Search

அச்சம் என்பது மடமையடா விமர்சனம்


Achcham Yenbadhu Madamaiyada vimarsanam

‘கல்லூரி முடிச்சுட்டு வேலைக்குப் போகாதவனாகவும், தங்கையின் தோழியைக் காதலிப்பவனாகவுமே உங்க படத்தின் ஹீரோக்கள் இருக்காங்களே! உங்க டெம்ப்ளட் மாத்த மாட்டீங்களா?’ என்ற கேள்விக்கு, “இதான் எனக்குத் தெரியும். அது நல்லாவும் வருது. சோ, நான் இதையே பண்றேன்” எனப் பதிலளித்தார் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன். மேலும், “ஒருத்தன் நல்லா தண்ணியடிச்சுட்டு, என்ன படம்னே தெரியாம தியேட்டர்க்குப் போயிட்டு, படம் ஆரம்பிச்ச 2 ஃப்ரேம்ல, முழுப் போதையில் இது கெளதம் படம்னு கண்டுபிடிக்கணும்” என்றும் தன் விருப்பத்தை வலியுறுத்தினார்.

எஸ்.டி.ஆர். மஞ்சிமா மோகனைக் காதலிக்கிறார். மஞ்சிமாவின் குடும்பத்தை ஒரு பெரும் பிரச்சனை சூழ்கிறது. காதலுக்காகவும், காதலிக்காகவும், அவரது குடும்பத்துக்காகவும் எந்த எல்லைக்குப் போகிறார் என்பதே படத்தின் ஒரு வரிக் கதை.

“முதல் பாதி ரொமான்ட்டிக்காக இருக்கும்; இரண்டாம் பாதியில் மாஸ் விஷயம்னு சொல்வாங்க இல்ல சினிமாவில்.. அதை நான் இப்படத்தில் முயற்சி செஞ்சிருக்கேன்” என்றார் கெளதம், படம் வெளியாகும் முன். விண்ணைத் தாண்டி வருவாயா ஃபீலைத் தருகிறது படத்தின் முதல் பாதி. பாடல்கள், பின்னணி இசை, ஒளிப்பதிவு என படம் கவிதையாக ஈர்க்கிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் மேஜிக்கை படம் முழுவதும் உணர முடிகிறது. ஒளிப்பதிவாளர்களான டேன் மெக்கார்த்ரும், டேனி ரேமண்டும் மிகச் சிறப்பாக படத்தின் டோனைச் செட் செய்து அசத்தியுள்ளனர். முதற்பாதியின் இன்னொரு மேஜிக், க்ளோஸ்-அப் காட்சிகளில் அசத்தும் மஞ்சிமா மோகன்.

‘வாழ்க்கை நாம முடிவு பண்ற மாதிரி இருக்காது; சில சமயம், அதை விட பயங்கரமாக இருக்கும்’ என படத்தில் சிம்பு ஒரு வசனம் பேசுவார். இது படத்தின் இரண்டாம் பாதிக்குப் பொருந்தும். இரண்டாம் பாதி நெடுகேவுமே யூகிக்க முடியாத திருப்பங்களால் நிறைந்துள்ளது. ‘பயமில்லாமல் இருப்பதும், கான்ஃபிடென்ஸும் முக்கியம்’ என கெளதம் வாசுதேவின் வசனங்களை எஸ்.டி.ஆர். வாய்ஸ்-ஓவரில் சொல்லியவாறே உள்ளார். என்கவுன்ட்டரை உச்சபட்ச ஹீரோயிசமாகவும், காப் (Cop) ஆகிட்டா எவரையும் கொல்வதற்கான லைசென்ஸ் கிடைத்துவிடும் போன்ற வழக்கமான ஆபத்தான வசனங்களையும் விட்டுவைக்கவில்லை கெளதம். என்னை அறிந்தால் படம் போல், ‘அவன் கெட்டவன்; சாகணும்’ என்ற தர்மத்தை நிலைநாட்டும் வசனங்களும் படத்தில் உண்டு.

நடன இயக்குநராகப் பணியாற்றியுள்ளதோடு, நாயகனின் நண்பனாகவும் நடித்துள்ளார் சதிஷ். கொஞ்சம் கெளதம் கார்த்திக் சாயலிலுள்ள சதிஷை, அதற்காகப் படத்தில் கிண்டலும் செய்கிறார் எஸ்.டி.ஆர். ‘ஷோக்காளி’ பாட்டில், அவருக்கு நாயகனுக்கு நிகரான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது சிறப்பு. காமத் எனும் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் பாபா சேகல் கச்சிதமான தேர்வு.

‘தி காட்ஃபாதர் (The GodFather)’ படத்தில் வரும் ஒரு கணத்திலிருந்து (moment) இன்ஸ்ஃபையர் ஆகியிருப்பதாக க்ரெடிட் தந்துள்ளார் கெளதம். கொலைக்காரர்களிடம் இருந்து மருத்துவமனை ஆம்புலன்ஸில் தப்பிக்கும் அந்தக் காட்சியை, அக்னி நட்சத்திரம் படத்தில் மணிரத்னமும் தழுவியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அவர் க்ளைமேக்ஸில் கச்சிதமாகப் பயன்படுத்தியிருப்பார். கெளதமின் க்ளைமேக்ஸோ மாஸ் படத்திற்கான இலக்கணத்திற்கு நேரெதிராய் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாதியில் உள்ள பதற்றம், விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் கடைசி வரை மாறாததால், முதற்பாதி போல் ஈர்க்கவில்லை.