Shadow

கோஸ்ட் பஸ்டர்ஸ் விமர்சனம்

Ghostbusters Review

சந்திரமுகி, காஞ்சனா, மாயா, டிமான்ட்டி காலனி என தமிழ்த் திரையுலகம் டிசைன் டிசைனாகப் பேய்களை மார்க்கெட்டில் இறக்கிவிட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில், ஹாலிவுட்டில் இருந்து சமீபத்தில் கால் பதித்திருக்கும் பேய்க் கதைதான் இந்த கோஸ்ட் பஸ்டர்ஸ். இது இந்த (GHOST BUSTERS) வரிசையில் மூன்றாவது படம் என்றபோதும் மற்ற படங்களைப் பற்றிய முன்கதைச் சுருக்கங்கள் இல்லாமலே நமக்குப் புரிகிறது.

கொலம்பியா யுனிவர்சிட்டியில் பேராசிரியராகப் பணிபுரியும் எரினைச் சந்திக்க ஒருவர் வருகிறார். அவர் கையில் எரினும் அபியும் சேர்ந்து எழுதிய புத்தகத்தின் நகல் இருக்கிறது. இந்தப் புத்தகத்தை காட்டி தன் வீட்டில் பேய் இருப்பதாகவும், அதை விரட்ட எரின் உதவ வேண்டும் என்றும் கேட்கிறார். தான் அந்தப் புத்தகத்தை எழுதவே இல்லை என்று மறுக்கும் எரின் ஒரு கட்டத்தில் உண்மையை ஒப்புக் கொள்கிறார். ஏன் மறுத்தார் என்ற ஃபிளாஷ் பேக்கிற்கு எல்லாம் செல்லாமல் நேராக அபியிடம் சென்று முறையிடுகிறார்.

அபியும் அவர் உதவியாளர் ஜிலியனும் பேய் உலகத்தைப் பற்றி ஆராயந்து அவற்றை அழிக்க உதவும் சாதனங்களைக் கண்டறியும் முயற்சியில் இருக்கிறார்கள். இந்த ஆவி உலக ஆராய்ச்சிகளைத் துவக்கத்தில் புறக்கணிக்கும் எரின் ஒரு வீட்டிற்குள் நேருக்கு நேர் பேயைச் சந்திக்கிறார். அப்போது அவருக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்ள இவர்கள் கூட்டணியில் சேர்ந்து கொள்கிறார். உடன் ரயில்வேயில் பணிபுரியும் ஃபேட்டியும் இவர்களோடு கைகோர்த்துக் கொள்கிறார்.

இதற்கிடையில் ரோவன் என்பவன்தான் நியுயார்க்கில் பேய்களை உலவ விடும் கொடூரத்தைச் செய்து கொண்டிருக்கிறான் என்பதைக் கண்டறியும் குழுவிற்கு அரசாங்கத்திடமிருந்தும் எதிர்ப்புகள் வருகிறது. இவை எல்லாவற்றையும் சமாளித்து எப்படி நியூ யார்க் மக்களைப் பேரழிவிலிருந்து காப்பாற்றுகிறார்கள் என்பதே கதை. இசையோ, ஒளிப்பதிவோ, எதுவும் நம்மை சீட்டின் நுனியில் அமர வைக்கும் தரத்தில் இல்லாதது வருத்தமே.

கொஞ்சம் இழுவையான திரைக்கதை, சுவாரசியம் கொடுக்காத மொக்கைக் காமெடிகள், விறுவிறுப்பைக் கூட்டாத ‘டம்மி’ வில்லன் என படத்திற்கு நிறைய ‘மைனஸ்’கள். ஆயினும் இறுதி பத்து நிமிடங்கள் வரும் கிராபிக்ஸ் மற்றும் ஜெனிஃபர் ஆனிஸ்டனை நினைவுபடுத்தும் மெலிசாவின் நடிப்புக்காகவும் ஒருமுறை பார்க்கலாம். தவிர இதில் வரும் காமெடிகள் வாரம் ஒரு பேய் படங்களைப் பார்த்துச் சிரிக்கும் தமிழ் ரசிகர்களை திருப்திப்படுத்துமா என்பது ஐயமே!

– கோவை ஆவி