Shadow

ஜகதலப்ரதாபன் (1944)

(முக்கிய நடிகர்கள்: பி.யு.சின்னப்பா, டி.எஸ்.பாலையா, டி.பாலசுப்ரமணியம், பி.பி.ரங்காச்சாரி, எம்.எஸ்.சரோஜினி, யு.ஆர்.ஜீவரத்தினம், டி.ஏ.ஜெயலட்சுமி, எஸ்.வரலட்சுமி, சாரதாம்பாள்)

Jegathalaprathaban

ஜகதலப்ரதாபன் என்றால் அனைத்துத் துறைகளிலும் கை தேர்ந்தவன் – மிகுந்த திறமைசாலி எனப் பொருள் கொள்ளலாம். இப்போது ‘சகலகலா வல்லவன்’ என்கிறோமே – அதைப்போல.

நிஜ வாழ்க்கையிலும் அப்படி ஒரு ஜகதலப்ரதாபன் இருந்தார். அவர் தான் பி.யு.சின்னப்பா.

தமிழ்த் திரையில் ஆரம்பகாலங்களில் நடிப்பு என்பது, திரையில் தோன்றிப் பாடுவதுடன், பிராமண மற்றும் மணிப்பிரவாள நடையில் ஒரு மாதிரி இழுத்து இழுத்துப் பேசுவதாகத் தானிருந்தது. பாகவதரின் பல படங்களில் இதைப் பார்க்க முடியும். இதே மாதிரி தான் அனைவரும் பேசியும், பாடியும், நடித்தும் வந்தார்கள். அவர்கள் மத்தியில் அருமையாகப் பாடுவதுடன், நடிப்பாற்றலிலும் வல்லவராக விளங்கிய ஒரே நடிகர் பி.யு.சின்னப்பா. எனவே தமிழ்த்திரையுலகில் துடிப்பான நடிப்பின் முன்னோடியாக இவரைச் சொல்லலாம். அதோடு சிலம்பம், குஸ்தி போன்ற கலைகளிலும் வல்லவராகத் திகழ்ந்தார்.

இரட்டை வேடம் (உத்தமபுத்திரன்), மூன்று வேடங்கள் (மங்கையர்க்கரசி), பல்வேறு வேடங்கள் (ஆர்யமாலா) தரித்து நடித்த ஆரம்பகால நடிகர் எனும் பெருமையையும் இவர் பெறுகிறார். முப்பத்தொன்பது வயதில் இவருக்கு ஏற்பட்ட மரணம் மிகவும் துரதிருஷ்டவசமானது.

‘ஜகதலப்ரதாபன்’ 1944 இல் வெளிவந்த மற்றுமொரு வெற்றிப்படம். ஆர்யமாலா, சிவகவி போன்ற மாபெரும் வெற்றிப்படங்களைத் தயாரித்த பக்ஷிராஜா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளிவந்த இப்படம் பி.யு.சின்னப்பாவிற்கு மிகப்பெரிய பெயரை ஏற்படுத்திக் கொடுத்த படம்.

P.U.Chinnappaபி.யு.சின்னப்பா ஒரு இளவரசன். பெயர் பிரதாபன். இவரது தந்தையாக, அந்நாட்டு மன்னராக நடித்தவர் அக்காலத்தில் பேரும் புகழும் பெற்று விளங்கிய நல்ல நடிகர் பி.பி.ரங்காச்சாரி என்பவர்.

இளவரசன் பிரதாபனுக்கு இந்திர லோகத்தைச் சேர்ந்த இந்திரகுமாரி, நாகலோகத்தைச் சேர்ந்த நாககுமாரி மற்றும் வருண குமாரி, அக்னி குமாரி ஆகிய நால்வரும் பணிவிடை செய்ய வேண்டும் என்கிற தனது விருப்பத்தை அரசனான அவனது தந்தையின் கேள்வி ஒன்றுக்கு வெளிப்படுத்த, அவனது தந்தை கோபமுற்று, அந்தப் பதிலுக்கு மன்னிப்புக் கேட்கச் சொல்வார். மறுத்தால் மறுநாள் சிரச்சேதம். பிரதாபன் ஒப்புக் கொள்ளாமல் நாட்டை விட்டு வெளியேறுகிறான்.

தப்பிய பிரதாபன் ஒரு காட்டுப்பகுதிக்குச் செல்ல, அங்கு விசித்திரன் (என்.எஸ்.கிருஷ்ணன்) என்றொரு நண்பன் கிடைக்கிறான்.

பிரதாபனுக்குக் காளியின் அருள் உண்டு. அந்தக் காட்டில் காளி, குடில் ஒன்று அமைக்க அதில் வாழ்கிறார்கள் நண்பர்கள் இருவரும். காளி அங்கு ஒரு மூதாட்டி வேடத்தில் இவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்கிறார்.

மூதாட்டியின் வேண்டுகோளின்படி இருவரும் காட்டில் மாடு மேய்க்கின்றனர்.

தேவகுமாரிகள் நால்வரும் பூலோகம் வந்து அடிக்கடி ஒரு தடாகத்தில் குளிப்பது வழக்கம். மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் இவர்கள் குளிப்பதை ஒரு நாள் கவனித்து விடுகிறார்கள். இந்திரகுமாரியின் சேலையைத் திருடிக் கொண்டு ஓடி வந்து விடுகிறான் பிரதாபன். இந்த தெய்வீகச் சேலை இல்லாமல் இந்திர குமாரியால் இந்திர லோகம் செல்ல முடியாது. எனவே பிரதாபனைத் துரத்திக் கொண்டு வந்து ஒரு இடம் வந்ததும், ‘என்னைப் பார், என் அழகைப் பார்’ எனக் கூற பிரதாபன் திரும்பிப் பார்க்கவும் அவன் கற்சிலையாகி விடுகிறான்.

அன்றிரவு இந்திரகுமாரி, மூதாட்டியின் குடிசையில் தங்குகிறாள். மூதாட்டி கற்சிலையாக நின்ற பிரதாபனை ஒரு சிறு குழந்தையாக மாற்றி, இந்திரகுமாரியின் அருகில் இட்டு விடுகிறாள். குழந்தையை, கிருஷ்ணராகப் பார்க்கிறாள் தேவகுமாரி. அக்குழந்தையுடன் கனவில் விளையாடுவதாகக் காட்சிகள்.

‘என்னை விட்டோடதடா, கண்ணா’

‘உள்ளம் எல்லாம் கொள்ளை கொண்டாய்
கண்ணா, கண்ணா’

எனப் பாடி விளையாடி மகிழ்கிறாள். ஒருநாள் குழந்தையை பிரதாபனாக மாற்றிவிடுகிறாள் மூதாட்டி. இருவருக்கும் காந்தர்வ விவாகம் செய்து வைக்கிறார்.

பின் எல்லோரும் காட்டை விட்டுப் புறப்பட்டுச் செல்கிறார்கள். ஓர் இடத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது, அந்நாட்டு சேனாதிபதி இவர்களை கவனித்து, அவளது அழகை மன்னரிடம் விவரிக்க, மன்னர் எல்லோரையும் தன் அரண்மனைக்கு அழைத்துச் சென்று, பிரதாபனுக்கு கெளரவமான வேலையும் கொடுக்கிறார்.

மன்னருக்கு, இந்திரகுமாரியின் மீது மையல் ஏற்படுகிறது. அவளை அடைய பிரதாபன் இடைஞ்சலாக இருப்பதால், தனக்குத் தீராத தலைவலி எனவும், அதற்காக ஒளஷதம் நாகலோகத்தில் இருப்பதாகவும் கூற, அதைப் பெற்று வர பிரதாபன் செல்கிறான். இந்திரகுமாரி, நாகராஜனுக்கு கடிதம் கொடுக்கிறாள். அங்கு சென்று நாககுமாரியை மணந்து, ஒளஷதத்தையும் கொண்டு வருகிறான்.

அரசனுக்கு ஏமாற்றம். வேறு பல காரணங்கள் சொல்லி மறுபடியும் பிரதாபனை அனுப்ப, அவன் அக்னிகுமாரி, வருணகுமாரியையும் மணக்க இப்போது நான்கு மனைவிகள்.

மனமொடிந்த அரசன் பிரதாபனை தீக்குண்டத்தில் இறக்கி அவனை மரணமடையச் செய்ய திட்டமிட, தந்திரமாக மன்னன், சேனாதிபதி முதலியோரை அத்தீக்குண்டத்தில் இறங்க வைத்து, அவர்கள் மரணமடைய, அந்நாடு பிரதாபன் வசமாகிறது. நாட்டை தனது நண்பன் விசித்தரனுக்கு அளித்து விட்டு வேறு இடம் சென்று புதிய மாளிகை அமைத்து வாழ்கிறார்கள்.

இதற்கிடையில் பிரதாபனது தந்தை தனது நாட்டை இழந்து, தன் மனைவி பிள்ளைகளுடன் அனாதரவாக விறகு சுமந்து திரிகிறார். முதலில் தாயாரையும், பின் தந்தை சகோதரர்களையும் கண்டுபிடித்து மாளிகைக்கு அழைத்து வருகிறான் பிரதாபன்.

ஒருநாள் தனது மகன் பிரதாபனுக்கு இந்திரகுமாரி இசை பாட, நாககுமாரி பன்னீர் தெளிக்க, அக்னிகுமாரி சாமரம் வீச, வருணகுமாரி கால்பிடித்து விடும் காட்சியைக் காண்கின்றனர் அவனது பெற்றோர்.

பிரதாபன் அதுநாள் வரை ரகசியமாகத் தன்னிடமே வைத்திருந்த இந்திரகுமாரியின் தெய்வீகப் புடவையை, ஒருநாள் தன் தாயிடம் கொடுத்து பத்திரமாக எவரும் அறியாமல் வைத்திருக்க வேண்டும் என்று கூறுவதை இந்திரகுமாரி கவனித்து விடுகிறாள்.

பிரதாபன் இல்லாத ஒருநாள் நான்கு தேவகுமாரிகளும், தங்களது மாமியாருக்கு அவர் மனம் மகிழும்படி பணிவிடைகள் செய்து, தந்திரமாக அந்தப் புடவையைப் பெற்று விடுகின்றனர். நால்வரும் அதைப் போர்வை போல் போர்த்திக் கொள்ள அவர்கள் தேவலோகம் சென்று விடுகின்றனர். மாளிகை, ஆடம்பரம், ஆடை அணிகள் எல்லாம் மாயமாக மறைந்து, பரதேசியாகப் பிரதாபனும் அவனது தாய் தந்தையரும் இப்போது நிற்கின்றனர்.

இழந்த மனைவிகளை மீண்டும் அடைவேன் என உறுதி பூண்டு மறுபடியும் பிரதாபன் மூதாட்டியைத் தேடி காட்டிற்கு வருகிறான். அவரை நினைத்து உருக்கமாகப் பாடுகிறான். முடிவில் மூதாட்டி காட்சியளிக்கிறாள்.

மூதாட்டியின் ஆலோசனைப்படி, தேவகுமாரிகள் குளிக்க வரும் தடாகம் அருகில் சென்று தவமிருக்கிறான் பிரதாபன். முதலில் அவர்கள் கண்டும் காணாதது போல் பாசாங்கு செய்கிறார்கள். ஒருநாள் மனமிரங்கி அவனருகில் சென்று அவனது தவத்தைக் கலைக்க, அவன் கோபமுறுகிறான். தன்னுடன் வரும்படி அழைக்கிறான். இந்திரனுக்கு பயந்து அவர்கள் வர மறுக்க, தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டுகிறான். பிரதாபனை, அந்தத் தெய்வீகப் புடவையின் உதவியால் தேவலோகத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். இந்திரனிடம் தன் மனைவிகளைத் திரும்ப அனுப்பும்படி கேட்கிறான். தேவரிஷி, பிரதாபன் தன்னை தேவர்களுக்கு இணையானவன் என நிருபித்து, பின் அழைத்துச் செல்லலாம் எனக் கூறுகிறார். பாடல், மல்யுத்தம், வாள் சண்டை எல்லாவற்றிலும் வாகை சூடி, இந்திரனின் ஆசியுடன் தன் நான்கு மனைவிகளையும் அடைந்து, காளியின் அருளையும் பெறுகிறான்.

இந்தப் படத்தில், பி.யு.சின்னப்பாவின் நடிப்பிற்கு இணையாகச் சொல்லப்பட வேண்டியது படத்தின் பாடல்கள். மிக அருமையாக இசையமைத்திருந்தார் இசை மேதை ஜி.ராமனாதன்.

‘என்னை விட்டோடதடா, கண்ணா’

‘உள்ளம் எல்லாம் கொள்ளை கொண்டாய்
கண்ணா. கண்ணா’

போன்ற பாடல்கள் மிகப் பிரபலமடைந்து தமிழகமெங்கும் ஒலித்தது. இப்பாடல்கள் தவிர,

‘பரதேவதையே கருணை செய்வாயே’

‘ஏதுக்கித்தனை மோடிதான் உமக்கு
எந்தன் மீதய்யா’

போன்ற பாடல்களும் பிரபலமடைந்தன.

இந்திரலோகத்தில் பி.யு.சின்னப்பா பாடுவதாக ஒரு காட்சி. அக்காட்சியில் பாடுவதுடன், கொன்னக்கோல், வயலின், மிருதங்கம், கஞ்சிரா போன்ற வாத்தியங்களை பயன்படுத்துவது போன்று எடுக்கப்பட்ட காட்சி வெகுவாக அன்று சிலாகிக்கப்பட்டது. இம்மாதிரியான காட்சியைத் தான் பின்னாளில் ‘திருவிளையாடல்’ படத்தில் சிவாஜி கணேசன் ‘பாட்டும் நானே, பாவமும் நானே’ எனப் பாடி நடித்ததற்கான ஆதாரமாக அமைந்தது.

Jegathalaprathaban Posterஎன்.எஸ்.கிருஷ்ணன். டி.ஏ.மதுரம் ஜோடியின் நகைச்சுவை இப்படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய முக்கிய அம்சம். மதுரத்தைப் பாட்டி பாட்டி எனக் கூறுவது, முகத்தில் கறுப்பு அடித்துக் கொள்வது, முகாரி ராகத்தில் பாகவதர் ஒருவர் பாடும் ‘கன்றின் குரலைக் கேட்டு, கனிந்து வரும் பசுபோல்’ பாட்டிற்கு துக்கம் தாளாமல் அழுவது போன்ற காட்சிகள் நகைச்சுவை நிறைந்த காட்சிகள்.

இந்தப் படத்தில் இந்திரகுமாரியாக எம்.எஸ்.சரோஜினி, நாககுமாரியாக யு.ஆர்.ஜீவரத்தினம், அக்னிகுமாரியாக எஸ்.வரலட்சுமி, வருணகுமாரியாக டி.ஏ.ஜெயலட்சுமி ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் டி.பாலசுப்ரமணியம், டி.எஸ்.பாலையா போன்ற தேர்ந்த நடிகர்களும் நடித்திருந்தனர்.

சின்னஞ்சிறுமியாக, மேலாடை கூட இன்றி, பின்னாளில் மிகவும் பிரபலமாக குமாரி கமலா என அறியப்பட்ட பேபி கமலா, பாம்பு நடனம் ஒன்றை வெகு அழகாக ஆடியிருந்தார்.

பாபநாசம் சிவன் அவர்களின் சிறப்பான பல பாடல்கள் படத்தில் இடம் பெற்றிருந்தன.

பி.யு.சின்னப்பாவின் மிகச் சிறந்த படங்களைத் தேர்வு செய்தால், அதில் நிச்சயமாக இந்தப் படத்திற்கு முதலிடம் உண்டு.

இப்படம் மாபெரும் வெற்றிப்படம்.

– கிருஷ்ணன் வெங்கடாசலம்