
சரக்கு வாங்கினால் ஊறுகாய் இலவசம் என விஜய் டிவி ராமர் நகைச்சுவையாகத் தலைப்பைக் குறியீட்டு வசனமாகச் சொல்கிறார். எனினும், குற்றம் செய்தால் தண்டனை இலவசம் என்பதே படத்தின் ஒருவரிக்கதை.
ஒரு பெண் கொல்லப்படுகிறாள்; சிறைப்பட்ட ஒருவன் அழுகின்றான்; அந்த அழுகையால் பீர் பாண்டியின் தூக்கம் தடைப்படுகிறது; அத்தடையையும் மீறித் தூங்கிக் கனவு காண்கின்றான் பீர் பாண்டி; அவன் கனவில் வரும் பாடலில் அவன் குடிகார அரசனாக இருக்கின்றான்; அக்கனவில் அறிமுகமாகும் கதாபாத்திரங்கள் சிறையில் பீர்பாண்டியின் அறைவாசிகளாக இருக்கிறார்கள்; அவர்கள் ஏன் சிறைக்கு வந்தார்கள் எனக் கோர்வையற்ற கதைச்சொல்லால் தலையைக் கிறுகிறுக்கும்படி செய்துவிடுகிறது படத்தின் முதற்பாதி திரைக்கதை. பீர்பாண்டியும், அவனது நண்பர்களும் சிறையை விட்டு வெளியேறியதும் ஒரு பெண்ணின் மீது இரண்டாம் பாதியில் காதலில் விழுகிறார்கள். காதலை வாங்க முயற்சி செய்யும் அவர்களுக்கு என்ன இலவசமாகக் கிடைக்கிறது என்பதைப் பாலியல் குற்றம், நகைச்சுவை, காதல், நட்பு, துரோகம், பழிவாங்கல் கலந்து சொல்லியுள்ளார் இயக்குநர் S.K.செந்தில் ராஜன்.
பீர் பாண்டியாக விஜய் டிவி ராமர் நடித்துள்ளார். அவரையும், அவர் நண்பர் இருவரும் பீர்பாண்டி வகையறா என அழைக்கப்படுகிறார்கள். யாரையாவது ஏமாற்றுவது, அப்பணத்தில் குடிப்பது, காவல்துறையிடம் மாட்டுவது தான் அவர்கள் வாடிக்கை. நகைச்சுவைக் காட்சிகள் அனைத்தையுமே குடி சார்ந்தே அமைக்கப்பட்டுள்ளது. மறுபுறம், பெண்களைக் காரில் கடத்திக் கொல்கிறது நால்வர் குழு.
படத்திற்கு அர்வின் ராஜ் இசையமைக்க, விக்னேஷ் மலைச்சாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒரு முழுப் பாடல் முழுவதும் மழையில் நனைந்தபடி படமாக்கப்பட்டுள்ளது. படத்தில் இடம் பெறும் ஒரு ஐட்டம் பாடலை ஒரே நாளில் படமாக்கி இருக்கிறார்கள். கன்னட நடிகை பூஜாஸ்ரீ நாயகியாக நடித்துள்ளார். மேலும் கலையரசன், சூப்பர் குட் சுப்பிரமணி, மாரிஸ் ராஜா, சம்பத், மீசை ரமேஷ், அருண், அம்மையப்பன் பாலாஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் முடிவில் ஓர் எதிர்பாராத ட்விஸ்ட்டை வைத்து அசத்தியுள்ளார் இயக்குநர். அதை விட ட்விஸ்ட், அவர் படத்தின் இறுதியில் கூறும் திருக்குறள் நீதி.
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.
குற்றம் புரிபவருக்குத் தண்டனை இலவசம் என நீதி வழங்கி, அந்நீதியைப் பழிவாங்கும் கொலையாகவும் வைத்துவிட்டு, கொல்லாமையைக் கடைப்பிடிப்பவனே சிறந்தவன் என லெஃப்டில் இண்டிக்கேட்டர் போட்டு ரைட்டில் திரும்பிவிடுகிறார் இயக்குநர்.