Shadow

நைட் க்ராலர் (Nightcrawler) விமர்சனம்

Night Crawler நைட் க்ராலர்

நைட் க்ராலர் என்பது பிரபலமான மார்வல் காமிக்ஸ் பாத்திரம். ஆனால் இப்படத்தின் தலைப்போ, இரவு வேளையில் வேலை செய்யும் சுவாரசியமான மனிதன் ஒருவனைச் சுட்டிக் காட்ட வைக்கப்பட்டுள்ளது. தமிழில் பிரபலமாகி வரும் ‘சூது கவ்வும்’ பாணி திரைப்படமிது!

லூ என்கிற லூயிஸ், தொழில்முறை திருடன் அல்லன். அவனுக்கு ஒரு வேலை தேவைப்படுகிறது. சாலையில் நடக்கும் ஒரு விபத்தில், எதேச்சையாகப் பார்க்கும் ஒன்றைத் தனக்கான தொழிலாக வரித்துக் கொள்கிறான். அதற்கு மூலதனமாக ஒரு சைக்கிளைத் திருடுகிறான். எதையும் விரைந்து கற்றுக் கொள்ளும் லூ, நினைத்ததை சாதிக்க எதையும் செய்யத் தயாராக உள்ளவன். பெரிதும் திருப்பங்கள் அற்ற கதை எனினும், விறுவிறுப்பான திரைக்கதையாக அதை மாற்றியுள்ளார் அறிமுக இயக்குநர் டேன் கில்ராய்.

ஜேக் க்லைன்ஹால் தனியொருவராக படத்தைச் சுமக்கிறார். அவரது முக பாவனைகளும், வசனம் உச்சரிக்கும் த்வனியும்தான் படத்தின் மீது ஈர்ப்பு உண்டாக்கும் காரணிகளாக உள்ளன. படத்தின் வசனங்கள், அதன் தீவிரத்தன்மையைக் குறைத்து படம் நெடுகிலும் சிரிக்க வைக்கின்றன. ரிஸ் அகமெத்தை தனக்கு அசிஸ்டென்ட்டாகச் சேர்க்கும் காட்சியை உதாரணமாகச் சொல்லலாம். 

மனிதனுக்கு விபத்து மீதும், ரத்தம் மீதும் உண்டான ஈர்ப்பை சரியாகப் புரிந்துக் கொள்கிறான் லூ. திறமையாகப் பேசுதல், கூர்ந்து கவனித்தல், திட்டமிட்டுச் செயலாற்றுதல் என லூ முன்னேறுகிறான். எனினும் தனக்குத் தேவையானதை கச்சிதமாகக் கேட்டுப் பெறவும், தேவையற்றவற்றை முற்றிலும் ஒழித்துக் கட்டவும் தெரிந்து வைத்திருப்பது அவனது வளர்ச்சிக்கான சூட்சமம்.

ரெனி ருசோஇந்த டிஜிட்டல் உலகத்தில், நம் அனைவருக்குமே ஓடியாக வேண்டிய கட்டாயமும் அழுத்தமும் உள்ளது. அதுவும் ஓட்டம் தடையின்றிச் செல்ல, சில சமரசங்கள் தேவைப்படுகிறது. அப்படி சமரசம் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறார் நினா. வரம் கொடுத்தவர் தலையில் கை வைக்கும் கதையாக உள்ளது லூ நினாவிடம் பேசும் காட்சி. நினாவாக நடித்திருக்கும் ரெனி ருசோ தன் மன உணர்வுகளை அழகாக கண்களின் மூலம் வெளிப்படுத்துகிறார்.

மிகக் குறைவான கதாபாத்திரங்களைக் கொண்டு, மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்டிருந்தாலும் படத்திலொரு பிரம்மாண்டத்தை உணர முடியும். அதன் காரணம் லூ ஏனைய கதாபாத்திரங்களின் மனதோடு விளையாடும் ஆடு-புலி ஆட்டமே! இந்த ஆட்டத்தின் சிறப்பம்சம், லூதான் எப்பொழுதும் புலியாக இருக்கிறான். படத்தின் தலைப்பும், குறியீடாய் அதைத்தான் உணர்த்துகிறது போலும்.