Shadow

ஜே.ஆர். ரங்கராஜு

மாயலோகத்தில்..

வடுவூர் துரைசாமி ஐயங்கார் துப்பறியும் நாவல்கள் எழுதி புகழுடன் இருந்து வந்த அதே காலத்தில், அவரைப் போலவே துப்பறியும் நாவல்கள் எழுதுவதில் மிகவும் திறமை வாய்ந்த மற்றுமொரு எழுத்தாளர் ஜே.ஆர். ரங்கராஜு. ’ராஜாம்பாள்’ என்கிற இவரது நாவல் இதே பெயரில் திரைப்படமாக 1935இல் வெளிவந்தது. மீண்டும் இக்கதை இரண்டாவது முறையாக 1951இல் தயாரிக்கப்பட்டு இதே ‘ராஜாம்பாள்’ என்கிற பெயரில் வெளிவந்தது. நாடகக்காவலர் என்று பின்னாளில் பெயர்பெற்ற ஆர்.எஸ்.மனோகரின் அறிமுகப்படம் இது. இதில் மனோகர் கதாநாயகனாகத்தான் அறிமுகமானார்.

 கதாநாயகி சிலரால் கடத்திச் செல்லப்படுகிறார். கடத்தியவர்கள் அறியாதவாறு ஒரு துண்டுச்சீட்டில் ‘மோசம் போனேன் கோபாலா’ என்கிற வாக்கியம் ஒன்றை எழுதி அதைத் தரையிலே வீசிவிட்டுச் செல்வார். அதைக் கண்டெடுத்து அதை வைத்தே குற்றவாளிகளைக் கண்டுபிடித்துவிடும் துப்பறியும் நிபுணர் கதாநாயகன் மனோகர். படம் மிகவும் நன்றாக ஓடியது. திரை உலகில் மனோகர் என்கிற நடிகர் உதயமானார்.

இதே 1951இல் இன்னுமொரு திரைப்படம் டி.ஆர்.மகாலிங்கம் தயாரிப்பில் வெளிவந்தது. படத்தின் பெயர் மோகன சுந்தரம். இதுவும் ஜே ஆர். ரங்கராஜுவின் ஒரு துப்பறியும் நாவல்தான். டி ஆர் மகாலிங்கம் – எஸ்.வராட்சுமி பிரபலமான ஜோடி. ‘பாட்டு வேணுமா, உனக்கொரு பாட்டு வேணுமா?’ என்று டி.ஆர்.மகாலிங்கம் பாடியிருந்த இப்பாடல் பிரபலமான பாடல். இப்படம் ஒரு வெற்றிப்படம்.

‘சந்திரகாந்தா’ என்கிற இவரது நாவல் மிகவும் பிரபலமான நாவல். இந்தப் பெயரில் 1936இல் வெளிவந்த படம் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட படம். போலிச் சாமியார்களை கிண்டல் செய்யும் பல பகுதிகள் இக்கதையில் உண்டு. அவைகள் படமாகவும் ஆக்கப்பட்டிருந்தன. காளி என்.ரத்தினம் என்னும் நகைச்சுவை நடிகர் இப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் புகழ் பெற்றார். தேகாப்பியாசம் செய்ய அழகிகளை அழைப்பதான காட்சிகள் அக்காலத்தில் சற்று விரசமாக இருந்தது என்று பெரியவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் படம் வெற்றியடைந்ததாகத் தகவல்கள் இருக்கிறது.

இதே படம், மறுபடியும் 1960இல் ‘சவுக்கடி சந்திரகாந்தா’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது. டி.எஸ். பாலையா, டி.கே. ராமச்சந்திரன், காகா ராதாகிருஷ்ணன், சௌகார் ஜானகி, தாம்பரம் லலிதா போன்றோர் இப்படத்தில் நடித்திருந்தனர். ஆனால் படம் வெற்றி பெறவில்லை. இதன் பிறகு ஜே.ஆர்.ரங்கராஜுவின் கதைகள் எதுவும் படமாக்கப்படவில்லை. இவர், சினிமாவாகத் தயாரிக்கப்பட்ட சந்திரகாந்தா, மோகன சுந்தரம் நாவல்கள் தவிர ஆனந்த கிருஷ்ணன், ராஜேந்திரன் போன்ற நாவல்களும் எழுதியிருக்கிறார்.

– கிருஷ்ணன் வெங்கடாசலம்