32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

“அருண்பாண்டியன் ஐயா பலாப்பழம் போன்றவர்” – கார்த்திக் நேத்தா | அஃகேனம்

Dinesh R சேலம் Published: 15/06/2025 4 நிமிட வாசிப்பு Updated: 19/06/2025 சினிமா
எழுத்து அளவு:

A&P குரூப்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் உதய். K இயக்கத்தில், அருண் பாண்டியனும் கீர்த்தி பாண்டியனும் சவாலான வேடத்தில் நடித்திருக்கும் ‘அஃகேனம்’ எனும் திரைப்படம், ஜூலை மாதம் நான்காம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தத் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு சென்னையில் நடைபெற்றது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

பாடலாசிரியர் கார்த்திக் நேதா, “இந்தத் திரைப்படம் அமைதியான மற்றும் ஆழமான உணர்வைப் பேசக்கூடியது. இந்தப் படத்தில் இடம்பெற்ற நான்கு பாடல்களும் வெவ்வேறு வகைமைக்குள்ளான பாடல்களாக இருக்கிறது. மேற்கத்திய இசை, ராக் இசை, இந்திய நாட்டார் இசை, இந்தியச் செவ்வியல் இசை என வெவ்வேறு வகைமையியான இசை வடிவம் இந்தப் படத்தில் பாடல்களாக இடம் பிடித்திருக்கிறது. இசையமைப்பாளர் பரத் வீரராகவன் மிகுந்த திறமைசாலி. இந்த ஆண்டிற்கான சிறந்த பாடலாசிரியர் என்ற ஆனந்த விகடன் வழங்கும் விருதினைப் பெற்றிருக்கும் சக பாடலாசிரியர் மோகன் ராஜனுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

அருண் பாண்டியன் ஐயாவை முதன்முறையாகச் சந்திக்கும்போது சற்று பதட்டத்துடன் தான் இருந்தேன். அவருடன் தொடர்ந்து பழகும் போது தான் அவர் ‘பலாப்பழம்’ எனத் தெரிந்து கொண்டேன். பழகிய பிறகு இனிக்க இனிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் அவருடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பளித்ததற்காக அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் திரைப்படத்தில் நிறைய பேர் புது முகமாக அறிமுகமாகி இருக்கிறார்கள். இது அரிதினும் அரிதாக நடக்கக்கூடிய நிகழ்வு. இன்றைக்குள்ள காலகட்டத்தில் வியாபாரத்திற்கு யார் பயன்படுவார்களோ அவர்களை மட்டுமே வைத்துக்கொண்டு பயன்படுத்திக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், புதிதாக ஒரு குழுவினரை அறிமுகப்படுத்துவதற்கு மிகப்பெரிய துணிவு வேண்டும்.

அறிமுக இசையமைப்பாளர் பரத் வீரராகவனிடமிருந்து இப்படி ஒரு இசையை நான் எதிர்பார்க்கவில்லை. சாலச் சிறந்த பணியை செய்திருக்கிறார். அறிமுக இயக்குநர் உதய், நாம் சக பயணியாக, சக கலைஞனாக இணைந்து பயணிப்போம். நேர்மையுடனும் அறத்துடனும் பயணம் செய்யுங்கள் ” என்றார்.

பாடலாசிரியர் மோகன் ராஜன், ”இயக்குநர் உதய்- நேர்த்தியாக கதை சொல்வதில் கெட்டிக்காரர். இவரும், இசையமைப்பாளரும் எதிரிகளை வலிக்காமல் அடிப்பதில் கெட்டிக்காரர்கள். பாடல் வரிகளைப் பெறுவதில் சில திருத்தங்களை நாசுக்காகச் சுட்டிக் காட்டுவார்கள். பரத் நன்றாக வர வேண்டும் என உதய் பாடுபடுகிறார். இவர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்த அருண் பாண்டியனுக்குப் பெரிய மனசு.‌ நிறைய புது முகங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்றால் அதற்கு துணிவு வேண்டும். பேரன்பு இருக்க வேண்டும்.‌ அவரைச் சந்தித்தபோது, ‘உங்களின் படத்தில் நான் பங்கு பெற வேண்டும். இது மட்டும் தான் என்னுடைய விருப்பம்’ என்றேன். ஏனெனில் அவரை நான் அவ்வளவு தூரம் நேசித்திருக்கிறேன். ‘இணைந்த கைகள்’ படத்தை இப்போதும் பார்ப்பேன். எப்போதும் பார்ப்பேன்.

‘மூங்கில் கோட்டை’ என்றொரு படத்தில் அவர் நடித்திருந்தார். அந்தத் தலைப்பு என்னை மிகவும் கவர்ந்தது. அவருக்காகச் சின்ன வயதில் ஏங்கிருக்கிறேன். ‘ஊமை விழிகள்’ படத்தை வெளியிடுவதற்கு முன் நடைபெற்ற சம்பவங்களை நீங்கள் என்னிடம் சொல்லி இருக்கிறீர்கள். அதையே நீங்கள் ஒரு கதையாக உருவாக்கலாம். அவ்வளவு அழகும் த்ரில்லும் அதில் இருக்கிறது. அதிலும் படம் வெளியான பிறகு சத்யம் தியேட்டரில் கூட்டம் கூடி இருந்ததை நீங்கள் மகிழ்ச்சியுடன் சொன்னபோது உங்களின் சந்தோஷத்தைக் கண்களால் ரசித்து உணர்ந்தேன்.

இந்தப் படத்தில் கீர்த்தி நடித்திருந்த காட்சிகளைப் பார்த்து தான் ‘வாழ்க்கை போராட்டமே’ எனும் பாடலை எழுதினேன். அதில் அவர் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். இங்குதான் அவர்கள் அப்பா – பொண்ணு என்று இருக்கிறார்கள். இந்தப் படத்தில் வேறு இரு கதை மாந்தர்களாக இருப்பார்கள். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும்” என்றார்.

இசையமைப்பாளர் பரத் வீரராகவன், ”இயக்குநருடன் முதன்முதலாக அருண்பாண்டியன் சாரைச் சந்தித்தோம். அவர் முதலில் எதையும் பேசவில்லை. இந்தப் படத்திற்கான இசையமைப்புக்கு உரிய பட்ஜெட்டை அவரிடம் சொன்னேன். அவர் அதனைக் கேட்டுவிட்டு, ‘இதற்குள் செய்து விடுவாயா?’ எனக் கேட்டார். நான் ஆமாம் என்று பதிலளித்தேன். ஆனால் உண்மையில் நான் சொன்ன பட்ஜெட்டை விட மும்மடங்கு அதிகமானது. ஆனால் அதனைச் செய்து கொடுத்தார். இந்த மனசு யாருக்கு வரும்? இவர் கொடுத்த ஆதரவினால் தான் என்னால் பல இசைக்கலைஞர்களுடன் இணைந்து பணியாற்ற முடிந்தது. இங்கு மேடையில் இருக்கும் பாடலாசிரியர்கள் மோகன் ராஜன் மற்றும் கார்த்திக் நேத்தா ஆகியோர் ஐநூறு பாடலுக்கு மேல் எழுதிய அனுபவம் கொண்டவர்கள். இவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குநர் உதய்.K நண்பர் மட்டுமல்ல மிகுந்த திறமைசாலி. இந்தப் படத்தின் பின்னணி இசைக்காகக் காட்சிகளைப் பார்த்த போது,அதில் இந்திராவாக நடித்திருக்கும் கீர்த்தி பாண்டியனின் நடிப்பு பிரமாதமாக இருந்தது. அருண் பாண்டியனை இந்தப் படத்தில் பார்ப்பது போல் வேறு எந்தப் படத்திலும் பார்த்திருக்க மாட்டீர்கள். நன்றாக ஸ்மார்ட்டாக ஜீன்ஸ் டீ சர்ட் அணிந்து நடனமாடி இருக்கிறார்” என்றார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.