Shadow

காதல் என்பது பொதுவுடைமை விமர்சனம்

சமூகம் பேசத் தயங்கும், பேசினாலும் அருவருப்பாக அதை அணுகும் விஷயத்தைக் கருப்பொருளாகக் கொண்டுள்ளது படம். சாமுக்கும் நந்தினிக்குமான காதலை, சாமின் தாயிடம் சொல்வதுதான் படம். சாமாக லிஜோமோலும், நந்தினியாக அனுஷா பிரபுவும் நடித்துள்ளனர்.

மகளின் காதலனை வரவேற்கும் ஆர்வம் கலந்த மகிழ்ச்சியில் திளைக்கிறார் லக்ஷ்மி. லக்ஷ்மியாக ரோகிணி நடித்துள்ளார். லெஸ்பியன் இணைகளுக்கு ஆதரவாக இருக்கத் துணைக்கு வரும் ரவீந்திராவை மாப்பிள்ளையாக நினைத்துக் கொள்கிறார் ரோகிணி. ரவீந்திரவாக நடித்துள்ள கலேஷ், சங்கடத்துடன் அந்தச் சூழலை அணுகுவது ரசிக்க வைக்கிறது. அந்தச் சூழலின் பதைபதைப்பைப் பாத்திரங்கள் அழகாக வெளிப்படுத்தியுள்ளனர். இப்படியாகப் படத்தின் முதற்பாதி சட்டெனக் கடந்துவிடுகிறது.

படத்தின் இரண்டாம் பாதியில், பிரதான கதாபாத்திரங்கள், ஓரினசேர்க்கையை எதிர்த்தும் ஆதரித்தும் பேசியவண்ணம் உள்ளனர். ஒரு வீட்டுக்குள்ளேயே, கதாபாத்திரங்களை உரையாட வைத்து காட்சிகளை நகர்த்தியுள்ளார் இயக்குநர். இந்தப் படம், சாம் – நந்தினி பற்றியது என்பதை விட, தனது மகள் தேர்ந்தெடுக்கும் துணையை லக்ஷ்மி எப்படி அணுகுகிறார், அது அவரை எப்படிக் குழப்புகிறது, சங்கடப்பட வைக்கிறது என்பது பற்றிய படமாக உள்ளது. மாலினி ஜீவரத்தினம், படத்தின் உள்ளடக்கத்தில் ஈடுபட்டும், பனிப்பாறையின் நுனியையே இப்படம் முழுமையாகத் தொடவில்லை. நாடகமாக ஏற்றுவதற்கு ஏற்ற மேடை ஸ்க்ரிப்ட். படமாக ரசிக்க முடிவதற்கு, அனுபவமிக்க நடிகர்களும், ஸ்ரீசரவணனின் ஒளிப்பதிவுமே காரணம்.

நீல வண்ணத்தில் கார், நீல வண்ண நெயில் பாலிஷ், நீல நிற உடை முதலியவற்றைக் குறியீடாகப் பயன்படுத்தியுள்ளார் இயக்குநர் ஜெயபிரகாஷ். LGBTQ பெருமிதக் கொடியில், நீல நிறம் என்பது அந்தச் சமூகத்தைக் குறிக்கிறது. Blue is the warmest colour படத்தின் இயக்குநர், நீல வண்ணத்தைத் தீவிரமான உணர்ச்சிகளுக்கும், சில காட்சிகளில் துயரார்ந்த உணர்ச்சிகளுக்குமான குறியீடாகப் பயன்படுத்தியிருப்பார். லெஸ்பியன் கொடியின் நிறம் இளஞ்சிவப்பால் (Pink) ஆனது. ஜெயபிரகாஷ் நீல நிறத்தைப் ஃப்ரெஞ்சு இயக்குநர்க்கு ட்ரிப்யூட் போல் மட்டுமே பயன்படுத்தியுள்ளார்.

லிஜோமோல்! காதலையும், காதலின் தீவிரத்தையும், தனது பயத்தையும், அதை உடைத்து வெளியில் வரத் துடிப்பதையும் அழகாகத் தன் நடிப்பில் கொண்டு வந்துள்ளார். அனுஷா பிரபுவின் மீது அவருக்கு எப்படிக் காதல் வருகிறது என்ற ஃபிளாஷ்-பேக் அழகாக இருக்கிறது. அதில் இன்னும் அழுத்தத்தைக் கூட்டியிருக்கலாம். வினீத் கதாபாதிரத்தைக் குடும்பத்துக்குள் இல்லாமல் விலக்கி வைத்துள்ளனர். லிஜோமோலுக்கு அவரது பொறுப்பின்மையைச் சுட்டிக் காட்டி விவாதத்தைத் திசை திருப்ப முடிகிறது. இப்படம், அப்பா இல்லாமல் வளரும் தவிப்பைப் பற்றியோ, சங்கடத்தைப் பற்றியோ இல்லை. பேசுபொருளின் தாக்கத்தை மடைமாற்றுவதாக இல்லாமல் இருந்திருக்கலாம் வினீத்தின் கதாபாத்திரம். அவர் அதையும் மீறி, ‘இயற்கையின் நியதி’ பற்றிப் பேசுகிறார். பிரச்சனையைப் பொறுமையாகத்தான் பேசித் தீர்க்கவேண்டும் என, ‘ரவீந்திராவைக் கல்யாணம் பண்ணிக்கோ!’ என மகளிடம் டீல் பேசுகிறார். இந்தியச் சமூகத்தில் மட்டும்தான் இனிஷியல்களாக மட்டுமே இருந்தால் கூட, ஒருவரது தனிப்பட்ட அந்தரங்கத்தில் கூச்சமின்றி மூக்கை நுழைக்க முடியும். அதே போல், பேசாப்பொருளைத் துணிச்சலாகக் கருப்பொருளாகக் கொள்வதால் மட்டுமே ஒரு படைப்பு, கலை ஆகிவிடாது.

இயற்கையின் நியதி இன்னதுதான் என யாரால் தீர்மானிக்க இயலும்? தனக்குத் தெரியாத விஷயத்தையோ, புரியாத விஷயத்தையோ பற்றி மனிதன்க்கு உள்ளார்ந்த ஆழ்ந்த பயமிருக்கும். அதை ஒதுக்கி வைக்க, சமயம், சடங்கு, சாதி அனுஷ்டானங்கள் என பலவற்றை உருவாக்கி ஒரு கடினமான சமூகக் கட்டமைப்பை உருவாக்கி வைத்திருக்கிறான். அதற்கு அப்பால் உள்ள யாவையும் பாவம், தீட்டு, சாஸ்திர விரோதமானது, மத ஆச்சார்யங்களுக்குப் புறம்பானது என ஒதுக்கி வைத்துவிடுகிறான். பகுத்தறிவு பெற்றுவிட்தாகக் கருதிக் கொள்ளும் மனிதன், பாவம், மதம், கடவுள் என்ற வார்த்தைகளுக்குப் பதிலாக ‘இயற்கை’ எனும் வார்த்தையைப் பயத்திற்கு எதிரான கேடயமாகப் பயன்படுத்துகிறான். ஆண், பெண் தவிர்த்து மூன்றாம் பாலினத்தை இயற்கைக்கு மாறானவர்கள் என ஒதுக்கி வைத்தான் மனிதன். தான் என்ன ‘பால் (gender)’ எனத் தீர்மானிப்பது ஒருவருவரின் தனிப்பட்ட தேர்வோ, விருப்பமோ இல்லை. அதை அவர்களது உடலின் உட்சுரப்பியே தீர்மானிக்கிறது. அதே மாதிரி, எதிர்பால் கவர்ச்சியைப் போல் தன்பால் கவர்ச்சியையும் உடலே தீர்மானிக்கிறது. அது இயற்கைக்குப் புறம்பானது என அஞ்சி நடுங்கி, சக மனிதர்களை வெறுத்து ஒதுக்குவது என்பது அறமற்ற செயல். அவர்களை ஏற்றுக் கொண்டால், உலக இயக்கம் ஸ்தம்பித்து விடும், இளைஞர்கள் கெட்டு (!?) விடுவார்கள் என அஞ்சுவது பத்தாம்பசலித்தனமே அன்றி, அதற்கு எந்த அறிவியல் முகாந்திரமும் இல்லை. யாருக்கு யார் மீது கவர்ச்சி என்பதை அவரவர் உடல் தீர்மானிக்கும் விஷயம். மனித இனம் தோன்றும் முன்பே உயிரினம் தோன்றிவிட்டது, உயிர்கள் தோன்றும் முன்பே உலகம் தோன்றிவிட்டது. உலகத்தையோ, இயற்கையையோ மனிதனால் ஒருகாலும் காப்பாற்ற இயலாது. பரிணாம வளர்ச்சியில் நெருப்புக் கோளம், பனி உரண்டை என அது வெவ்வேறு படிநிலைகளைக் கடந்தது போல், இன்னமும் கடக்கும். இயற்கை தன்னைத் தானே தகவமைத்துக் கொள்ளும். அதைக் காரணம் காட்டி, சக மனிதர்களை ஒதுக்காமல் இருப்போம்.