32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

இண்ட முள்ளு – ஊர்ப்பேச்சு கேட்க!

Dinesh R சேலம் Published: 15/07/2016 3 நிமிட வாசிப்பு Updated: 23/04/2020 கட்டுரை
எழுத்து அளவு:

Indamullu

விவசாயத் தொழிலை சிமென்ட் ஆலைகளிடம் காவு கொடுத்துவிட்ட வறண்ட நிலப்பரப்பினைச் சேர்ந்த ஒருவரின் நினைவு மீட்டல்களே இண்ட முள்ளு எனும் சிறுகதைத் தொகுப்பு. ஆனால், கதைகளோ விவசாயம் செழிப்பாக இருந்த காலகட்டத்தைச் சேர்ந்தது. தனது பால்யத்தில் கேட்டுப் பழகிய அரியலூர் மாவட்டப் பேச்சு வழக்கிலேயே அனைத்து வரிகளையும் எழுதியுள்ளார் அரசன். முதல் வாசிப்பின் பொழுது, அப்பேச்சு மொழி அந்நியமாக இருப்பதால், நம்மருகிலேயே அரசன் அமர்ந்து தனது ஊரைப் பற்றியும் அதன் மனிதர்கள் பற்றியும் அரூபமாய்ப் பேசிக் கொண்டிருக்கும் பிரமை எழுகிறது. ஒரு வாசகனாக கதையின் மாந்தர்களோடு உலாவ சற்றே சிரமமாக உள்ளது. வழி தவறிய சாந்தியின் பின்னால் போய், ‘என்ன? ஏது?’ என்று விசாரிக்கலாம் எனப் பார்த்தால், அரசன் நம் கையைப் பிடித்து இழுத்து, “அவங்க தான் சாந்தி. அவங்க வாழ்க்கை இப்படி ஆகிடுச்சு” என விடாமல் கதை சொல்கிறார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

தொகுப்பில் மொத்தம் ஒன்பது சிறுகதைகள். ஒன்பது சிறுகதைகளையும் ஒரு மெல்லிய கண்ணி இணைக்கிறது. அது, “மேல ஒருத்தன் இருக்கான். அவன் பாத்துப்பான். எல்லாக் கணக்குக்கும் கூலி இல்லாமலா போய்டும்?” என்ற எளிய மனிதர்களின் அறம் சார்ந்த நம்பிக்கையே! இந்தத் தொகுப்பு ஒரு குறுநாவலுக்கான நிறைவைத் தருகிறது. ஒன்பது கதையின் மனிதர்களும், அவர்களின் மொழியும், வாழ்க்கையை அவர்கள் காணும் விதமும் ஒன்றுடன் ஒன்று மிக நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது அந்நிறைவிற்கான காரணமாக இருக்கலாம். மேலும், மடையை உடைத்துக் கொண்டு வரும் பெரு வெள்ளம் போல் களத்து மேட்டு வேலைகள் பற்றித் தணியாத ஆர்வத்தில் சிறுகதைக்கான தேவையையும் மீறிப் பதிந்துள்ளார் அரசன்.

இண்ட முள்ளு

இத்தொகுப்பின் கதாபாத்திரங்கள் அனைவருமே உழைப்பின் அருமையை உணர்ந்தவர்களாக இருக்கிறார்கள். ‘நட்டு வச்ச கோயில் செல போல மரங்கள் அசையாம’ இருந்தாலும், ‘சின்ன தீப்பொறி வுழுந்தா போதும் மொத்தத்தையும் ஒரே மூச்சில் எரிச்சி விடுவது போல பங்குனி வெயிலு’ காந்தினாலும் உழைப்புக்கு அஞ்சாத மக்கள். ‘தூவானம்’, ‘வெள்ளாம’, ‘நலுவன்’ ஆகிய கதைகளை உதாரணமாகச் சொல்லலாம். மனதில் குற்றவுணர்வைப் ‘பெருஞ்சொம’யாய்ச் சுமந்தவாறு காடு காடாய்த் திரியும் மருதன் கூட உழைப்பதற்குச் சுணக்கம் காட்டுவதில்லை.

இரண்டு மாதம் முழுகாமல் இருந்த செந்தாமரையும், மூன்று மாத கைக்குழந்தையின் தாயான மேகலாவும் தற்கொலை புரிந்து கொள்கிறார்கள். குடிப் போதையில் தனது தந்தையைக் கணவன் கை ஓங்கிவிட்ட பொறுமலிலும், நிலையான வேலையில் இல்லாத காதல் கணவன் சொன்ன கடுசான வார்த்தையாலும் இறைவிகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். “நெதானம் தப்பின எதுக்கும் ஆயுசு கம்மி தான்” என தத்துவ விசாரம் மேற்கொள்கிறான் ராசா. மற்ற கதைகளுக்கும், ராசா வரும் ‘காயடிப்பு’ கதைக்குமுள்ள ஒரு வேறுபாடினை நன்றாக உணர முடிகிறது. அரசனின் இயற்பெயர் ராசா என சி.கருணாகரசின் அணிந்துரையில் உள்ளது. எல்லாக் கதைகளும் அனுபவங்களாக மட்டுமே தொக்கி நிற்க, காயடிப்பு கதையின் கடைசி வரி மனதைக் கனக்க வைக்கும் அழகியலோடு முடிவது சிறப்பு.

எழுத்தாளர் அரசன்‘கெடாவெட்டி’ எனும் கதையில் குருசாமி இறந்ததும், ஊர்ப் பெருசுங்க “வழி வுட”ச் செல்கின்றனர். அதைப் பற்றி எழுத்தாளரிடம் கேட்கையில், “ஒருவர் இறந்த சிறிது நேரத்தில், ஊருக்கு வெளியே ஒரு குறிப்பிட்ட இடத்தில் சுருட்டு, எண்ணெய், பந்தம், சின்ன மடக்கு, சிறிய மண் பானை வைத்து சூடம், ஊதுவத்தி ஏற்றிச் செய்யும் சடங்கு. அதன் பின் தான் மேளம் அடிப்பார்கள்” என்றார். அரசன் அரியலூர் மாவட்டத்தை இன்னும் அதிகமாகத் தன் எழுத்தில் ஆவணப்படுத்த வேண்டுமென்ற ஆவல் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

இண்ட முள் என்பது ஒரு கொடிவகை. அதன் முட்கள் உடலில் தங்காமல், சதையைப் பிய்த்துக் கொண்டு வெளியேறி விடும் தன்மையைக் கொண்டது. அப்படித் தன்னைத் தைத்த சில உண்மைக் கதைகளை ‘இண்ட முள்ளு’ எனும் தொகுப்பாகி விட்டார் அரசன். கதைகளின் தீவிரத்தன்மையைப் பிரதிபலிக்காத புத்தக வடிவமைப்பு பெரும் குறையாகப்படுகிறது. முன்னட்டையை விட பின்னட்டை பிரகாசமாக உள்ளது. ‘இயற்கையாகிப் போன எங்களூரின் மூத்தக் குடிகள் அனைவருக்கும்’ எனப் புத்தகத்தின் மூன்றாம் பக்கத்தில் ஒரு புகைப்படம் போடப்பட்டுள்ளது. அதையே முன்னட்டையிலும் போட்டிருந்தால், கதைகளுக்கு மேலும் நெருக்கமாய் அமைந்திருக்கும்.

புத்தகத்தைத் தபாலில் பெற: +91 99 4343 7899

– தினேஷ் ராம்

இண்டமுள்ளு – Amazon Kindle Link

(பி.கு.: அட்டைப்படம் பற்றிய கருத்து, அச்சு வடிவில் வந்த முதல் பதிப்பு பதிப்பைப் பற்றியது. அமேசான் கிண்டலிலுள்ள அட்டைப்படம், ஊர்ப்பேச்சினைக் கேட்கும் ஆவலைத் தூண்டும் விதமாக உள்ளது.) 

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.