
‘ஆதி புருஷ்’ பார்த்து நொந்தவர்களுக்கு அருமருந்தாய் வந்துள்ளது நிதேஷ் திவாரியின் ராமாயணம். ராவணனாக யாஷ் வரும் காட்சிகள் அனைத்துமே அட்டகாசமாக உள்ளன. 3டி எஃபெக்ட்ஸும் பிரமாதமாக உள்ளன. தமிழ் டப்பிங்கும், லிப் சிங்கும் (Lip sync) ரசிக்கும்படி நன்றாகச் செய்துள்ளனர். இடைவேளைக்கு முன்பு, படத்தின் நீளம் கொஞ்சம் அயர்வைத் தருவது போலிருந்தாலும், இரண்டாம் பாதி போவதே தெரியாமல் சட்டென முடிந்து விடுகிறது.
“தர்மம் – உண்மை, கடமை மற்றும் அறநெறியின் பாதை” என்ற வரிகளோடு படம் தொடங்குகிறது. பாகுபலி 2 படத்தில், “பெண்கள் மீது கை வைத்தால் வெட்ட வேண்டியது விரலை அல்ல தலையை” என மிக முக்கியமான காட்சியும் வசனமும் இடம்பெறும். நிற்க. ‘ஏன் எங்கள் எல்லைக்குள் வந்து அரக்கர்களைக் கொன்றாய்?’ எனச் சூர்ப்பனகை கேட்கிறார். ராமர் பவ்வியமாக, ‘முதலில் அவர்கள்தான் தாக்கினார்கள். தற்காப்பிற்காகத்தான் கொன்றோம்” என்கிறார் ராமர். மறுபடியும் நிற்க. அடுத்த காட்சியில், தானொரு ஏகபத்தினி விரதன் என சீதையைக் காரணம் காட்டி சூர்ப்பனகையின் ஆசைக்கு ராமர் மறுப்புத் தெரிவிக்க, சூர்ப்பனகை காண்டாகி சீதையைக் கொல்லப் பாய்கிறார். உடனே லக்ஷ்மணன் இடைபுகுந்து தற்காக்கும் + தண்டிக்கும் நோக்குடனும் சூர்ப்பனகையின் மூக்கை லேசாகக் கீறி விடுகிறார். மெலிதாய் ஒரு கோடு, அவ்வளவே! (ரகுல் ப்ரீத்தி சிங்கிற்கு மூக்கில்லாமல் கிராஃபிக்ஸ் செய்ய இயக்குநரின் மனம் இடம் தரவில்லை போலும்!) ஆனால் மூக்கையே வெட்டியது போல் ஆர்ப்பாட்டம் செய்து வெளியேறிவிடுகிறார் சூர்ப்பனகை. அதற்குப் பழிவாங்க, கரனும் தூஷணனும் பெரும் அரக்கர் படையுடன் செல்கின்றனர். ராமர், ‘எந்தப் பெண்ணுக்குமே நடக்கக்கூடாத ஒன்றை என் தம்பி லக்ஷ்மணன் செய்துவிட்டான். அதற்கு போர் ஒரு தீர்வல்ல’ என்கிறார். தற்காப்புக்காகத் தம்பி தடுத்தான் என ராமர் சொல்லியிருக்கலாம். ஒரே வசனத்தை இரண்டாவது முறை பயன்படுத்தக்கூடாது என்ற திரை விதி இருப்பதால், ‘தம்பி பண்ணது தவறு’ என ராமரைச் சொல்ல வைத்துவிடுகிறார் இயக்குநர். ஆனால் அந்தத் தவற்றிற்கு என்ன தண்டனை என்றோ, என்ன பிராயச்சித்தம் என்றோ எதையும் சொல்லாமல் அதர்மமாகத் தவிர்க்கிறார் ராமர். இப்படியாக, அறநெறி தவறாமல் வினையாற்றும் ராமனைத் தனது வசனங்களால் கழுவேற்றியுள்ளார் திவாரி.
சூர்ப்பனகையை அரக்கியாகப் பார்க்காமல், ரகுல் ப்ரீத்தி சிங்காகப் பார்த்ததால், நிதேஷ் திவாரியால் சூர்ப்பனகையை evil ஆகக் காட்ட முடியாமல் போகிறது. சூர்ப்பனகையின் வஞ்சம் என்பது ஒரு வாள் போல், இரு பக்கமும் கூர்மை கொண்டது. கணவனைக் கொன்ற ராவணனனையும், தன்னை நிராகரித்த ராமனையும் எதிரியாக்கி, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் வில்லங்கமானவர். ‘சீதை எப்பேர்ப்பட்ட அழகி தெரியுமா? அவள் உனக்குச் சொந்தமாக வேண்டியவள்’ என ராவணனனை நைச்சியமாக மூளைச்சலவை செய்யும் சூர்ப்பனகையின் பாத்திரத்தைப் படத்தில் டம்மியாக்கியுள்ளனர்.
வால்மீகி ராமாயணத்தைப் பிரதானமாகத் தழுவியிருந்தாலும், மற்ற ராமாயண வெர்ஷன்களில் இருந்தும் படைப்புச் சுதந்திரத்துடன் எடுத்தாண்டுள்ளோம் என டிஸ்க்ளெயிமர் வருகிறது. அப்படி, சீதையைப் போர்க்கலைகள் கற்றவராகச் சித்தரித்துள்ளனர். குறுவாளால் அரக்கர்களை, சதக் – சதக் எனக் குத்திக் கொல்கிறார். சீதாப்பிராட்டியின் இந்த ஸ்டன்ட் காட்சி வால்மீகி ராமாயணத்தில் இல்லாத பகுதி. சீதையை வீரம் மிகுந்தவராகக் காட்டியிருக்கும் பட்சத்தில், ராவணன் கடத்தும் போது, எப்படி எதிர்வினை புரிந்தார் எனக் காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அந்தக் காட்சியின் பொழுது, சீதை லக்ஷ்மண ரேகையைத் தாண்டியதும் ஒரு கட், அடுத்த ஷாட்டில் புஷ்பக விமானத்தில் கைதியாக உள்ளார் சீதை.
ராமரைச் சாதாரண மனிதராகக் காட்டியே ஆகவேண்டும் என்பதில் மிகக் கவனத்துடன் செயல்பட்டுள்ளார் இயக்குநர். அதற்காக அரக்கர்களைப் பார்த்தாலே, ஓடு, ஓடு, ஓடு என ஓட ஆரம்பித்து விடுகிறார் ராமர். ஓடிக் குதித்துத் தவ்வித் தாவியென ஜாக்கிசான் ஸ்டன்ட் எல்லாம் செய்து அரக்கர்களைக் கொல்கிறார் ராமர். மலைமுகட்டின் எல்லையில் சிக்கிக் கொள்ளும் போது, சீதையையும் லக்ஷ்மணனையும் கொல்வதாக அரக்கர்கள் மிரட்டிய பிறகே, திவ்விய அஸ்திரத்தைப் பயன்படுத்தி கரன், தூஷணனைக் கொல்கிறார். ஆனால், வால்மீகி ராமாயணத்தில் தாடகையின் மைந்தனான சுபாகுவையே திவ்விய அஸ்திரங்கள் எய்தியே கொல்வார் ராமர்.
தாடகையின் மற்றொரு மைந்தனான மாரீசனோ, பதின்பருவத்து பாலகனான ராமரின் வில் நாணொலி கேட்டே பயந்து நடங்குவார். மாரீசன் இரண்டு முறை ராமரின் வில்லுக்கு இலக்காகி உயிர் பிழைப்பார். ‘ராமபானத்தில் இருந்து தப்பித்தது தம்பிரான் புண்ணியம்’ என மனம் திருந்தி மரவுரி தரித்துத் துறவியாகவே மாறி விடுவார் மாரீசன். சீதையைக் கடத்த ராவணன் உதவி கேட்கும்போது, ராமரின் புகழை எடுத்தியம்பி மறுப்பார் மாரீசன். ஆனால் படத்தில் வரும் மாரீசனையோ, மகாபாரதத்துச் சகுனியைப் போல் சித்தரித்து ஏமாற்றமளித்துள்ளனர் (எப்படி மாரீசனுக்கு ஒரு கதை உண்டு என்பதைப் பொருட்படுத்தவில்லையோ, குகனுக்கும் ராமருக்குமான நட்பையும் படம் தொடவே இல்லை. 2000 கோடி பட்ஜெட் என்பதால் எளியோரிடம் நட்பு பாராட்டும் ராமர் தேவைப்படாமல் போய்விட்டார் போல்).
பரதர், காட்டிற்கு வந்து ராமரை அழைக்கும் காட்சியில், ராமரும் பரதரும் மட்டும் அமர்ந்திருக்க, பின்னாடி பாவமாக நிற்கிறார் குலகுரு வசிஷ்டர். அவர் ராமரின் தந்தையான தசரதருக்கே குரு ஆவார். தசரதர், விஸ்வாமித்திரரின் பாதங்களைக் கழுவி விடுவதாகக் காட்சி இருக்கும். அப்படித்தான் ரகுவம்சத்தினர் ரிஷிகளைக் கெளரவித்து, அதில் பெருமையடைவார்கள். இயக்குநரோ, திரையில் ராமர் இருக்க வசிஷ்டருக்கு என்ன முக்கியத்துவம் வேண்டிக் கிடக்கு என தவறான ஸ்டேஜிங் செய்துள்ளார்.
படத்தின் வசனங்கள் கவித்துவமாக ஈர்த்தாலும், சில வசனங்கள் ஏனோதானோ என்று எசகுபிசகாக உள்ளது. “ராமா, அந்த மானைப் பார்” என்று ராமரைச் சீதை திடீரென ஒருமையில் அழைக்கிறார். குபேரனை வென்று, இலங்கையைக் கைப்பற்றியதும், இந்திரனுடன் போரில் வெல்கிறார் ராவணன். தோற்ற இந்திரன், தான் ஆளும் தேவலோகத்தைப் பற்றிக் கவலை கொள்ளாமல், ‘இந்த பூலோகத்தின் கதி என்ன?’ என்று சொல்லிக் கவலைப்படுகிறார். வால்மீகி ராமாயணத்தின்படி, ஜடாயு இறப்பதற்கு முன், ‘சீதையை, ராவணன் தெற்கு திசையில் அழைத்துச் சென்றான்’ எனச் சொல்வார். படத்திலோ, இரண்டாம் பாகத்திற்கான லீடை அளிப்பதற்காக, இலங்கை மன்னன் ராவணனின் படை பலம், மேகநாதனின் மந்திர சக்தி என பயங்கர டீட்டெயிலிங்குடன் விவரிக்கிறார் (எங்கே அசோக வனத்தின் கூகுள் லோக்கேஷனை அளித்துவிடுவாரோ என நினைக்குமளவிற்கு!)
ஜடாயுவிற்கும் ராவணனனிற்குமான க்ளைமேக்ஸ் சண்டை அட்டகாசமாய்க் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. லக்ஷ்மணனாக நடித்துள்ள ரவி துபே படத்தின் கலகலப்பிற்கு உதவியுள்ளார். மிக மிக அற்புதமான விஷுவல்ஸ். தொழில்நுட்ப நேர்த்தியும், 3டி எஃபெக்ட்ஸும், யாஷின் ஸ்க்ரீன் ப்ரெசன்ஸும் தான் படத்தின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணம்.

