Shadow

ஸ்பெக்டர் விமர்சனம்

Spectre Tamil Review

ஸ்கைஃபாலில் விதைத்த எதிர்பார்ப்பை மிக விரிவாகப் பூர்த்தி செய்துள்ளார் சாம் மெண்டீஸ்.

இதுவரை பார்த்து வந்த 007 படங்களின் இலக்கணத்தை ஸ்கைஃபால் படத்தில் உடைத்திருந்தார் சாம் மெண்டீஸ் எனும் மிதவாதி. இப்படத்தில் ஜேம்ஸ் பாண்ட் படங்களின் இலக்கணத்தில் கவனம் செலுத்தியிருந்தாலும், அது அளவுக்கு மீறாமல் பார்த்துக் கொண்டுள்ளார். உதாரணத்திற்கு, வழக்கமான கார் சேஸ் (chase) படத்தில் உண்டு எனினும் அந்த அதி நவீன காரை உருக்கலைக்காமலோ, வெடித்துச் சிதற விடாமலோ நீரில் மென்மையாக மூழ்க வைக்கிறார்.

வில்லன் ஒரு பட்டனைத் தட்டினால் உலகமே அழிந்து விடும்; அப்பொழுது பாண்ட்.. ஜேம்ஸ் பாண்ட் ஸ்டைலாக வந்து உலகைக் காப்பாற்றுவார் என்ற ஒன்-லைனை, ஸ்கைஃபால் படத்தில் உடைத்தது போலவே இப்படத்திலும் உடைத்துள்ளார் மெண்டீஸ். ‘நீ எவ்வளவு பெருமைப்பட்டுக் கொண்டாலும்.. நீ ஒரு கொலைக்காரன் என்பதுதான் ஒரே நிஜம்!’ என 007 கதாபாத்திரத்தைப் பற்றிய பிம்பத்தைக் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பதிய வைக்கிறார் மெண்டீஸ். ஒரு கட்டத்தில், ‘என் தொழில் கொல்வது’ என பாண்ட்டையே நம்ப வைத்து விடுகின்றனர். 😉

ஐயன் ஃப்ளெமிங்கின் சாகச நாயகனை மனிதனாக்கி அழகு பார்த்துள்ளார் மெண்டீஸ். அவரது திரைக்கதை அமைக்கும் குழு இம்முறை முடியால் மலையைக் கட்டி இழுத்துள்ளனர். கதைகள், கிளைக்கதைகள் என படம் இரண்டரை மணி நேரம் நீண்டாலும், அனைத்துக்கும் ஆரம்பப் புள்ளி ஒரு தனி மனித விரோதம் என்றே முடித்துள்ளார். ஆம், ஸ்கைஃபாலும் இதே கதைதான்.

படத்தின் ஓப்பனிங் காட்சி, மெக்ஸிகோவின் ‘டே ஆஃப் தி டெட் (Day of the Dead)’ பிரம்மாண்டக் கொண்டாட்டத்தில் இருந்து அமர்க்களமாகத் தொடங்குகிறது. ஆனாலும் அந்த ஆரம்பப் பரபரப்பு பின் படத்தில் மெல்ல மறைந்து விடுகிறது. காட்சிகளில் பரபரப்பு இல்லையே தவிர, திரைக்கதையின் விறுவிறுப்பு கடைசி வரை குறையவே இல்லை. காரணம் பாண்ட்டுக்கு பெரிய டெட்லைன் என எதுவுமில்லை. படம் ஒரு தேடல். பாண்ட், தன்னைத் தானே உணரவும் தன் கடந்த காலத்தை அறிந்து கொள்ளவும் உதவுகிறது. வசனங்களில் உள்ள கிண்டலும் நகைச்சுவையும், படத்தின் சுவாரசியத்தை கடைசி வரை தக்க வைக்கிறது. நாம் தான் சிரிப்போமே அன்றி, டேனியல் க்ரெய்க் தன் ரஃப் & டஃப் தனத்தை கடைசி வரை விடாமல் சால்ட் & பெப்பர் கெட்டப்பில் கெத்தாக வலம் வருகிறார். டாக்டர் மேடலின் ஸ்வானாக வரும் ஃப்ரெஞ்ச் நடிகை லெயா செதூஸ் படத்திற்கு அற்புதமான தேர்வு. பாண்ட்டின் மாற்றத்திற்கு காரணமாக வரும் கிரியா ஊக்கியான இப்பாத்திரத்திற்கு, அனுபவம் மிக்க நடிகை தான் வேண்டுமென பிரத்தியேகமாகத் தேர்ந்தெடுத்துள்ளார் சாம் மெண்டீஸ். லெயா செதூஸ் கலக்கிவிட்டார்.

‘ஸ்பெக்டர்’ எனும் நிறுவனம், ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்குப் புதிதன்று. பழைய பாண்ட் பட வில்லன்களை எல்லாம் ஸ்பெக்டரின் அங்கத்தினராக அழகாக கொண்டு வந்துவிட்டனர். ஆனால், அந்நிறுவனத்தின் தலைவராக நடித்திருக்கும் க்றிஸ்டோஃப் வால்ஸ் புதியவர். ‘உன் எல்லா வலிகளுக்கும் நான் தான் காரணம்’ என்கிறார் 007-ஐப் பார்த்து (அப்புறம் என்ன சொன்னார்னு தெரில. வசனத்தில் ஆபாசம்னு ‘கட்’ போட்டுட்டார்களாம்! முத்தக் காட்சிகளை ‘கட்’ செய்ததோடு உங்க கடமையுணர்ச்சி நின்னிருக்கலாம் ஆஃபீஸர்ஸ். ஆனால், அதிலுமொரு சிக்கல் இருக்கத்தான் செய்கிறது. முத்தமிட்டுக் கொண்டே நிறைய விஷயங்களை மோனிகா பெல்லூச்சியிடம் கறக்கிறார்).

பட்டிஸ்டாவைச் செல்லமாக, தி அனிமல் என WWE போட்டிகளில் அழைப்பார்கள். அந்தப் பெயரை நிரூபிக்கும் வண்ணம் டெரராக அறிமுகம் ஆகிறார். இவர் ஸ்பெக்டரின் கொலையாளி; நமது பாண்ட் அரசாங்கக் கொலையாளி என்பதுதான் படம் உணர்த்தும் நகைமுரண். இவர்கள் இடும் சண்டையை விட, ஒவ்வொரு ஃப்ரேமிலும் ஓயத்தே வான் ஓயதேமா (Hoyte van Hoytema)-வின் ஒளிப்பதிவும், சாம் மெண்டீஸின் ஆஸ்தான இசையமைப்பாளரான தாமஸ் நியூமேனின் பின்னணி இசையும் போட்டி போட்டுக் கொண்டு நம்மை ஆக்கிரமிக்கின்றன.

ஜனநாயகத்தின் மீது அவநம்பிக்கை கொண்டு உலகையே கண்காணிக்க நினைக்கும் பிரிட்டிஷ் உயரதிகாரி, CNS (Centre for National Security) லோகோ மீதே விழுவது நல்ல குறியீடு.

Spectre is spectacular!