இந்தியாவிலேயே சிறந்த புகழ்பெற்ற திரைக்கதையாசிரியரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் நடிப்பில் சிவ் மாதவ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் 3.6.9.
அதிகாலை வேளையில் ஒரு திருச்சபையில் காலை நேர பூஜைக்காக பாதிரியாரும் அவரின் உதவியாளர்களும் தயாராகிக் கொண்டு இருக்க, மக்களும் கூட்டம் கூட்டமாக வரத் துவங்க, பூஜை துவங்கிய சில நிமிடங்களில் ஒட்டு மொத்த திருச்சபையையும் கைகளில் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளுடன் ஒரு கூட்டம் முற்றுகையிட்டு அவர்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறது. அந்த கூட்டத்தின் தேவை என்ன…? அது அவர்களுக்கு கிடைத்ததா இல்லையா..? அந்தக் கூட்டத்திடம் இருந்து பொதுமக்கள் தப்பித்தார்களா..? இல்லையா..? என்பதே இப்படத்தின் ஒற்றை வரிக் கதை.
இப்படத்தின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இது வெறும் 81 நிமிடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட திரைப்படம், தணிக்கைக் குழுவும் படப்பிடிப்பின் பொழுது படக்குழுவினரோடு உடன் இருந்து, அதை வீடியோ எடுத்துக் கொண்டு 81 நிமிடங்களில் ஒட்டு மொத்த படப்பிடிப்பும் முடிக்கப்பட்ட திரைப்படம் என்கின்ற சான்றிதழையும் விருதையும் இப்படத்திற்கு கொடுத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறைந்தபட்சம் 40 நாட்களில் இருந்து வருடக் கணக்கில் படப்பிடிப்பு நடத்தி வரும் இயக்குநர்களுக்கு மத்தியில் தெளிவான திட்டமிடலுடனும், முன்னோட்டமாக காட்சிகளை நடித்துப் பார்த்தும் இந்த சாதனையை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் இயக்குநர் சிவ் மாதவ். அவருக்கு அதற்காக தனிப்பட்ட முறையில் பாராட்டுக்கள்.
மேலும் இந்தக் கதையில் “டெலிபோர்ட்டிசம்” என்கின்ற அருமையான எதிர்கால அறிவியல் தொடர்பான காரணிகளை உள்ளீடாக வைத்து, இந்த கதைத்தளத்தில் ஒரு அறிவியல் புனைவுக் கதையை சாத்தியப்படுத்தி இருப்பதும் வியக்க வைக்கிறது. தனக்கு கிடைத்த குறைந்த பட்ஜெட்டில் தொழில்நுட்பம் தொடர்பான காட்சிகளை எந்த அளவிற்கு சிறப்பாக கொடுக்க முடியுமோ அந்த அளவிற்கு சிறப்பாக கொடுத்திருக்கின்றார் இயக்குநர்.
முழுக்க முழுக்க பாக்யராஜ் என்பவரை மட்டும் நம்பியே எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதால் முழுக்கதையும் அவர் மீது தான் பயணிக்கிறது. அவரின் உதவியாளராக ப்ளாக் பாண்டி. இந்த இருவர் மட்டுமே தொழில் முறை நடிகர்கள். மற்ற அனைவருமே புதுமுக நடிகர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
படத்தின் முதல் பாதியில் வரும் கதாபாத்திரங்களும், அவர்களின் பின் கதைகளும் அவர்களின் நாடகத் தன்மையான மிகைநடிப்பும் எரிச்சலூட்டியது. மேலும் வில்லன் கூட்டத்தின் நடிப்பும் அப்படியே. அதைத் தொடர்ந்து கதை அறிவியல் புனைவுக்குள் உட்புகும் நேரத்தில் இருந்து படம் சூடுபிடிக்கிறது. மோகன் குமாரின் ஒளிப்பதிவும், கார்த்திக் ஹர்சாவுன் இசை மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றன்.
கதையோ திரைக்கதையோ மிகுந்த சாமர்த்தியமானது என்றோ புத்திசாலித் தனமானது என்றோ சொல்வதற்கு இல்லை. காட்சியமைப்புகளும் கதாபாத்திர தேர்வும் மிகை நடிப்புகளும், மிகமிக சுமாரான முன்பாதியும் படத்தின் பலவீனங்கள் என்றாலும் கூட, இந்த வித்தியாசமான பரிட்சார்த்த முயற்சியை ஆதரிக்கலாம்.
படத்தின் ஒட்டு மொத்த பலமும், தொழில்நுட்ப ரீதியிலான காட்சிகளும், இந்த பரீட்சார்த்த முயற்சியும் தான்.