கோகிலாவின் அம்மா வடிவுக்கு நுரையீரல் புற்றுநோய் இரண்டாம் நிலையில் உள்ளது. தனது அம்மாவைக் குணபடுத்த 15 லட்சம் செலவாகும் என மருத்துவர் சொல்லிவிட, அப்பணத்திற்காகக் கோகிலா எடுக்கும் முயற்சிகளே படத்தின் கதை.
ஒப்புக்குச் சப்பாணியாகக் கூட ஒரு நாயகன் இல்லாத முழு நீள ஹீரோயின் ஓரியன்டட் படம். நயன்தாராவை நம்பி மட்டுமே இத்தகைய முயற்சி சாத்தியம். பாவாடை சட்டையில் அப்பாவியான முகத்துடன் படம் முழுவதும் நயன்தாரா மட்டுமே! இடைவேளைக் காட்சியில் நயன்தாரா காட்டும் மனப்பாங்கு (ஆட்டிட்யூட்) நகைச்சுவையாகச் சித்தரிக்கப்பட்டிருந்தாலும், அந்த வன்மம் மிகவும் அச்சுறுத்துகிறது.
காதலில் விழுந்த சேகராக யோகி பாபு. எல்.கே எனும் லக்ஷ்மண குமாராக அன்புதாசன் நடித்துள்ளார். அவரது அறிமுகமே அட்டகாசம் எனினும் யோகி பாபுவுடனான அவரது காட்சிகளில் பார்வையாளர்கள் வெடித்துச் சிரிக்கிறார்கள். ‘சாய்பாபா படத்தை 30 பேருக்கு ஷேர் பண்ணா அத்தைக்குக் குணமாகிடும்’ என அன்புதாசன் சொல்லும்போது, யோகி பாபு ரியாக்ஷன் அட்டகாசம். யோகி பாபுவை விட அதிக அப்ளாஸ் அள்ளுவது இவர்தான்.
காவல்துறை அதிகாரி குருவாக பருத்தி வீரன் சரவணன் நடித்துள்ளார். அவரிடமும் நயன்தாரா ‘கேம்’ விளையாடுவது அட்டகாசம். படத்தின் சுவாரசியமே நயனின் அந்தச் சாதுர்யமான போக்குதான். படம் முழுவதும் முகத்தை உம்மென்று சோகமாக வைத்திருக்கும் நயன்தாராவின் அப்பாவித்தனம் மிகப் போலியாக உள்ளது. அறம் படத்தில், நயன்தாரா க்ளைமேக்ஸின் பொழுது கைதட்டல் வாங்கியது அவரது யதார்த்தமான நடிப்பிற்காக! இப்படத்திலோ, திணிக்கப்பட்டதாய் உள்ளது அவரது நடிப்பு. அத்தகைய எண்ணம் எழுவதற்கு நயனின் உடையும் காரணமாக இருக்கலாம். பெரும்பாலும் பாவாடை சட்டையிலேயே உலா வருகிறார். யோகி பாபு, பக்கத்து வீட்டுப்பையன் போல் இருக்கிறார். சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவில் எல்லாப் பாத்திரங்களும் அழகாகவும் இயல்பாகவும் தெரிய, நயனிடம் மட்டும் ஓர் அந்நியத்தன்மை தெரிகிறது.
திரையில் தான் நாயகன் இல்லையே தவிர படத்தில் உள்ளார். அது இசையமைப்பாளர் அனிருத். பின்னணி இசையாலும், பாடல்களாலும் படத்திற்குத் தனியொரு அழகை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
எது நகைச்சுவை என்பதில் இயக்குநர் நெல்சன் இன்னும் கவனமாக இருந்திருக்கலாம். சுத்தியால் அடித்து, கையில் கிடைக்கும் பொருளையெல்லாம் கொண்டு ஒரு குடும்பம் நால்வரைக் கொலை செய்வது நகைச்சுவையில் சேர்த்துவிடுகிறார். அடுத்தடுத்த படங்களில் முழு நீள நகைச்சுவை இயக்குநருக்கு வசமாகட்டும்.
யோகி பாபுவுக்கென ஒரு பாடலை ஒதுக்கி, அதையும் சிவகார்த்திகேயனை எழுத வைத்து, அப்பாடலை விளம்பரத்துக்கான தூண்டிலாக உபயோகித்துள்ளது இயக்குநர் நெல்சனின் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது. படத்தின் ஸ்க்ரிப்டிலும் அந்தப் புத்திசாலித்தனம் ஆங்காங்கே தெரிவதாலும், யூகிக்க முடியாதது போல் கதையின் போக்கு இருப்பதாலும் படம் போரடிக்காமல் பயணிக்கிறது.