Search

ஹார்வார்ட் தமிழ் இருக்கை – தள்ளிப்போகாதே, தள்ளிப்போடாதே!

Harvard Tamil Chair

ஹார்வார்ட் தமிழ் இருக்கையை வாழ்த்தி கவிஞர் தாமரை எனக்கு ஒரு கடிதம் எழுதியதுடன் ஹார்வார்ட் தமிழ் இருக்கைக்கு ஒரு லட்சம் ரூபா நிதியுதவியும் அளித்திருக்கிறார். அவர் எழுதிய மடல் இதுதான்.

அன்புள்ள அ.முத்துலிங்கம் ஐயா அவர்களுக்கு,

வணக்கம். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் ‘தமிழ் இருக்கை’ பற்றி நான் ஏற்கெனவே அறிந்திருந்த போதிலும், உங்களுடனான தொலைபேசி உரையாடலில் கூடுதலாகத் தெரிந்து கொண்டேன். தாங்கள் இதற்காக அமைக்கப் பட்டிருக்கும் குழுவில் ஒருவர் என்பதறிந்து மிகுந்த மகிழ்ச்சி கொண்டேன்.

முதன்முதலாக இது பற்றித் தெரியவந்த போது எனக்கு ஏற்பட்ட முதல் எண்ணம், ‘ தமிழர்கள் நாம் எப்போது பார்த்தாலும் தமிழ்ப் பெருமை பேசித் திரிகிறோம், ஆனால் இப்போதுதான் ஹார்வர்டில் தமிழ் இருக்கை அமைப்பது பற்றி யோசிக்கிறோம், ஏன் இந்த எண்ணம் முதலிலேயே தோன்றவில்லை?’ என்பதுதான். எப்படியோ திருமிகு வைதேகி ஹெர்பர்ட் அவர்களின் பாராட்டு விழாவில் இதற்கான விதை ஊன்றப்பட்டு, இதோ இப்போது செடி தழைத்தோங்கத் தொடங்கி விட்டது.

திரைப்படப் பாடல்களில் ஆங்கிலம் கோலோச்சிய காலத்தில் தமிழால் முடியும் என்று காட்டுவதற்காகவே நான் முனைந்து நின்றேன் என்பதால், ஹார்வர்டில் தமிழ் இருக்கை பற்றிய செய்தி எனக்கு எத்தனை உவகை அளித்திருக்கும் என்று விவரிக்கத் தேவையில்லை. இதற்காக ஆகும் ஆறு மில்லியன் செலவில் முதல் ஒரு மில்லியன் டாலர்கள் செலுத்தித் துவங்கி வைத்திருக்கும் மருத்துவர் ஜானகிராமன் அவர்களுக்கும் அவரது நண்பர் திரு. திருஞானசம்பந்தம் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஹார்வார்ட் தமிழ் இருக்கை

ஏன் உலகத்துத் தமிழ்ச் செல்வந்தர்கள் மட்டும் செலுத்தி இருக்கையைத் துவங்கக் கூடாது என்ற நியாயமான கேள்விக்கு உங்கள் பதில் அதைவிட நியாயமானது. இத்தகைய பெருமைமிகு செயலுக்குத் தமிழர்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதே அது!

என் தாயார் வெ.வெ. கண்ணம்மாள் தமிழ் ஆசிரியர், (மறைந்த) என் தந்தையார் சு.ஆ. சுப்பிரமணியன் தமிழ்க் கவிஞர். தமிழ்ப் பற்றின் காரணமாகவே எனக்கும் என் அண்ணன், தங்கைக்கும் பெயர்கள் சூட்டினார்கள் ‘பூங்குன்றன், தாமரை, மல்லிகை’ என்று! எங்கள் குடும்பமே தமிழ்க் குடும்பம். தமிழ்வழிக் கல்வி, தமிழ் வழிபாடு, தமிழ்வழிச் சடங்குகள் என்று பயின்று வந்தோம், உச்சக்கட்டமாக, பொறியாளராகிய நான் தமிழ்ப் பாடல்கள் என்று தமிழ்த் திரைப்படத்திற்குள் நுழைந்தது காலம் இட்ட கட்டளை என்றே தோன்றுகிறது. என் தந்தையார் இப்போது இருந்திருந்தால் இந்தப் பணியை சிரமேற் கொண்டிருப்பார் என்பதில் ஐயமில்லை.

எங்கள் குடும்பத்தின் பெயரால் நாங்கள் அளிக்கும் சிறு தொகையான ரூ ஒரு இலட்சத்தைப் (1,00,000/-) பெற்றுக் கொள்ள வேண்டுகிறேன். நீங்கள் கேட்டுக் கொண்டபடி என் ரசிகர்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இந்தச் செய்தியை நீங்கள் எந்த விதத்திலும் உலகத் தமிழர்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கலாம்.

“தமிழர்களே வருக, தமிழ் இருக்கை தருக”.

ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை மலர்ந்தது என்ற செய்தி விரைவில் வந்து காதில் தேன் பாய்ச்சக் காத்திருக்கிறேன்.

அன்பும் வாழ்த்துகளும்!

தங்கள் உண்மையுள்ள,

– தாமரை

கவிஞர் தாமரையின் சமீபத்திய தள்ளிப்போகாதே பாடல் மிகப் பிரபல்யமானது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தது. நான் பலமுறை கேட்ட பாடல். இன்று இணையம் வழியாக 7,562,894 பேரைச் சென்றடைந்திருக்கிறது என்று உத்தியோகபூர்வமான தகவல் சொல்கிறது. பாடலைக் கேளுங்கள்.

இவர்கள் ஆளுக்கு ஒரேயொரு டொலர் கொடுத்தால் ஹார்வார்ட் தமிழ் இருக்கை நாளைக்கே உருவாகிவிடும்.

SIX EASY STEPS TO PAY UNDER CROWD FUNDING

1. Double click on this link https://www.generosity.com/…/harvard-university-s…/x/3630269
2. DONATE NOW – click
3. Change 50 to 70 or 100 or 500 or any amount and go down and click CONTINUE PAYMENT
4. In the BOX given write your email and click CONTINUE PAYMENT
5. Enter your name as it appears in your card, card number, expiry date, 3 digit number that is on the back of your card.
6.Give billing address, city, state, zip code and click SUBMIT PAYMENT

தமிழ் பற்றாளர்களே இன்றே நிதி வழங்குங்கள்
தள்ளிப்போகாதே, தள்ளிப்போடாதே

– அ. முத்துலிங்கம்