Shadow

சீமான் செய்த துரோகம்

“நான் எங்கண்ணன், அம்மா கிரியேஷன்ஸ் சிவா அவர்களுக்கு ஒரு துரோகம் செஞ்சிருக்கேன். இன்னைக்கு வரைக்கும் அந்தக் குற்றவுணர்விருக்கு. அவர் பகலவன்னு என்னுடைய கதையைதான் எடுக்கச் சொல்லிக் கட்டாயபடுத்தினார். அதை எடுத்திருந்தா மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைஞ்சிருக்கும். தொடர்ச்சியா நானும் படங்கள் இயக்கியிருந்திருக்கலாம். அன்னைக்கு ‘வாழ்த்துகள்’ படமெடுத்து பெரிய பொருளிழப்பைத் தந்துட்டன். அந்தப் படத்தை வெளியிட்ட ஒருவாரத்திலதான் என் தலைவன் பிரபாகரன்கிட்டயிருந்து அவசர அழைப்பு. நான் போனேன். போன அந்த நாளிலிருந்து என் வாழ்க்கை திசை மாறிட்டது. 

அப்பதான் வாழ்த்துகள் படம் ஓடிட்டிருக்கு. அது வெற்றியடையலை என அவருக்குத் தெரிஞ்சிடுச்சு. என்னைக் கூப்பிட்டுச் சொன்னார், “நமக்கு எதுக்கு இந்த பூ, கவிதைலாம்? நான் தலை குனிஞ்சிட்டே இருந்தன். நமக்கு தம்பி மாதிரி படமிருக்கணும். தரையில் அடிக்கணும்; திரையில் அடிக்கணும். அப்பதான் விடுதலை வரும்”னு சொன்னார். 

இப்ப அதை நினைச்சுப் பார்த்து வருந்துறேன். என் அண்ணன் போலொரு தயாரிப்பாளர் கிடைப்பது அரிது. ஒரு தகப்பனா, சகோதரனா, நல்ல தோழனா என  எல்லாமுமாக இருப்பார். அவருக்கு ஒரு வெற்றிப்படம் தராம விட்டுட்டேன் என்ற குற்றவுணர்வு இருக்கு. அதுக்கு என்னோட திமிர்த்தனம் காரணம். என் தாய்மொழி தமிழிலேயே எல்லா உரையாடலும் எழுதணும்னு நினைச்சது. அதுக்கு வருத்தப்படுறேன்.. இந்த இனத்தில் பிறந்ததற்கு. பெருமையடையுறேன். அதே சமயம் சிறுமையும் அடையுறேன். ‘ஐ லவ் யூ’ன்னு சொல்ல வேண்டிய இடத்தில் ‘நான் உன்னை நேசிக்கிறேன்’ எனச் சொல்வது நெருடலாக இருக்குன்னு விமர்சனம் எழுதுறாங்க. காசி அண்ணனிடம் சொன்னேன். அன்பைக் கூட தாய்மொழியில் பரிமாறிக் கொள்ளாத ஓர் இனம் இருந்தாலென்ன, செத்தாலென்ன என்று கேட்டார். தமிழர்களுக்குத் தாய்மொழி அந்நியப்பட்டுப் போச்சு. இதை விட இழிவு வேறெதுவுமில்லை. 

சீமான்

சாதீய இழிவை எதிர்த்துப் போராடாமல் இருப்பதைவிட செத்தொழிவது மேல் என்கிறார் அம்பேத்கர். ஆனால் இங்கே வருகிற அனைவரும் நவ்யா நாயர், சுவேதா மேனன், ஸ்ரேயா ரெட்டி, அந்த ராவ், இந்த ராவ்னு பேருக்கு பின்னாடி சாதியைப் போட்டுக் கொண்டு பெருமையாக வருகின்றனர். உயர்ந்த சாதி சமூகமாக இருப்பவர்கள் போட்டுக் கொண்டு வருகிறார்கள். தாழ்ந்தவர் மனநிலை என்னவாக இருக்கும்? முதலில் இந்த ஷெட்டி, ரெட்டியை வெட்டி எறியணும். உயர்ந்த சாதி என்பது ஆணவம். ஒரு போதை. 

முன்னாடிலாம் படங்கள்ல வாங்க பிள்ளைவாள், வாங்க முதலியார்வாள், வாங்க செட்டியார்வாள்னு சொல்வாங்க. நான் சொன்னேன். நாங்களே இப்பதான்   குரங்கிலிருந்து வாலை விட்டுட்டு மனுஷா மாறிட்டு வர்றோம். திருப்பி அந்த வாலை ஏன் எங்களுக்கு ஒட்டி விடுறீங்க? முதலில் இதை ஒழிக்கணும். தயவு செய்து இனிமே நடிக்க வர்றவங்களோட பெயரை மட்டும் போட்டால் போதும். இந்த சாதியை உங்க வீட்டிலிருக்கிற சட்டியிலேயே விட்டுட்டு வாங்க.. இங்க ஒட்டிட்டு வராதீங்கன்னு சொல்லணும். 

காலில் ஒட்டிய மலத்தைக் கழுவாதவணும். சாதியைப் பெயரில் ஒட்டிக் கொண்டிருப்பவனும்  இந்த சமூகத்திற்கு நாற்றம்தானேயொழிய.. அதனால் இந்த சமூகத்திற்கு ஒரு பெருமையும் இல்லை” என்றார்  ‘சிநேகாவின் காதலர்கள்’ படத்தில் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்த சீமான். இந்தப் படத்தில் நடித்திருக்கும் நாயகியின் பெயர் ‘கீர்த்தி ஷெட்டி’ என்பது குறிப்பிடத்தக்கது.

1 Comment

Comments are closed.