Shadow

ஸ்பெஷல் 26

தனது முதல் படத்திலேயே எத்தனை பேரால் ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையே ஈர்க்க இயலும்? அப்படி ஈர்த்த ஒருவர் தான் ‘நீரஜ் பாண்டே’. 2008-ல் வெளிவந்த ‘எ வெட்னஸ்டே!’ என்ற  இந்திப் படத்தின் இயக்குநர். இப்படம் ‘உன்னை போல் ஒருவன்’ என கமல் ஹாசன் நடிப்பில் தமிழிலும் ரீ மேக் செய்யப்பட்டது. இந்தியில் இருந்து தமிழுக்கு படம் ரீ-மேக் செய்யப்படுவது ஒன்றும் புதிதில்லை. ஆனால் இவரது படம் ‘காமன் மேன்’ என்ற பெயரில் ஆங்கிலத்திலும் ரீ-மேக் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் “ஸ்பெஷல் 26” என்ற தனது இரண்டாவது படத்தை இயக்கியுள்ளார் நீரஜ் பாண்டே.

இந்தியா முழுவதும் உள்ள முக்கியமான அரசியல் பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்களிடம் சிபிஐ/வருமான வரித்துறை அதிகாரிகள் என்று ஏமாற்றிப் பணத்தைத் திருடுகிறது் ஒரு கும்பல். அப்படி டெல்லியில் ஒரு மந்திரியின் வீட்டை போலீஸின் உதவியோடு சோதனையிட்டு.. பணத்தைக் களவாடுகிறது அக்கும்பல். சோதனையில் உடனிருந்த எஸ்.ஐ.க்கு, வந்தவர்கள் போலி சிபிஐ அதிகாரிகளென பிறகு தான்  தெரியவருகிறது. பின்னர் அவருடைய உதவியோடு உண்மையான சிபிஐ அதிகாரிகள் திருடர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகின்றனர். அந்தக் கும்பலில் ஒருவரை அடையாளம் கண்டுகொள்ளும் சிபிஐ அதிகாரிகள்.. அவரது தொலைபேசியை ஒட்டு கேட்கின்றனர். அந்தக் கும்பலின் அடுத்த குறி மும்பையில் உள்ள பிரபலமான நகை கடை என்பதை அறிந்துக் கொள்கின்றனர். அவர்களை கையும் களவுமாக பிடிக்க நினைக்கும் சிபிஐ-யிடம் அந்தக் கும்பல் சிக்கியதா என்பது தான் கதை.

1987ல் நடந்த ஓர் உண்மை சம்பவத்தினைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இது. போலியான 26 சிபிஐ  அதிகாரிகள் பல கோடி மதிப்புள்ள நகைகளையும், பணத்தையும் மும்பை சவேரி பஜாரில் உள்ள ஓபரா ஹவுசில் கைப்பற்றினர். அது கருப்புப் பணம் என்பதால் வழக்கும் பதியப்படவில்லை. அந்தக் கில்லாடிகள் யாரென இதுவரை இன்னும் கண்டுபிடிக்கப்படவும் இல்லை என்பது தான் இதில் ஸ்பெஷல் நியூஸ். இந்தக் கருவை எடுத்துக் கொண்டு ஸ்பெஷல் 26ல் பட்டையைக் கிளப்பியுள்ளார் நீரஜ் பாண்டே.  சுவாரசியத்திற்கு பஞ்சமே இல்லாத படம் என்ற பொழுதும்.. சிபிஐ-க்கு ஆள் எடுப்பதாக விளம்பரம் கொடுத்து நாயகன் வாக்-இன் இன்டர்வியூ வைப்பதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்.

போலி சிபிஐ அதிகாரியாக வரும் அக்ஷய் குமார் தான் படத்தின் நாயகன். நாயகனின் கூட்டாளியாக அனுபம் கர், உண்மையான சிபிஐ அதிகாரியாக மனோஜ் பாஜ்பாய், எஸ்.ஐ.யாக ஜிம்மி ஷெர்கில் மற்றும்  பெண் காவலராக திவ்யா டட்டா நடித்துள்ளனர் . கதாபாத்திரங்கள் அனைவருமே தமது பங்களிப்பை அருமையாக படத்தில் வெளிப்படுத்தியுள்ளனர். இவர்களுடன் அழகான காஜல் அகர்வாலும் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

மந்திரியின் வீட்டில் ரெயிட் நடத்தும் பொழுதும் சரி, தனது மகளின் திருமணத்தின் போது  ஒவ்வொரு பிள்ளையையும் அக்ஷய் குமாருக்கு அறிமுகபடுத்தும் பொழுதும் என பல இடங்களில் அனுபம் கர் அசத்தியுள்ளார். அனுபம் கர்ரும், ஜிம்மி ஷெர்கிலும்நீரஜ் பாண்டேவின் முந்தையப் படத்திலும் நடித்துள்ளனர். படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மற்றொன்று.. அக்ஷய் குமார் காஜல் அகர்வாலின் காதல். படத்தின் வேகம் பாதிக்காதவாறு அழகாக காட்டியிருப்பதற்காகவே இயக்குநரைப் பாராட்ட வேண்டும். இருவரும் கண்களாலேயே பேசிக் கொள்ளும் பால்கனி காட்சியில் காஜல் வெளிப்படுத்தும் சோகம் கவித்துவமாக காட்சியமைக்கப்பட்டுள்ளது.

மனோஜ் பாஜ்பாய் தன்னுடைய அறிமுக காட்சியிலிருந்தே பார்வையாளர்களின் மனதை கொள்ளைக் கொள்கிறார். முதல் காட்சியில் ஒரு பயங்கரவாதியை பிடிக்க ஓடி மூச்சு நிறைய வாங்கும் பொழுதும்,  அலுவலகத்தில்  குறட்டை விட்டு தூங்கும் பொழுதும் எதார்த்தமாக கலக்கியிருக்கிறார். மேலும் தன்னுடைய மேலதிகாரியிடம், நிலுவையில் இருக்கும் பதவி மற்றும் சம்பள உயர்வை உடனே  அளிக்கா விட்டால் தன்னுடைய அன்றாட செலவுக்காக லஞ்சம் வாங்கி வேண்டியிருக்கும் என்று மனோஜ் பாஜ்பாய் கூறும்பொழுது திரையரங்கம் சிரிப்பொலியில் நிறைகிறது.

படத்தில் மூன்று பாடல்கள் உள்ளது. இருவரும் பால்கனியில் சந்தித்துக் கொள்ளும் போது வரும்  ‘முஜ்மே து’ மெலடி ரசிக்க வைக்கிறது. பின்னர் திருமணத்தின் போது வரும் ‘கோர் முக்தே..’ என தொடங்கும் பாடல் பார்வையாளர்களையும் சேர்த்து நடனமாட செய்கின்றது. பின்னணி இசையும் படத்திற்கு வலு சேர்க்கிறது.

ஐந்து வருடங்கள் என்பது நீண்ட இடைவெளி என்றாலும் நீரஜ் பாண்டே மீண்டுமொரு அற்புதமான படத்தை அளித்துள்ளார். விரைவில் தமிழிலும் இப்படம் ரீ-மேக் செய்யப்பட்டு விடும் என நம்புவோமாக!! 

– இரகுராமன்

Leave a Reply