Shadow

ஹார்வார்ட் தமிழ் இருக்கை – கவிஞர் தாமரையின் பங்களிப்பும் வேண்டுகோளும்

கவிஞர் தாமரை

உலகப்புகழ் பெற்ற ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்று அமைய இருக்கிறது. தமிழ் தொடர்பான உருப்படியான வேலை என்றால் அது இதுதான்.

தமிழ் இருக்கை என்றால் என்ன? எதற்காக அது அமைக்கப்பட வேண்டும்?

உலகெங்கும் சுமார் 10 கோடித் தமிழர்கள் உள்ளோம். உலகின் பெரிய இருபது மொழிகளில் தமிழும் அடக்கம். உலகின் ஆறு செம்மொழிகளில் தமிழும் ஒன்று. எனினும் உலக அளவில் தமிழ்மொழிக்கான அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை. பன்னாட்டு ஆய்வாளர்களைக் கவர முடியாமையும், அதனால் உலகத்தரம் வாய்ந்த ஆய்வுகள் போதிய அளவில் மேற்கொள்ளப்படாமையும் இதற்கான காரணங்களில் அடங்கும்.

நமது பண்டைத்தமிழ் இலக்கியங்கள், உலக அங்கீகாரம் பெற்ற பிறமொழி இலக்கியங்களுக்கு நிகராக வெவ்வேறு கோணங்களில் ஆய்வு செய்யப்பட வேண்டியது அவசியம்.

பன்னாட்டு அளவில் முதன்மையான பல்கலைக்கழகங்களில் தமிழைக் கற்கவும் ஆய்வு செய்யவும் வாய்ப்பு ஏற்படும் போது இந்தப் போதாமைகள் சீர் செய்யப்படும். ஓர் உலகப் பல்கலையில் இதற்கான துறை அமையும் போது, அதற்குத் ‘தமிழ் இருக்கை‘ என்று பெயர். இந்த அடிப்படையில் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட உள்ள தமிழ் இருக்கையின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம்.

ஹார்வார்ட் பல்கலைக்கழகம் எங்குள்ளது? அதன் சிறப்பென்ன?

ஐக்கிய அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்தில் 1636 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உலகின் முன்னோடி பல்கலைக்கழகம் ஹார்வார்ட். உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் உலகத்தர வரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இங்கு இல்லாத துறைகளே இல்லை எனலாம். ஆராய்ச்சிகளுக்கு எல்லை என்பதும் இல்லை.

இங்கு மேற்கொள்ளப்பட்டு, நிரூபிக்கப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளை ஹார்வார்ட் பல்கலைக்கழகம் வெளியிடும்போது அவற்றை உலக சமுதாயம் ஒரு மனதாக ஏற்றுக் கொள்வது வரலாறு. இப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள், பயிற்றுவித்த ஆசிரியர்கள் என 47 பேர் கடந்த நூற்றாண்டுகளில் நோபல் பரிசு பெற்றிருக்கிறார்கள் என்றால் அதன் அறிவுச்சாரத்தைப் புரிந்து கொள்ளலாம்.

தமிழ் இருக்கை அமைய என்ன செய்ய வேண்டும்?

இந்த இருக்கை அமைய ஆறு மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ 40 கோடி) தேவைப்படுகிறது. இந்தத் தொகையில் முதல் ஒரு மில்லியன் டாலர்களை அமெரிக்கத் தமிழர்களாகிய மருத்துவர்கள் ஜானகிராமனும் திரு. திருஞான சம்பந்தமும் அளித்துத் துவக்கி வைத்திருக்கிறார்கள். மீதமுள்ள தொகையை உலகெங்கும் உள்ள தமிழர்களிடமிருந்து நன்கொடையாகப் பெற முடிவு செய்யப் பட்டுள்ளது.

ஏன் உலகத் தமிழ்ச் செல்வந்தர்களிடமிருந்தே பெறக்கூடாது?

பெருமைமிக்க இந்த இருக்கை அமையும்போது அதற்கான பங்களிப்பு உலகத்தின் அனைத்துத் தரப்புத் தமிழர்களிடமிருந்தும் வரவேண்டும், அனைவருக்கும் இந்த இருக்கையில் ஒரு பங்கு இருக்க வேண்டும் என்ற மேலான நோக்கமே, அனைவரும் நிதி தருக என்று அழைப்பு விடுப்பதன் நோக்கம்.

யார் இதற்குப் பொறுப்பாளர்கள்?

”தமிழ் இருக்கை இங்க்“ ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இலாப நோக்கமற்ற இந்நிறுவனம், இருக்கை தொடர்பான அனைத்துப் பணிகளையும் மேற்கொள்கிறது. இதை முதல் நன்கொடையாளர்கள் மருத்துவர்கள் ஜானகிராமன், திருஞானசம்பந்தம், புகழ்பெற்ற எழுத்தாளர் அ.முத்துலிங்கம், திருமிகு வைதேகி ஹெர்பர்ட் ஆகியோர் அடங்கிய ஆட்சிக்குழு நிர்வகிக்கிறது.

வைதேகி ஹெர்பர்ட் அவர்கள்தாம் சங்கநூல்கள் பதினெட்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். இவரைப் பாராட்ட எடுக்கப்பட்ட விழாவில்தான் தமிழ் இருக்கை பற்றிப் பேசி முடிவு எடுக்கப் பட்டது.

எப்படி நிதி அனுப்புவது? குறைந்த பட்சம் எவ்வளவு அனுப்ப வேண்டும் ?

நிதியை நேரடியாக இணையம் மூலம் ஹார்வார்ட் தமிழ் இருக்கைக்கே அனுப்பலாம். இதற்கான முகவரியும், நிதி அனுப்பும் வழிமுறையையும், கீழே நான் பகிர்ந்துள்ள எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் பதிவில் உள்ளது.

ஹார்வார்ட் தமிழ் இருக்கை – தள்ளிப்போகாதே, தள்ளிப்போடாதே!

இணையம் பயன்படுத்தி அனுப்பத் தெரிந்தவர்கள் அப்படியே அனுப்பலாம். (என் போன்ற பாமரர்கள் காசோலை, அல்லது வேறு வழிகளில் அனுப்பலாமா என்று கேட்டிருக்கிறேன். நம் சந்தேகங்களை அ.முத்துலிங்கம் ஐயா அவர்களிடமே வினவலாம். அவரது மின்னஞ்சல் முகவரி : appamuttu@gmail.com.

மேலும் இங்கே சென்னையில் உள்ள அன்பர் ஆர். ஐயாதுரை அவர்களும் உதவுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது எண் : 9884021221

பலருக்கும் மனமிருக்கும், பணமிருக்காது. அதற்காகக் கவலை வேண்டாம். அனைவரின் பங்களிப்பும் அவசியம். எவ்வளவு வேண்டுமானாலும் அனுப்பலாம். குறைந்த பட்சம் ரூ. 100/- என்று வைத்துக் கொள்வோமே! அவரவர் வசதிக்கு ஏற்ற தொகை!

நான் என் பங்காக, என் குடும்பத்தின் சார்பில் ஒரு இலட்சம் (1,00,000/) ரூபாய் அனுப்புகிறேன். என் தந்தையாரின் நினைவு நாள் இந்த மாதம் வருகிறது. அதை இங்கே நினைவு கூர்கிறேன். அந்த நாளின் நிகழ்வுகளுக்காக ஏற்பாடு செய்திருந்த தொகையை இதற்குத் தருகிறேன். என் தாயாரும் ‘அப்படியே செய்’ என்று சொன்னார்கள். என் அண்ணன், தங்கை இருவரும் தந்தையாரின் நினைவாக இதைச் செய்யலாம் என்று உடனே சம்மதம் தெரிவித்தார்கள். ஈடுசெய்ய முடியாத எங்கள் இழப்பிற்கு இது ஒத்தடம் தருவதாக இருக்கிறது.

 – கவிஞர் தாமரை