Search

ஜாக்பாட்: ஜோதிகாவின் ஆக்‌ஷன் அவதாரம்

jyothika-action-avatar

2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில் ரேவதி, ஜோதிகா நடித்துள்ள படம் ஜாக்பாட். கல்யாண் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி சார்பாக சக்திவேலன் உலகெங்கும் வெளியிடுகிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ந்தது.

விழாவில் பேசிய ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா, “ஜோதிகா மேடம் டூப் ஆக்டரை ஃபைட் செய்யவே விடவில்லை. டூப் ஆர்ட்டிஸ்ட்க்காக நாங்கள் எடுத்து வரும் காஸ்ட்யூம் சும்மா தான் இருக்கும். அப்படியெல்லாம் ரிஸ்க் எடுத்து மிகச் சிறப்பாக ஜோதிகா மேடம் நடித்துள்ளார்” என்றார்.

நடிகை சச்சு, “கல்யாண் என்னிடம் கெஸ்ட் ரோல் பண்ணனும் என்றார். நான் கெஸ்ட்ரோல் பண்ண மாட்டேன் என்றேன். பிறகு யோசித்தேன். படம் பண்ணுவது சிவக்குமார் ஃபேமிலி. அவரோடு நடித்துள்ளேன். சூர்யாவோடும் ஆரம்பத்தில் நடித்துள்ளேன். ஜோதிகாவோடு தான் நடிக்காமல் இருந்தேன். அதனால் இப்படத்தில் நடித்தேன். சூர்யா எங்கள் முதலாளி அவர் பெரிதாக ஜெயிக்க வேண்டும்” என்றார்.

இயக்குநர் கல்யாண், “எனக்குப் பெரிய ஜாக்பாட் என்னென்னா 2D எண்டெர்டெயின்மென்ட்டில் படம் பண்ண வாய்ப்புக் கிடைத்தது தான். நான் ராஜா சாரிடம் போய் மூன்று சீன் தான் சொன்னேன். உடனே செக் கொடுத்துட்டார். பிறகு ஜோதிகா மேடத்திடம் கதையைச் சொன்னேன். அவர் உடனே சூட்டிங் போகலாம் என்றார். ஸ்பாட்டில் சூர்யா தான் ஜோதிகாவுக்குள் வந்துவிட்டாரோ என்று நினைக்கும் அளவிற்கு பிரமாதமாகப் பண்ணி இருக்கிறார். படத்தில் ஜோதிகா, பாதி சூர்யாவாகவும் பாதி ஜோதிகாவாகவும் தெரிவார்” என்றார்

நடிகர் சூர்யா, “என்னோட ஜோ தான் என்னோட ஜாக்பாட். 100 சதவிகிதம் 200 சதவிகிதம் எந்த காம்ப்ரமைஸும் இல்லாமல், குழந்தைகளுக்கு எல்லா வேலையும் சரியாகச் செய்ற அம்மா ஜோதிகா. அவர் தேர்ந்தெடுக்கிற படங்கள் எல்லாவற்றையும் மிகவும் யோசித்து யோசித்து தான் செய்வார். சில ஆக்‌ஷன் காட்சிகளைப் பார்த்து எப்படி இதையெல்லாம் செய்திருப்பார் என்று ஆச்சர்யப்பட்டேன். தினம் இரண்டு மணிநேரம், ஆறுமாதம் சிலம்பம் கத்துக்கிட்டார். மழை எஃபெக்ட்டில், ப்ரொபெல்லரில் இருந்து காற்று அடித்துக் கொண்டிருக்கும்பொழுது சிலம்பம் சுற்றுவது ரொம்பக் கஷ்டம். ஜோ, டூப் இல்லாமல் ரோப்பில் தொங்கி சண்டை போட்டிருக்கிறார்” என்றார்.

நடிகை ஜோதிகா, “முதல் நன்றி சிவக்குமார் அப்பாவிற்கு. 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தில் இரண்டு வருஷத்துக்குப் பிறகு நடிக்கிறேன். இது எனக்கு ரொம்பப் புதுசான படம். இப்படி ஒரு கதையில் நான் நடித்ததே இல்லை. எனக்கு ரொம்பப் பிடித்த ரேவதி மேடத்திற்கும் ஈக்வலான ரோல். அதற்குக் கல்யாண் சாருக்கு நன்றி. ஹீரோக்கள் செய்யும் அனைத்தையும் எங்களைப் பண்ணச் சொன்னார். எல்லா ஷாட்ஸ்களையும் பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறார்கள்.

நூறு டான்சர்களை வைத்து, ஒன்றரை நாளில் ஒரு பாடலை எடுத்து முடித்தார் பிருந்தா மாஸ்டர். இதுவே ஆண் டான்ஸ் மாஸ்டராக இருந்தால் இதற்கு மூன்று எடுத்திருப்பார்கள். இந்தப் படத்தில் நான் சண்டைக் காட்சிகளில் நடித்தது பார்த்து, ஆக்‌ஷன் ஹீரோவான சூர்யா எனக்கு சண்டைக்காட்சிகளுக்கான கருவி (kit) வாங்கிக் கொடுத்தார். அவர் தான் என்னோட எல்லா முயற்சிகளுக்கும் கை கொடுப்பவர். அவர் இல்லை என்றால் நான் இல்லை. என்னோட ஜாக்பாட் சூர்யா தான். பெரும்பாலும் நடிகைகள் நடித்த படங்களை அந்தந்தப் படங்களின் ஹீரோக்களோடு தான் ஒப்பிட்டுப் பேசுவார்கள். ஆனால் நான் பெரியப் பெரிய ஹீரோயின்களோடு நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறேன். தபு, சிம்ரன், தேவயாணி, லைலா, ரம்பா, நயன்தாரா, ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா பொன்வண்ண, ரேவதி, சச்சும்மா, அடுத்த படத்தில் செளகார் ஜானகி என நான் பல பெருமையாகச் சொல்லிக் கொள்ளுமளவு இந்தப் பட்டியல் உள்ளது” என்றார்.

ஆகஸ்ட் 2 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.