“எங்கள் இமைக்கா நொடிகள் படத்தை நாங்கள் மிகுந்த கவனத்துடன் வலுவான முறையில் எழுப்பிக் கொண்டு வருகிறோம். முக்கியமாக எங்கள் படத்தின் அஸ்திவாரமாகச் செயல்படுவது கதைக்களம் தான். அந்தக் கதைக்களத்தைத் தாங்கி நிற்கும் வலுவான தூண்களாக அதர்வா, இயக்குநர் அஜய் ஞானமுத்து, ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா, இவை அனைத்திற்கும் மேலாக நயன்தாரா இருப்பது எங்கள் படத்திற்குக் கூடுதல் பலம். சிறந்த நடிகர் – நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் சிறப்பான விளம்பரங்கள் மூலம் எங்கள் படத்தை மேலும் மெருகேற்ற முடிவு செய்திருக்கிறோம். அந்த வகையில் நயன்தாராவின் வருகை எங்கள் படத்தின் வேகத்தை மேலும் அதிகரித்துள்ளது.
ஹாலிவுட் திரைப்படங்களைப் போல இந்தப் படத்தின் கதை எழுத பட்டிருக்கிறது.இரு வேறு முனைப்புகளில் சொல்லப்படும் இந்த கதையில், கதாபாத்திரங்களின் பங்களிப்பும், உணர்த்தலும் மிக மிக அவசியம். அது தான் எங்கள் கதையின் தனித்துவமான சிறப்பு. அதர்வாவுக்கு ஜோடியாக ஒரு புதுமுகம் நடித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி, தெலுங்குத் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ராஷி கண்ணாவை நாங்கள் தேர்வு செய்து இருக்கிறோம். நிச்சயமாக அவரின் இந்த வருகை படத்திற்குக் கூடுதல் அழகு சேர்க்கும். தற்போது எங்கள் படத்தின் வில்லன் கதாபாத்திரத்திற்காக இந்தியாவின் முன்னணி நபர்களுள் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இதன் மூலம் தேசிய அளவில் எங்கள் திரைப்படம் பேசப்படும் என முழுமையாக நம்புகிறேன்.
ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா, படத்தொகுப்பாளர் புவன் ஸ்ரீனிவாசன், கலை இயக்குநர் செல்வக்குமார் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்பராயன் என சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.
வருகின்ற அக்டோபர் மாதத்தில் எங்கள் படத்தின் படப்பிடிப்பை நாங்கள் துவங்க இருக்கிறோம். ‘இமைக்கா நொடிகள்’ படத்தைப் பார்க்க வரும் ஒவ்வொருவரும் தங்களின் இமைகளை ஒரு நொடி கூட மூட மாட்டார்களள்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் கேமியோ பிலிம்ஸ் சார்பாகப் படத்தைத் தயாரிக்கும் சி.ஜெ.ஜெயக்குமார்.