32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகன் விமர்சனம்

Dinesh R சேலம் Published: 23/02/2018 2 நிமிட வாசிப்பு Updated: 18/06/2018 சினிமா
எழுத்து அளவு:

அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகன்

அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகன் என்பது திருமாலைப் போற்றும் திருநாமங்களில் ஒன்று. பக்தியைச் சிலாகிக்கும் படமிது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

திருப்பதி பெருமாளான பாலாஜிக்கும், அவரது பரம பக்தனான ஹாத்திராம் பாபாக்குமான பிணைப்பே படத்தின் கதை.

‘கடவுளைக் காணும் வழி யாது?’ என அழகு சிறுவனான ராமன் வினவுவதில் இருந்து படம் தொடங்குகிறது. ‘ஓம்’ என்ற ராமனின் கடுந்தவம் வைகுண்டத்தை அடைய, பெருமாள் ராமனைக் காண பாலகனாக வருகிறார். சிறுவனைக் கடவுளென உணராமல் துரத்தி விடுகிறார் இளைஞனான ராமன். பின் மீண்டும் எப்படி இறையை உணர்ந்து ஆத்ம பக்தனாகப் பெருமாளுக்கு மிகப் பிரியமானவராகப் பரிணமிக்கிறார் என நெகிழ்ச்சியாகப் பயணிக்கிறது படம்.

பக்தர் ஹாத்திராமாக நாகார்ஜுனா அசத்தியுள்ளார். அன்னம்மாச்சார்யாவாக முன்பே பக்திப்பூர்வமான கதாபாத்திரத்தில் நடித்த முன் அனுபவம் இதில் அநாயாசமாய் மிளிர்கிறது. பெருமாளுக்கு நித்ய கல்யாண பூஜ்சி செய்வதாகட்டும், அவருடன் பகடையாடி அவரை வெல்வதாகட்டும், நாகார்ஜுனா முகத்தில் தெரியும் பரவசம் அவரேற்ற கதாபாத்திற்கு வலுவூட்டியுள்ளார்.

Akilandakodi brahmanda nayagan Anushkaபக்தை கிருஷ்ணம்மாவாக அனுஷ்கா நடித்துள்ளார். அநேகமாகக் கதாநாயகி இல்லாத குறையைப் போக்க அனுஷ்காவைப் படத்தில் இணைத்திருப்பர். படத்தில் பெரும்பங்காற்றும் அவர், கதைக்குச் சிறிய அளவிலேயே உதவியுள்ளார். ஜெகபதி பாபுவின் நிலைமை அதை விட மோசம். வம்படியாக அவரைத் திணித்துள்ளனர். ஆனால், நாகார்ஜுனா அவரிடம் ‘வேங்கடகிரி’ என்பதற்கு சொல்லும் அர்த்தம் நிறைவாய் உள்ளது.

விஜய் டிவியில் கிருஷ்ணராகத் தமிழக மக்களுக்கு அறிமுகமான செளரப் ராஜ் ஜெயின், இப்படத்தில் பெருமாளாக நடித்துள்ளார். அவர் முகத்தில் எழும் மந்தகாச புன்னகை அவரது திருவிளையாடலை ரசிக்க வைக்கிறது. குபேரக் கரையில் அமர்ந்து பகடை விளையாடலாம் என ஹாத்திராம் அழைக்க, அவர் ஒரு ரியாக்‌ஷன் தந்து, ‘வேண்டாம்.. கோகர்ணக் கரைக்குச் சென்று விடுவோம்’ எனச் சொல்லும் காட்சியை உதாரணமாகச் சொல்லலாம்.

பெருமாள் ஏன் குபேரனிடம் கடன் வாங்கி இன்னும் வட்டி கொண்டிருக்கிறார் என்பதைத் தெளிவுபடுத்துகிறார் ஹாத்திராமாக வரும் நாகார்ஜுனா. திரைக்கதையில் சுவாரசியம் கம்மியாக இருப்பினும் அதை உணராத அளவுக்கு கோபால் ரெட்டியின் ஒளிப்பதிவு அசரடிக்கிறது. மரகதமணியின் இசை ஹாத்திராமுடைய பக்தியின் ஆழத்தை உயர்த்திக் காட்ட உதவுகிறது.

பக்தனே உயர்ந்தவன் என்பதை ஹாத்திராம் மூலம் பகவான் உலகிற்குப் புரிய வைக்கிறார். திருப்பதிப் பெருமாளுக்குப் பிரியமான பெயரான ‘பாலாஜி’ என்ற செல்ல பெயரைச் சூட்டியதே ஹாத்திராம் தான். அதை உணர்ச்சிபூர்வமாகச் சொல்லத் தவறியிருந்தாலும், ஒரு மென்மையான பக்திப் பிரவாகத்திற்கு படம் உத்திரவாதமளிக்கிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.