த பாரதியார். சீர்காழி கோவிந்தராஜனுக்குத் திரையுலகில் ஒரு வழியைத் திறந்து விட்ட இப்படம் 1954இல் வெளிவந்தது.

இவரது ‘கள்வனின் காதலி’ நாவலை டி.கே.எஸ். சகோதரர்கள் நாடகமாக நடத்தி வந்தார்கள். இக்கதை திரைப்படமாக தயாரிக்கப்பட்டு 1955இல் வெளிவந்தது. சிவாஜி கணேசன், பானுமதி ஜோடி. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் தோல்வியையே சந்திக்க வேண்டியதாயிற்று. கல்கியின் ‘பார்த்திபன் கனவு’ தொடராக வெளிவந்தபோது மிகவும் பாராட்டுதல்களைப் பெற்றது.

கதையில் சில விஷயங்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. அந்த ரகசியத்தைத் திரைப்படத் தயாரிப்பின்போது காப்பாற்ற இயலவில்லை. கதையில் சாமர்த்தியமாக மறைத்து வைக்கப்பட்டவை; திரையில் இல்லாமல் போனது இப்படத்தின் தோல்விக்குக் காரணமாக அமைந்துவிட்டது. ஆனால் சில நல்ல பாடல்கள், குமாரி கமலாவின் நாட்டியம், ஓவியர் மணியம் அவர்களின் கலை போன்ற அம்சங்கள் இப்படத்தை ஓரளவு காப்பாற்றின. கல்கி எழுதி கடைசியாகத் தயாரிக்கப்பட்ட படமும் இப்படம்தான்.

எழுத்துத்துறையில் பன்முகத்தன்மை கொண்ட கல்கி பல்வேறு புனைப்பெயர்களில் எழுதி வந்தார். கர்நாடகம், தமிழ்த்தேனீ, அகஸ்தியன், லாங்கூலன், ராது, தமிழ்மகன், விவசாயி, போன்றவை இவரது புனைப்பெயர்கள். நாட்டியம், சங்கீதம், சினிமா போன்ற பல்வேறு துறைகள் பற்றிய இவரது விமர்சனங்கள் அக்காலத்தில் மிகவும் பரபரப்பாகப்பேசப்பட்டன. ‘அலை ஓசை’ என்கிற நாவலுக்காக, சாகித்திய அகாடமி விருது இவரது மறைவுக்குப் பிறகு 1956 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

திரைப்படங்களில் இவரது பங்கு:

1939 – தியாக பூமி கதை
1945 – மீரா வசனம், பாடல்கள்
1953 – மின்மினி பாடல்கள்
1954 – பொன்வயல் (பொய்மாண் கரடு) கதை
1955 – கள்வனின் காதலி கதை
1960 – பார்த்திபன் கனவு கதை

– கிருஷ்ணன் வெங்கடாசலம்