Search

பிக் பாஸ் 3: நாள் 33 – வொர்ஸ்ட் பெர்ஃபார்மர்ஸ்

bigg-boss-day-33

‘வண்டியிலே நெல்லு வரும்’ பாட்டோட ஆரம்பித்தது நாள். இந்த வார டாஸ்க்கில் சிறப்பாக பெர்ஃபாமன்ஸ் செய்தவர்கள், செய்யாதவர்களைச் சொல்லும்படி பிக் பாஸ் அறிவித்தார்.

பெஸ்ட் பெர்ஃபாமன்ஸ்க்கு தர்ஷன் பேரும், மீரா பேரும் வந்தது. யாரும் எதிர்ப்பு தெரிவிக்காததால் அவர்களே செலக்ட் ஆனார்கள். வாரம் முழுவதும் பெஸ்ட் பெர்ஃபாமர் பிரிவுக்கு முகினும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கொடுத்த வேலையைச் சுவாரசியமாகச் செய்யாதவர்கள் பெயர் தேர்வு வரும்போது தான் பிரச்சினை ஆரம்பித்தது. அபிராமியும், லோஸ்லியாவும் இரண்டு நாட்களாக அனைவரையும் தங்கள் பெயரைச் சொல்வதற்கு கேன்வாஸ் செய்திருக்கிறார்கள். லியா கவினிடம் கேட்ட போது கண்டிப்பாக முடியாது எனச் சொல்லிவிட்டார். லியா, அபி இரண்டு பேரும் அவங்க என்னென்ன தப்பு செய்தார்கள் என லிஸ்ட் போட்டுக் கொண்டிருந்தனர். மற்றவர்கள் எல்லோரும் ஒத்துக் கொண்டாலும், கவின் அதை ஒத்துக் கொள்ளவே இல்லை. இரண்டு பேரும் திட்டம் பண்ணிச் செய்கிறார்கள், இதை எப்படி ஒத்துக் கொள்ள முடியுமென விவாதித்துக் கொண்டிருந்தார்.

கவினின் டார்கெட் சேரன். அவர் தான் சரியாகச் செய்யவில்லை என கவின் சொல்ல, சேரன், ‘எனக்குக் கொடுத்த கேரக்டரைச் செஞ்சேன்’ என விளக்கம் கொடுத்தார். நடுவில் ரேஷ்மா, ‘என்கிட்ட கத்துனீங்க இல்ல’ என அதே பிரச்சினையை ஆரம்பித்தார். ரேஷ்மா கோமாவில் படுத்துக் கொண்டிருக்கும் போது, ‘நான் சேரன் வந்துருக்கேன்’ எனச் சொன்னால் கூட, “ஏன் என்கிட்ட கத்துனீங்க?” எனக் கேட்டுவிட்டு மறுபடியும் கோமாவிற்குப் போவார் போல். அவ்வளவு ஆழமாகப் பதிந்திருக்கு அவங்க மனதில்.

நடுவில் மீரா வழக்கம் போல நிறையய்ய்ய பேசி, ஷெரின் பேரையும், சாக்‌ஷி பேரையும் சொன்னார். அதாவது அவங்க பண்ணதில் சுவாரசியம் குறைவாக இருந்தது எனத் தெளிவாகச் சொன்னார். இதில் கூத்து என்னவென்றால், நல்ல பெர்ஃபாமருக்கு மீரா பேரை முதலில் சொன்னது ஷெரின் தான். அப்படியே விட்டிருந்தால், ‘சொன்னது மீரா தானே!’ என விட்டிருப்பர். அங்க தான் சனி பகவான் கவினைப் பார்த்துச் சிரித்தார். மீரா சொன்னதுக்கு விளக்கம் கொடுக்கறேன் பேர்வழியென, ‘ஷெரின், சாக்‌ஷிக்கு மொழிப் பிரச்சினை இருக்கு. அதனால அவங்களால சரியா செய்ய முடியாம போயிருக்கும்’ என கவின் சொன்னான்.

ஒரு வழியாக அபியும், லியாவும் ஜெயிலுக்கு போவதாக முடிவானது. முடிந்து வெளியே போன கவினுக்கு, சேரன் பேரைச் சொல்லும் போது யாருமே பேசவில்லையெனக் கோபம். சரவணன், மீரா, சாண்டி கூட உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். அஃபிஷியலாக இந்தக் கூட்டணி கன்ஃபார்ம் ஆகிவிட்டது. டாஸ்க்கின் போது சேரன் நடந்து கொண்ட விஷயத்தைச் சொல்லி நியாயம் கேட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது சரவணன், ‘என் பேரைச் சொன்ன போது நீங்கலாம் பேசினீங்களா? அதே மாதிரி தான் இதுவும். இங்க யாரும் பேச மாட்டாங்க’ என தன் பங்குக்கு சொல்லிக் கொண்டிருந்தார். சரவணனும் அப்படித்தான் இருக்கார். மீட்டிங்கென வரும் போது அவரும் எந்தக் கருத்தையும் சொல்வதே இல்லை.

‘சரியாக விளையாடாதவங்க பேருக்கு இவ்வளவு விவாதம் நடந்துதே! ஏன் நல்லா விளையாடறவங்களை மட்டும் யாருமே எதுவுமே பேசாம செலக்ட் பண்ணினாங்க?’ என மது மண்டையில் பல்பு எரிய, மீரா பேர் எப்படி வந்தது என ஆரம்பித்தார்.

உண்மையில் இந்த வார டாஸ்கில் கதாபாத்திரமாகவே மாறி நின்றதில் மதுவும், ரேஷ்மாவும் தான் பெஸ்ட் பெர்ஃபாமன்ஸ்க்குத் தகுதியான நபர்கள். அதற்கப்புறம் தான் மற்றவர்கள் வருவார்கள். மதுவின் ஸ்லாங், நடிப்பு இரண்டுமே நன்றாக இருந்தது. ‘ரேஷ்மா தான் திருடி’ என கடைசி வரைக்கும் யாருமே கண்டுபிடிக்கவில்லை. அந்தளவுக்கு அட்டகாசமாகச் செய்தார். அப்படி இருக்கும் போது தர்ஷன் பேரையும், மீரா பேரையும் சொன்னது நியாயமே இல்லை. இரண்டு டீம் இருந்த இடத்தில், டீமுக்கு ஒருத்தரையாவது செலக்ட் பண்ணிருக்க வேண்டும். அதுவும் செய்யவில்லை. மீரா, தர்ஷன் இரண்டு பேரும் ஒரே அணி.

வொர்ஸ்ட் பெர்ஃபாமன்ஸ் கொடுத்தது, சாண்டியும் கவினும் தான். சும்மா ஆய், ஊய் எனக் கத்தியது, பாட்டு பாடினதைத் தவிர எதுவும் செய்யவில்லை.

மீரா பேரைச் சொல்லும் போது யாருமே பேசாமல் போனதுக்கும் காரணம் இருக்கு. சேரன், மது, அபி இவங்க யாருமே அதை எதிர்க்க முடியாது. நியாயமான காரணம் சொன்னாலும் கூட, தனிப்பட்ட விரோதத்தில் தான் இதைச் சொல்றாங்க என எடுத்துக் கொள்வார். மீராவே அப்படித்தான் சொல்லுவார். மீதி இருப்பதில், ஷெரின் அவங்க அணியில் இருந்து பார்த்ததால் மீரா பேரை நாமினேட் பண்ணிருக்கலாம். சரவணன், சாண்டி, கவின் ஆகியோர் இப்பொழுது ஒரே அணி. ஆக, யாராவது ஆரம்பித்தால் நாம் பேசலாமென எல்லோரும் உட்கார்ந்து கொண்டிருக்க, கடைசி வரைக்கும் “முதலில்” யாருமே பேசாமல் போனதால், மீரா செலக்ட் ஆனார். சாண்டிக்கு ரூட் விட்டதும், மைனரோட இருந்ததும், அவங்க கேரக்டரே கிடையாது. தர்ஷனும் கத்திப் பேசுவதைத் தவிர எதுவும் செய்யவில்லை. என்ன செலக்‌ஷனோ!?

மது ஆரம்பித்த பிரச்சினையில சேரனும் சேர்ந்து கொண்டார். ‘ஏன் அப்பவே பேசலை?’ எனக் கேட்டதுக்கு, சேரன் சொன்ன விளக்கமும் ஏத்துக்கிற மாதிரி தான் இருந்தது. ‘ஏற்கெனவே வாய்க்கால் தகராறு இருக்கும் போது, நான் எப்படி அதைச் சொல்ல முடியும்?’ எனக் கேட்டது நியாயமான கேள்வி தான்.

சனி பகவான் கவினைப் பார்த்துச் சிரித்ததன் பக்கவிளைவு தொடங்கியது. ஷெரினும், சாக்‌ஷியும் மூக்கைச் சிந்திக் கொண்டிருந்தனர். வழக்கம் போல் கவின் போய், ‘நான் அந்த அர்த்தத்துல சொல்லலை மச்சி’ எனச் சமாதானம் பண்ணிக் கொண்டிருந்தான். ‘எனக்கு மொழி தெரியலேன்னாலும், நான் எவ்வளவோ ட்ரை பண்ணினேன். முடிஞ்சதைத்தானே செய்ய முடியும்’ என ஷெரின் கண்ணைக் கசக்க, இங்கே இதயமே கசங்கியது.

பாத்ரூமுக்குள் அழுது கொண்டிருந்த சாக்‌ஷி, வெளியே வந்து, ‘நான் அப்படி என்ன சுவாரசியம் இல்லாம செஞ்சேன்?’ என கவினிடம் கத்த, கவின் உச்சகட்ட கோபத்தில் கத்திவிட்டார்.

ஆக்சுவலாக சுவாரசியம் குறைவாக இருந்தது எனச் சொன்னது மீரா. மொழிப் பிரச்சினை இருக்கெனச் சொன்னது கவின். ஆனால் இந்த சாக்‌ஷி என்ன பண்ணினார் என்றால், மீராவிடம் போய், ‘நீ எப்படி மொழியைப் பத்திப் பேசலாம்?’ என சண்டை போட்டார். கவினிடம், ‘நான் சுவாரசியமா பண்ணலன்னு நீ எப்படி சொல்லலாம்?’ எனச் சண்டை. ஷ்ஷ்ப்ப்பாஆஆ..

நேற்று நடந்த பிரச்சினைக்கு அப்புறம், மீராவை தான் டார்கெட் பண்ணுவாங்க என நினைத்தால், பெஸ்ட் பெர்ஃபாமர் அவார்டைத் தூக்கி மீரா கையில் கொடுத்தது முதல் அதிர்ச்சி. அதுவும் மீரா பேரை நாமினேட் பண்ணினது ஷெரின் தான் எனத் தெரிந்த போது அடுத்த அதிர்ச்சி. பிரச்சினையானதுக்கு அப்புறம் அபியும், லியாவும் மீரா பக்கம் நின்று, ‘நீதிடா, நேர்மைடா’ எனப் பேசியது பேரதிர்ச்சியாக இருந்தது. உங்களை எல்லாம் வைத்துக் கொண்டு ஒரு கொலை கூடப் பண்ண முடியாதுடா மொமன்ட்!

லோஸ்லியா ஜெயிலுக்குப் போகக்கூடாது என்கிற ஒரே காரணத்துக்காகச் சேரனை டார்கெட் பண்ணின கவினின் வேலையை கரெக்டாக கேட்ச் பண்ண ரேஷ்மா, சாக்‌ஷிக்கு வேப்பிலை அடித்துக் கொண்டிருந்தார். இந்த சாக்‌ஷி தனக்கு மூளையென்று ஒன்றிருக்கு, நாம் அதை உபயோகிக்க வேண்டுமென எண்ணவேண்டும். அப்பொழுது தான் உருப்படுவார்.

ஆக, மீரா செய்ததுக்கு நாம் இங்கே பொங்கினதுக்குக் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் நடந்து கொண்டு, நமக்கு விபூதி அடித்த அத்தியாயம் இது.

மகாதேவன் CM