Shadow

நாடு விமர்சனம்

‘எங்கேயும் எப்போதும்’,  ‘ இவன் வேற மாதிரி’  போன்ற  திரைப்படங்களை இயக்கிய  சரவணன் இயக்கத்தில் தர்ஷன், மகிமா நம்பியார், சிங்கம் புலி, ஆர்.எஸ்.சிவாஜி ஆகியோர் நடிப்பில் இந்த வாரம் வெளியாக இருக்கும் திரைப்படம் “நாடு”.  மருத்துவர் ஒருவர் இல்லாமல் சொல்லொன்னா துன்பத்திற்கு உள்ளாகும் மலைவாழ் கிராம மக்கள், இறுதியாகத் தங்கள் கிராமத்திற்கு வரும் ஒரு பெண் மருத்துவரைத் தங்கள் கிராமத்தில் தக்க வைத்துக் கொள்ளப் போராடும் போராட்டமே இந்த “நாடு” திரைப்படம்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைத் தொடரில் இருக்கும் ஒரு மலைவாழ் கிராமத்தின் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால்,  உயிரிழப்புகள் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. அந்த மலைக்கிராமத்திற்கு நியமிக்கப்படும் மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவரும்  ஒரு வாரம் அல்லது ஒரு மாத காலத்திற்குள் மாற்றல் வாங்கிக் கொண்டு கிளம்பிவிடுகிறார்கள். இதனால் நம்பிக்கை இழந்து போகும் மலைவாழ் மக்கள் வேறு வழியின்றி அரசு பேருந்தைச் சிறை பிடித்து எங்களுக்கு ஒரு நிரந்தர மருத்துவர்  நியமிக்கப்பட்டால் மட்டுமே பேருந்தை விடுவிப்போம் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.  அவர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களிடம் சமாதானம் பேச வரும் மாவட்ட ஆட்சியர், வசதி இல்லாத காரணத்தால் இந்தக் கிராமத்திற்கு எந்த மருத்துவரும் வர விரும்பவில்லை என்றும், அப்படிக் கட்டாயமாக வியமித்து அனுப்பப்படும் மருத்துவர்களும் பணி இட மாறுதல் வாங்கிக் கொண்டு சென்றுவிடுவதாகவும் வருத்தம் தெரிவிக்கிறார்.  தற்போது பெரும் முயற்சி செய்து நான் ஒரு மருத்துவரை உங்கள் ஊருக்கு அனுப்புகிறேன், அந்த மருத்துவருக்கு இந்த ஊரையும் உங்களையும் பிடித்துவிட்டால், அவர் இந்தக் கிராமத்தை விட்டுப் போகமாட்டார்கள், அது உங்கள் கையில் தான் இருக்கிறது என்று கூறுகிறார். அதற்கு வேறு வழியின்றி கிராம மக்களும் உடன்பட, மருத்துவரும் வருகிறார்.  அவருக்குப் பிடித்தபடி நடந்து கொள்ள நாயகனும் ஊராரும் பெரும் போராட்டம் நடத்துகிறார்கள். இறுதியில் என்ன ஆனது என்பதே இந்த “நாடு” திரைப்படத்தின் கதை.

மலைவாழ் மக்களில் ஒருவராக நாயகன் தர்ஷன் நடித்திருக்கிறார்.  தர்ஷனிடம் இவ்வளவு முதிர்ச்சியான நடிப்பை ஒருகாலும் எதிர்பார்த்ததில்லை என்பதால்  அவரின் பண்பட்ட நடிப்பு இன்ப அதிர்ச்சியாகவும், வசீகரிப்புடனும் இருக்கிறது. தற்கொலைக்கு முயன்ற தங்கையைக் காப்பாற்ற தோளில் தூக்கிக் கொண்டு மூச்சு முட்ட காடு மலை தாண்டி சாலைகளில் ஓடிச் சென்று எதிர்படும் ஆம்புலன்ஸில் ஏற்றும் காட்சியில் இருந்து, புதிதாகத் தங்கள் ஊருக்கு வரும் மருத்துவரை மகிழ்வித்து, அவருக்கு இந்த ஊரைப் பிடித்த இடமாக மாற்ற ஊர்காரர்களோடு சேர்ந்து அவர் எடுக்கும் முடிவுகளில் எல்லாம் அறியாமையின் ஆதிக்கம் வீற்றிருந்தாலும் கூட  அந்த செயல்பாடுகளின் நோக்கமும் அதற்குப் பின் இருக்கும் ஓர் ஊரின் எதிர்காலமும், வலியும் நம்முள் அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன.  மருத்துவர் தங்க வரும் இடத்தை எல்லா வசதிகளுடன் கூடியதாக மாற்ற முயல்வதில் இருந்து, அவர் குடிக்கும் டீ, காபி, சாப்பிடும் உணவு, காலையில் அவர் வாக்கிங் செல்வதற்கான சூழல்,  மலைவாழ் மக்களின் உடலில் இருந்து வரும் வாசனைகளை மாற்றுவதற்கான முயற்சி எனத் தொடங்கி, இறுதி முயற்சியாக மருத்துவரை தங்கள் ஊரிலே தங்க வைப்பதற்கு அவரைத் தங்கள் ஊர் மருமகள் ஆக்கிவிடலாமா என்று முட்டாள்த்தனமாக கேட்டு, அந்த முட்டாள்த்தனமான கேள்வியை எப்படி அவரிடம் முன் வைக்க வேண்டும் என்று நடித்துக் காட்டும் ரிகர்சல் காட்சியில் அனைவரையும் கண் கலங்க வைக்கிறார்.  ‘அப்படி உங்களிடம் கேட்பதற்கு எங்களுக்கு  தகுதி இல்லை தான்.  ஆனால் ஏன் அப்படிக் கேட்கிறோம் என்பதற்கு எங்களிடம் வலுவான காரணம் இருக்கிறது’ என்று சொல்லும் நொடியில் நம் மனம் உடைந்து அந்த மலைவாழ் மக்களுக்காகக் கண்ணீர் சொறிகிறது. அது தர்ஷனின் அந்த நடிப்புக்குக் கிடைத்த வெற்றி என்றே சொல்லலாம். ஹாட்ஸ் ஆஃப் தர்ஷன் ப்ரோ!

மருத்துவராக மகிமா நம்பியார்.  வேண்டா வெறுப்பாக வரும் மருத்துவராக இருந்தாலும் அதீத வெறுப்பையோ கோபத்தையோ காட்டாமல், தான் இங்கு இருக்கப் போகும் குறுகிய காலத்தில் தனக்கான வேலையை ஒழுக்கத்துடன் செய்து முடிக்க வேண்டும் என்கின்ற கண்ணியம் தவறாத அந்தக் கடப்பாடு, அந்த மருத்துவர் கதாபாத்திரத்தையே புனிதமாக்குகிறது.  ஒரு கட்டத்திற்கு மேல் அந்த மலைவாழ் கிராம மக்களின் வாழ்க்கை முறையையும், அவர்களின் பிரச்சனைகளையும், அவர்கள் தனக்காக, தான் அந்த மலை கிராமத்திலேயே இருக்க வேண்டும் என்பதற்காக செய்யும் செயல்களை அறிந்து குற்றவுணர்ச்சியில் கூனிக் குறுகிப் போய் கண்கலங்க இடத்தில் நம் உள்ளங்களைக் கண்ணீரால் சிதறடிக்கிறார். ‘நானே விரும்பினாலும் என்னால் இங்கு  இருக்க முடியாது; தயவுசெய்து என்னைக் குற்றவுணர்க்கு ஆளாக்காதீர்கள்’ என்று உடைந்து அழும் போது குற்றவுணர்வுக்கும் மேலான ஒரு சோகம் அந்தக் கிராம மக்களைப் போல் நம்மையும் பீடிக்கிறது.  உணர்வுகளுக்கும் வாழ்க்கை முறைகளுக்கும் இடையிலான மனப் போராட்டத்தை திரையில் அட்டகாசமாகப் பிரதிபலித்து நம் மனங்களைக் கொள்ளையடிக்கிறார் மகிமா.

மலைவாழ் மக்களின் ஊர்த்தலைவராக சிங்கம் புலி நடித்திருக்கிறார்.  ஊரில் புதிதாக வரவிருக்கும் மருத்துவரை மகிழ்விப்பதற்காக ஊர் மக்களோடு கூடி அவர் முடிவெடுக்கும் விதமும், ஊர் மக்களை நடத்திச் செல்லும் விதமும்  சிறப்பு. நடிப்பிலும், முடிவுகள் எடுக்கும் முதிர்ச்சியிலும்  ஒரு மலைவாழ்  கிராமத்தின் தலைவரை நம் கண் முன் நிறுத்துகிறார்.  ஆர்.எஸ்.சிவாஜியின் மரணத்தை மறைக்கும் வகையில், ஊர் மக்களை, அவர் ‘அழாதீர்கள்’ என்று கெஞ்சும் காட்சியிலும், மருத்துவரின் திருமணத்திற்கு ஊரில் இருந்து சீர் வரிசைகள் அனுப்பும் காட்சியிலும் க்ளைமாக்ஸ் காட்சியிலும் கண்கலங்க வைக்கிறார்.

மலைவாழ் மக்களில் ஒருவராக வரும் ஆர்.எஸ்.சிவாஜியும் அழுத்தமான நடிப்பைப் பதிவு செய்கிறார்.  அவர் சொல்லும் பின்கதை அடர்த்தி மிகுந்ததாக இருப்பதோடு மையக் கதையான மருத்துவம் என்பதோடு தொடர்புப்படுத்திக் கொள்ளும் கதையாகவும் இருக்கிறது.  அதுபோல் மாவட்ட ஆட்சியராக வரும் அருள்தாஸும் படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தை அறிந்து ஆர்ப்பாட்டமில்லாத அழுத்தமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.  தர்ஷனின் தோழனாக ஊர்த் தலைவனின் மகனாக வரும் இன்பா ரவிக்குமாரும் படத்தின் வீரியத்தை இலகுவாக்கும் விதமாக ஆங்காங்கே கதையோடு சேர்ந்த நகைச்சுவையைத் தூவி நம்மைச் சிரிக்க வைத்து  ஆசுவாசப்படுத்துகிறார்.

சத்யாவின் இசை படத்திற்கு  ஒருவித புதிய பரிமாணத்தைக் கொடுப்பதோடு, படத்தின் ஆரம்பக் காட்சியில் இருந்தே படத்திற்கான உணர்வை நமக்குள் விதைக்கத் துவங்கிவிடுகிறது. தர்ஷன் தன் தங்கையின் துர்மரணம் குறித்துப் பேசும் போது, மருத்துவர் தன்னைக் குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்க வேண்டாம் என்று கதறும் போதும், தர்ஷன் மருத்துவரைத் தக்க வைத்துக் கொள்வதற்கான கடைசி பிரம்மாஸ்திரத்தை எப்படி உபயோகிப்பது என்பதை நண்பர்களுடன் கலந்தாலோசிக்கும் போது பின்னணி இசையின் வீரியத்தில் நம் உயிர்துடிப்பை நம்மால் உணர முடிகிறது. சக்திவேலின் கேமரா கொல்லிமலையின் பனிமூட்டங்களையும் உலகின் அதிகமான கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட கொல்லி மலைத் தொடரை அழகாகவும் கதையின் வீரியம் கெடாத வகையில் நேர்த்தியாகச் சிறைப்பிடித்துக் காட்டி, அதைக் காணும் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தி இருக்கிறது.  இப்படி அற்புதமான பங்களிப்பைக் கொடுத்திருக்கும் இந்த இரண்டு தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நம் பாராட்டுகள்.

‘எங்கேயும் எப்போதும்’, ‘இவன் வேற மாதிரி’ போன்ற காதல் மற்றும் ஆக்‌ஷன் படங்களைக் கொடுத்து ஏற்கனவே தன்னை நிரூபித்திருக்கும் இயக்குநர் எம்.சரவணன், இப்படத்தில் வித்தியாசமான, சமூகத்திற்கு அவசியமான, நம் எல்லோரின் கவனத்தையும் கோரக்கூடிய ஒரு கதைக்களத்தை எடுத்த இடத்திலேயே வெற்றி பெற்றுவிட்டார் என்று சொல்ல வேண்டும். மருத்துவம், மருத்துவர்கள் தொடர்பான கதைக்களத்தில் உறுத்தாத வண்ணம் “நீட்” தேர்வு தொடர்பான விசயங்களை வைத்தது, படத்தின் முடிவை சினிமாத்தனமாக மாற்ற முயலாமல், இயல்பாக யதார்த்தமான வாழ்க்கையில் என்ன நடக்குமோ அதை அப்படியே காட்சிப்படுத்தி இருப்பதும் பாராட்டுக்குரியது. அது போல் தர்ஷன் போன்ற இளம் நடிகர்களிடம் கூட அற்புதமான நடிப்பை வாங்கியது, ஒவ்வொரு கதாபாத்திரத் தேர்வும் சரவணன் ஒரு கை தேர்ந்த இயக்குநர் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது. அது போல் இறுதியில் அந்தக் குழந்தைக்கு பேர் வைக்கும் போது முத்துலெட்சுமி என்று பெயர் வைத்தது என சின்ன நுணுக்கங்களில் கூடக் கவனம் செலுத்தியிருக்கிறார்.

ஸ்ரீ ஆர்க் மீடியா அண்ட் எண்டர்டெயின்மென்ட்  பிரைவேட் லிமிட்டெட் சார்பாக இப்படியான கதைக்களத்துடன் கூடிய ஒரு திரைப்படத்தைத் தயாரிக்க முன்வந்து, அதை வெற்றிகரமாக வெளியிடவும் முன்வந்திருக்கும் தயாரிப்பாளர்கள் சக்ரா ராஜ் குழுவினருக்கும் எம் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

ஒரு கலை என்பது மனிதனின் மனதோடு உறவாடி அவனை இன்றைய படிநிலையில் இருந்து மேம்ப்பட்ட ஒரு மனிதனாக மாற்றுவதற்கான உந்து சக்தியைக் கொடுக்க வேண்டும். ஒரு சமூக மாற்றம் நிகழ்வதற்கான ஒரு சிறு தீப்பொறியை பார்வையாளர்களின் மனதிற்குள் விதைக்க வேண்டும்.  அந்த இரண்டையுமே இத்திரைப்படம் செய்திருக்கிறது என்பதே உண்மை. இத்திரைப்படத்தைப் பார்க்கின்ற ஒரு குழந்தையோ அல்லது மருத்துவம் படித்துக் கொண்டிருப்பவர்களில் எவரோ அம்மக்களின் துயரை உணர்ந்து, தன் வாழ்நாள் முழுக்க அவர்களுக்கு  மருத்துவச் சேவை செய்வதே தன் வாழ்நாள் பணி என்று தங்கள் வாழ்க்கையின் குறிக்கோளை மாற்றி எழுதலாம். அல்லது  க்ளைமாக்ஸ் காட்சியில் தர்ஷன் கூறுவதைப் போல் மலைவாழ் மக்களில் இருக்கும் ஒரு குழந்தையே தன் மக்களுக்காக தன்னை உயர்ந்த மருத்துவராக ஆக்கிக் கொள்ளலாம், அல்லது அரசின் கவனத்திற்கு அம்மக்களின் துயர் மிகுந்த வலி புரிய வைக்கப்படும் பட்சத்தில் ஆளும் அரசு அம்மக்களுக்காக வேறு சில மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கலாம். இந்த மூன்றில் எது நடந்தாலும் மகிழ்ச்சியே. அதற்கான விதையை “நாடு” திரைப்படத்தின் மூலம் இயக்குநர் எம்.சரவணனும் அவரின் குழுவினரும் விதைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு அன்பும் மரியாதையும் கலந்த வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

மொத்தத்தில் நாடு நம் மக்கள் யாவரும் தங்கள் வாழ்நாளில் தவறவிடக் கூடாத முக்கியமான திரைப் படைப்புகளில் ஒன்று என்பதை அறுதியிட்டுக் கூறுகிறோம். படத்தைக் குடும்பத்தோடு சென்று திரையில் கண்டு, மனிதர்களாகிய நாம் நம்மிடம் இருக்கும் மனிதத்தை இன்னும் மேம்படுத்திக் கொள்ள முயல்வோம்.

DON’T MISS THE MOVIE NAADU.

நாடு கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்.

– இன்பராஜா ராஜலிங்கம்