ஃப்ரைடே பிலிம் பேக்டரி (Friday Film Factory) சார்பில் கேப்டன் எம்.பி. ஆனந்த் தயாரிப்பில், பாலா , ட்ரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் பிஜிஎஸ் ப்ரொடக்ஷன்ஸ் பிஜிஎஸ் ஆகியோரின் இணை தயாரிப்பில், பிரசாத் முருகன் இயக்கும் திரைப்படம் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’.
இப்படம் ஹைப்பர் லூப் வகையைச் சார்ந்த த்ரில்லராக, மிகவும் வித்தியாசமான கதையம்சத்தில் உருவாகி வருகிறது. இப்படத்தில், கதையின் நாயகர்களாக பரத், ஷான் மற்றும் ராஜாஜி நடித்துள்ளார்கள். கதையின் நாயகிகளாக விருமாண்டி அபிராமி, அஞ்சலி நாயர் மற்றும் பவித்ரா லட்சுமி ஆகியோருடன் திருநங்கை தீக்ஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இயக்குநர் பிரசாத் முருகன், “மனித வாழ்வில் சந்தர்ப்பம் தான் நாயகன், சந்தர்ப்பம் தான் வில்லன். ஒரு பொருள் ஒரு மனிதன் கையில் எந்த சந்தர்ப்பத்தில் கிடைக்கிறது என்பதைப் பொறுத்து தான் அவன் அப்பொருளை நன்மைக்கோ அல்லது தீமைக்கோ பயன்படுத்துவான்.
அப்படி நான்கு பேர் கைகளில் எதிர்பாராத விதமாக ஒரு துப்பாக்கி கிடைக்கிறது. வெவ்வேறு வாழ்வியலில் இருக்கும் அவர்களது வாழ்க்கையை, அந்தத் துப்பாக்கி எப்படி மாற்றுகிறது என்பதைக் கருத்தியல் அரசியலுடன் கமர்ஷியல் கலந்து பேசியுள்ளோம்.
தயாரிப்பாளர் கேப்டன் எம்.பி. ஆனந்த் படத்தின் உருவாக்கத்திற்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் செய்து கொடுத்தார். படம் மிகச் சிறப்பாக வந்துள்ளது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது” என்றார்.
இவர்களுடன் மாறுபட்ட கதாபாத்திரங்களில் கன்னிகா, தலைவாசல் விஜய், அருள் டி சங்கர், பொற்கொடி, பிஜிஎஸ், கல்கி, சையத் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
நெடுநல்வாடை படத்தின் இசையமைப்பாளர் ஜோஸ் ப்ராங்க்ளின் இசை அமைத்துள்ளார். படத்தின் வசனத்தையும் பாடல்களையும் மு. ஜெகன் கவிராஜ் எழுதியுள்ளார்.
காளிதாஸ் மற்றும் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ராட்சசன் படத்தின் படத்தொகுப்பாளர் சான் லோகேஷ் எடிட்டிங் பொறுப்பை ஏற்றுள்ளார். கலை இயக்குநராக நட்ராஜ் பணியாற்றியுள்ளார். படத்தின் சண்டைக்காட்சிகளை சுகன் அமைத்துள்ளார். காஸ்ட்யூம் டிசைனராக ரிஸ்வானா பணியாற்றியுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க சென்னையிலும் அதன் சுற்றுவட்டார பகுதியிலும் நடைபெற்றுள்ளது. தற்போது இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.