Shadow

சிலுக்குவார்பட்டி சிங்கம் விமர்சனம்

Silukkuvarpatti-Singam-movie-review

ஒரு ஜாலியான படம், அதைத் தொடர்ந்து ஒரு சீரியசான படமென்று தனக்கொரு பாணியை உருவாக்கி வருகிறார் விஷ்ணு விஷால். ராட்சசன் எனும் த்ரில்லர் படத்தைத் தொடர்ந்து, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் ஸ்டைலில் முழு நீள நகைச்சுவை படமாக, அவரது நடிப்பில் சிலுக்குவார்பட்டி சிங்கம் படம் வெளிவந்துள்ளது.

எந்த வம்புதும்புக்கும் போகாத மாaணிக்கமாக வாழ்பவர் கான்ஸ்டபிள் சத்யமூர்த்தி. தான் பிறவி எடுத்ததே, காவல்நிலையத்தில் உள்ள சக காவலதிகாரிகளுக்கு உணவு வாங்கிவரத்தான் என்று கடமையில் கண்ணுமாய்க் கருத்துமாய் இருப்பார். அவர் ஹாஃப்-பாயிலை வாயில் வைக்கக் கொண்டு போகும் பொழுது யாராவது தட்டி விட்டால் மட்டும் பாட்ஷாவாக ருத்ர தாண்டவம் ஆடிடுவார். இந்த ஹாஃப்-பாயில் பலவீனம் சத்யமூர்த்தியை எங்குக் கொண்டு போய் நிறுத்துகிறது என்பதுதான் படத்தின் கதை.

தொடக்கம் முதலே படம் நகைச்சுவையாகப் பயணித்தாலும், பெரும் தாதாவான சைக்கிள் ஷங்கரின் கைதுக்குப் பின் படம் அதகளமாகிறது. அதுவும் இரண்டாவது பாதியில், யோகி பாபுவின் டைமிங் ஒன்லைன் கவுன்ட்டர்கள் முழுவதற்கும் திரையரங்கத்தில் பயங்கர சிரிப்பொலி எழுகிறது. யோகிபாபுவே முழுக் கலகலப்பிற்கும் பொறுப்பேற்றுக் கொள்வதால், கருணாகரனுக்குப் பெரிதாக வேலையில்லை. அசட்டுத்தனம் செய்யாத மிகச் சீரியசான பாத்திரம் என்றாலும், சைக்கிள் ஷங்கராக நடித்துள்ள ரவி ஷங்கரின் ஆஜானுபாகு தோற்றம் படத்தின் நகைச்சுவைக்குப் பெரிதும் உதவுகிறது.

சிங்கமுத்துவின் நகைச்சுவை பெரிதும் எடுபடவில்லை என்றாலும், ரவி ஷங்கருடனான அவரது காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. சிறைக்குள் ரவி ஷங்கரை வைத்து விஷ்ணு விஷால் செய்யும் டார்ச்சரும் ரசிக்க வைக்கிறது. லிவிங்க்ஸ்டன், ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், ஆடுகளம் நரேன், போஸ்டர் நந்தகுமார், இயக்குநர் மாரிமுத்து எனக் கதையில் நிறைய பாத்திரங்கள். பாட்ஷா கண்ணில் மறுபடியும் படக்கூடாதென ஊரைக் காலி செய்து கொண்டு செல்லும் இந்திரனான ஆனந்த்ராஜ் சிலுக்குவார்பட்டியில் தான் கடை விரித்து மார்க்கெட்டில் மாமூல் வாங்கிக் கொண்டிருக்கிறார். படம் முடிந்த பிறகு, போஸ்ட்-க்ரெடிட் சீனில் வரும் அந்த மினி அத்தியாயத்தையும் நகைச்சுவையாகச் சொல்லியுள்ளனர்.

நாயகனின் அத்தை மகள் ராஜி எனும் ராஜேஸ்வரியாக ரெஜினா கசாண்ட்ரா. செளந்திரராஜனுடனான அவரது கல்யாணத்தை விஷ்ணு விஷால் நிறுத்தும் விதமும், அங்கே நடக்கும் கலாட்டாவும் நல்ல நகைச்சுவை. கனகா எனும் ஆட்டக்காரியாக ஓவியாவை இப்படிப் பயன்படுத்தியிருக்க வேண்டாம்.

இயக்குநர் எழிலிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய செல்லா அய்யாவு-இன் கைவண்ணத்தில் சிலுக்குவார்பட்டி சிங்கம் நல்ல காமெடி என்டர்டெயினராகச் சிரிக்க வைக்கிறது.