Shadow

மிருதன் விமர்சனம்

Miruthan vimarsanam
மிருதம் – பிணம்; மிருதன் – பிணமாய் வாழ்பவன் (ஜோம்பி)

ஒரு வைரஸால் மனிதர்கள் மிருதர்களாக உருமாறுகின்றனர். பின் என்னாகிறது என்பதுதான் கதை.

அமைச்சராக வரும் R.N.R. மனோகர், அவரது அறிமுகக் காட்சியைத் மற்ற காட்சிகளில் எல்லாம் அதகளப்படுத்துகிறார். செக் போஸ்ட்டில் அவர் கெத்து காட்டி விட்டு, ஜெயம் ரவியைப் பார்த்து, “இதுக்குத்தான் தம்பி அரசியலில் கொஞ்சம் டச் வேணுங்கிறது” எனும் பொழுது திரையரங்கம் சிரிப்பொலியால் அதிர்கிறது. அதே போல், காளி வெங்கட்டின் சுடும் திறமைக்கும் சிரிப்பொலி எழுந்து அடங்குகிறது.

ட்ராஃபிக் போலிஸ் கார்த்தியாக ஜெயம் ரவி ஜம்மென்று இருக்கிறார். வழக்கமான தமிழ் சினிமா அண்ணன் தான் என்றாலும், தங்கை அனிகாவின் (என்னை அறிந்தாலில் த்ரிஷாவின் மகள்) க்யூட்னெஸால் அதுவும் ரசிக்கும்படி இருக்கிறது. மிருதர்கள் சுடப்படும் பொழுது, அவர்கள் வெறும் நோயாளிகள் என்று பரிதாபப்படும் மருத்துவர் ரேனுகா, க்ளைமேக்சில் செய்யும் அட்டகாசம் தமிழ் சினிமா நாயகிகளுக்கு ஓர் உய்வில்லை என்பதற்கான எடுத்துக்காட்டு. மருத்துவர் ரேனுகாவாக லட்சுமி மேனன் நடித்துள்ளார்.

ஒரே ஒரு நொடி கூட விரயம் செய்யாமல், முதல் ஃப்ரேமிலேயே கதைக்குள் போகின்றனர். படத்தின் தலைப்பைக் கூடக் கச்சிதமாக இடம் பார்த்தே பொருந்துமாறு போடுகின்றனர். 106 நிமிடப் படமே என்பதால் இழுவையின்றி விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாமல் ஓடுகிறது.

நாயகர்கள் உயிரைக் கொடுக்க முன் வந்தால்தான் கொஞ்சமாவது சட்டை செய்வேனென்ற நாயகி தவிர்த்து, இயக்குநர் சக்தி செளந்தர் ராஜன் செமயாக கட்டிப் போடுகிறார். ஜோம்பிகள் அணுகும் போது மனதை நெருடும் இசை எழாமல், நாயகனின் ஹீரோயிஸத்துக்கு துதி போடும் பின்னணி இசையே ஒலிப்பதால், ஜோம்பிகள் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை. திருப்பங்கள் பெரிதாக ஏதுமின்றி படத்தின் கதை நேர்க்கோட்டில் பயணிக்கிறது. எனினும் படம் தனது பரீட்சார்த்த முயற்சியையும் மீறி பார்வையாளர்களை ஈர்க்கவே செய்கிறது.