Shadow

தி கான்ஜூரிங் 2 விமர்சனம்

Conjuring Tamil Vimaarsanam

‘தி கான்ஜூரிங்’ என்றால் இந்திரஜாலம் அல்லது அமானுஷ்யச் சம்பவங்கள் எனப் பொருள் கொள்ளலாம். இப்படத்திற்கு இரண்டாவது பொருளே பொருந்தும்.

தூங்கிக் கொண்டிருக்கும் 11 வயது சிறுமியான ஜேனட், விழிக்கும் பொழுது கீழ்த் தளத்தில் இருக்கிறாள்; அந்தரத்தில் மிதக்கிறாள்; 72 வயது முதியவரின் குரலில் பேசுகிறாள். அவள் ஆவியால் பீடிக்கப்பட்டது உண்மைத்தானா அல்லது அந்தச் சிறுமியின் குடும்பம் நாடகமாடுகிறதா என அறிய, அமெரிக்கத் திருச்சபை எட் – லோரைன் தம்பதியை இங்கிலாந்து செல்லுமாறு பனிக்கிறது. பின் என்னாகிறது என்பதுதான் கதை.

பேய்ப் படம் என்பதை மீறி படம் சில இடங்களில் மிக அற்புதமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. “நான் ரொம்ப சோர்ந்துட்டேன். என்னை யாரும் நம்ப மாட்டேங்கிறாங்க” என ஆவியால் பீடிக்கப்படும் 11 வயது பெண் நம்பிக்கையிழந்து சொல்கிறாள். எல்லாவற்றையும் பக்கத்திலேயே இருந்து பார்க்கும் அவளது அக்கா மார்க்ரெட் கூட, “நீ தான் இப்படிலாம் நடிக்கிறியா? ஏன்?” எனக் கேட்டு விடுகிறாள். ‘இது என் வீடு. நீங்க வெளில போகலைன்னா, உங்க அனைவரையும் கொல்லப் போறேன்’ என அவளது காது பின்னால் ஒரு குரல் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. ஜேனட்டின் துடிப்பை, மேடிசன் வொல்ஃப் தன் நடிப்பில் பிரதிபலித்து உங்களை மிகவும் கவர்ந்து விடுவாள். ஒரு சிறுமிக்கு நேரும் துன்பங்களுக்கு உள் நோக்கம் கற்பித்து, ‘பேய் இல்லை’ என முடிவுக்கு வருகின்றனர்.

படத்தின் தொடக்கம் முதலே ‘வேலக்’ எனும் அமானுஷ்ய உருவம் எட்-டையும் லோரைனையும் பயமுறுத்துகிறது. லோரைன் அஞ்சி, அமிட்டிவில்லியில் தீங்கு விளைவிக்கக் கூடிய ஆவிகள் உள்ளதென அறிக்கை சமர்ப்பித்து, ஆவிகளை அமைதிப்படுத்தும் வேலைக்குத் தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்து விடுகிறார். ஆனால், அமெரிக்கத் திருச்சபை இங்கிலாந்திலுள்ள ஜேனட் வழக்கின் உண்மைத்தன்மையை ஆராயும்படி கேட்டுக் கொள்கிறது.

‘என்னை யாரும் நம்ப மாட்டேங்கிறாங்க’ என்ற சோர்ந்த மனநிலைக்கு, எட்-டும் லோரைனும் கூட அவர்கள் சிறு பிராயத்தில் தள்ளப்பட்டுள்ளனர். அதிலிருந்து எப்படி மீண்டனர் என்ற உப காதல் கதை சுவாரசியமானது. எட்-டும் லோரைனும், இப்படி நிறைய பேய் வழக்குகளைக் குறித்து ஆவணப்படுத்தியுள்ளனர். அதைப் பற்றிக் குறிப்பிடும், “ ‘தி கான்ஜூரிங்’ பல பாகங்கள் எடுக்கக் கூடியளவுக்கு எட்-டும் லோரைனும் ஆவிகளால் நிகழ்ந்த அமானுஷ்யச் சம்பவங்களைத் தொகுத்துள்ளனர். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த பாகத்தினைக் குறித்து முடிவு எடுக்கப்படும்” என்றார் இயக்குநர் ஜேம்ஸ் வான். பிரம்மாண்ட வெற்றியை ஈட்டிய, ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் 7 படத்தை இயக்கியதும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.

Lorraine Waren

எட் வாரெனாக பேட்ரிக் வில்சனும், லோரைன் வாரெனாக வேரா ஃபார்மிகாவும் லட்சிய தம்பதியாக நடித்துள்ளனர். அவர்களுக்குள் இருக்கும் காதலும் அந்நியோன்யமும், முந்தைய பாகத்தினை விட இப்படத்தில் அழகாகக் காட்டப்பட்டுள்ளது. புலனாய்வுக்கு வரும் காவல்துறை அதிகாரிகளையும் அமானுஷ்ய சக்தி அலைக்கழிப்பது அதகளம். தமிழ் டப்பிங்கும், நகைச்சுவையாக்கப்படாமல் படத்தின் சீரியஸ்னஸைத் தக்க வைக்கிறது. தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சாத்தான், ஓர் ஆவியை முன்னிறுத்தி ஆடும் கண்ணாமூச்சி ஆட்டம் த்ரில்லர் போல் சுவாரசியமாகவும் உள்ளது. ஜேனட் காப்பாற்றப்பட வேண்டுமென க்ளைமேக்ஸில் பதைபதைப்பை உருவாக்கியுள்ளனர்.