நேர்மையான அதிகாரியாகப் பணி புரிய நினைக்கும் சப் இன்ஸ்பெக்டர் சுபாஷ், தன் உயரதிகாரிகளால் பணிந்து போகச் சொல்லி அடக்கப்படுகிறார். அதையும் மீறி, அவர் நேர்மையாக இருக்க முயல்வதால் அவரது குடும்பத்தையே இழக்கிறார். அதன் பிறகாவது சுபாஷ் அடங்குவான் என நினைத்தவர்களுக்கு, சுபாஷ் கொடுக்கும் பதிலடி தான் படம்.
பழிவாங்கும் கதை என ஒரு வரியில் சுருக்கலாம். எனினும், அதிகாரத்தில் இருப்பவர்கள் தவறு செய்யப் பயப்படவேண்டும் என்பதுதான் படத்தின் தீம்.
சகல வித்தைகளையும் கரைத்துக் குடித்த ஒரு ஹை-டெக் காப்பாக சுபாஷ் எனும் பாத்திரத்தில் ஜெயம் ரவி கலக்கியுள்ளார். அவருக்கும் இன்னும் தனி ஒருவன் ஹேங் ஓவர் போகவில்லை என்றே சொல்லவேண்டும். சுபாஷின் அழகான காதலி அனிதாவாக ராஷி கண்ணா நடித்துள்ளார். படத்தில் மொத்தம் நான்கு வில்லன்கள். கோடீஸ்வர தந்தை நால்வர், அவர்களது நான்கு உருப்படாத அயோக்கிய மகன்கள். இவர்களின் கதாபாத்திர வார்ப்பில், இவர்கள் வில்லன்கள் தான் என்ற நேரடி சித்தரிப்பு சற்றே உறுத்தல். சும்மா விசாரிக்க வரும் எஸ்.ஐ.யிடம், தாங்கள் தான் செய்தோம் என ஒப்பிக்கின்றனர். அவர்களுக்கு உதவி புரியும் கூட்டு ஆணையரான (JCP) சம்பத்தும் தன் குற்றத்தைப் பாதிக்கப்பட்ட எஸ்.ஐ.யை வெறுப்பேத்தி ஒப்புக் கொள்கிறார்.
அதை விடக் கொடுமை, சம்பத் சற்றெனத் திருந்தி விடுவது. உயிருடன் ஒரு குடும்பமே எரிக்கப்பட்டுள்ளது என அறிந்தும், அதுவும் டிப்பார்ட்மென்ட்டைச் சேர்ந்த ஒருவரின் குடும்பம் எரிக்கப்பட்டுள்ளது எனத் தெரிந்தும் எந்தவித குற்றவுணர்வும் கொள்ளாத ஒருவர், ஸ்விட்ச் போட்டது போல் திருந்துவது எல்லாம் தமிழ் சினிமாவில் மட்டுமே சாத்தியம்.
ஜெயம் ரவி ஒவ்வொரு கொலையையும் சொல்லிவிட்டே செய்கிறார். அவரது நகர்வுகள் சில “அட!” போட வைத்தாலும், சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லாமல், வில்லன்களாகச் சித்தரிக்கப்படுபவர்களையும் விட மிகக் கொடுமையாகக் கொல்கிறார். க்ளைமேக்ஸில், இவரிடம் அதிகாரம் வந்த பிறகும், அந்தக் கொலை ஆவேசம் அவருக்குக் குறையாதது படத்தின் மிகப் பெரிய சறுக்கல். இந்தப் படத்தின் மைய இழை, சாட்சியங்கள் இல்லை என்ற காரணத்தைச் சொல்லிக் குற்றவாளிகள் தப்புவதும், அதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரத்தில் வீற்றிருப்பவர்களை மீறித் தண்டனையை நாயகனே தருவதுதான். ஆனால் சாட்சியங்கள் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, தனக்கு அதிகாரம் கிடைத்த பிறகும் தானே இறங்கிக் கொலை செய்வேன் என்பதாகப் படம் முடிவது மிகப் பெரிய ஏமாற்றத்தையும் பயத்தையும் தருகிறது. இன்னும் எத்தனை நாளைக்குக் கொலை செய்வதை ஹீரோயிசமாகக் காட்டும் தமிழ்த் திரையுலகம்?
இணையதளம் படத்துப் பாணியில், இப்படத்தில் நாயகன் ஒரு கொலை புரிவதாகக் காட்சி வைத்துள்ளனர். இன்ன நேரத்தில், இது நடக்கும் என முன் கூட்டியே அனைத்தையும் திட்டமிடுகிறார் ஜெயவ் ரவி. ஆனால், சம்பத் ராஷ்ஷி கண்ணாவைக் கைது செய்வார், பின் ராஷி கண்ணாவை மைம் கோபியோடு அனுப்புவார், அப்பொழுது மைம் கோபியை அறையில் தள்ளி ராஷி கண்ணா கதவைச் சாத்திவிடுவார் என்றெல்லாம் பிளான் பண்ணுவது மிகப் பெரிய நகைச்சுவை. முதல் கொலைக்குப் பின்னும், மற்ற மூவர் சுதாரிக்காததும், காவல்துறையினருக்கு அதைத் தடுக்கும் திறமை போதாது என்ற சித்தரிப்பும் படத்தின் மைனஸ்கள்.
இதை எதுவும் யோசிக்க விடாமல் படம் விறுவிறுப்பாய்ப் பயணிக்கிறது. ஜெயம் ரவியின் கொலை செய்வது சரி தான் என ஏற்றுக் கொள்ள வைக்கும் கச்சிதமாகத் திரைக்கதை அமைத்துள்ளார் கார்த்திக் தங்கவேல். அதை மேலும் பட்டை தீட்டும் வண்ணமாக, கலை இயக்குநர் லால்குடி N.இளையராஜாவும், பின்னணி இசையில் சாம் C.S.-உம், ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியனும் பிரமாதப்படுத்தியுள்ளனர். க்ளைமேக்ஸில் பாபு ஆண்டணிக்கு ஜெயம் ரவி வைக்கும் சவால் அட்டகாசம். லாஜிக் மீறல்களைப் பொருட்படுத்தாவிட்டால், படத்தின் விறுவிறுப்பில் பார்வையாளர்கள் கரைவது உறுதி.