Search

“வாரம் ஒரு புது தொடர்” – ஆகாவென அசத்தும் ஆஹா

தமிழ் மொழிக்கென்றே பிரத்தியேகமாக சிறப்பான படைப்புகளை வழங்கி, அசத்துகீரது ஆஹா ஓடிடி தளம். ஆஹா தளத்தின் அடுத்த படைப்பாக வெளியாகிறது “ஆன்யா’ஸ் டுடோரியல்” எனும் இணையத் தொடர். இயக்குநர் பல்லவி கங்கி ரெட்டி இயக்கத்தில் ரெஜினா கஸண்ட்ரா, நிவேதிதா சதீஷ் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இத்தொடர் ஒரு புதுமையான ஹாரர் தொடராக உருவாகியுள்ளது. பாகுபலியை உருவாக்கிய ஆர்கா மீடியா ஒர்க்ஸ் இத்தொடரைத் தயாரித்துள்ளது.

ஜூலை 1 அன்று வெளியாகவுள்ள இந்த இணையத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பில், ஆஹா தமிழ் சார்பில் அஜித் தாகூர், “ஆஹா எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் புதுமையான கதைகள் கொண்ட படைப்புகளை வெளியிடுகிறது. 190 நாடுகளில் ஆஹா ஓடிடி வெற்றிகரமாக ஸ்ட்ரீம் ஆகிறது. அதற்கு உங்களது ஆதரவு தான் காரணம். முதல்வர் ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் ஆஹா தமிழ் தளத்தை நிறுவினோம். இப்போது 2 மில்லியன் சப்ஸ்க்ரைபர்களைக் கடந்து வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு தனிப்பட்ட மொழிகளிலும், அதற்கு ஏற்றவாறான தனித்தன்மை கொண்ட படைப்புகளைக் கொடுத்து வருகிறோம். அதற்கு மக்களும் வரவேற்பைக் கொடுத்துள்ளனர். இந்தத் தொடர் எங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. இந்நிகழ்விற்கு வந்துள்ள SJ சூர்யா, சுந்தர் சி, விஜய் ஆண்டனி ஆகியோருக்கு நன்றி. அல்லு அரவிந்த் அவர்களுக்கு நன்றி. ஆன்யா’ஸ் டுடோரியல் தொடர் இவ்வளவு பெரியதாக உருவாகக் காரணம் சோபுகாரு தான். இந்தக் கதையைக் கேட்டவுடன் இதில் சவாலான பல கதாபாத்திரங்கள் இருப்பது புரிந்தது. அந்தப் பாத்திரங்களுக்கு ரெஜினா கஸாண்ட்ரா, நிவேதிதா ஆகிய இருவரும் பொருத்தமாக இருந்தார்கள். ஆஹாவில் உள்ளடக்க பிரிவில் முதலில் இணைந்த நபர் இயக்குனர் பல்லவி தான். பின்னர் அவர் இயக்குநராக தன் பயணத்தைத் தொடர வேண்டும் என விருப்பப்பட்டு இயக்குநராக மாறினார். இந்தத் தொடரை சிறப்பாக இயக்கியுள்ளார். இது ஒரு உணர்வுபூர்வமான கதையாக இருக்கும். நாங்கள் எப்போதும் புதுமையான கதைகளை உருவாக்க விருப்பப்படுவோம். அந்த வகையில் ஆன்யா’ஸ் டுடோரியல் எங்களது முக்கியமான படைப்பாக இருக்கும்” என்றார்.

பாகுபலியை உருவாக்கிய ஆர்கா மீடியாஸ் சார்பில் பேசிய தயாரிப்பாளர் சோபு ஆர்லகண்டா, “இது தான் எங்களது முதல் தமிழ்ப் படைப்பு. அதில் ஆஹா உடன் இணைந்தது மகிழ்ச்சி. பெரிய படமோ, சின்ன படமோ எங்களுக்குக் கதை தான் முக்கியம். அந்த வகையில் ஆன்யா’ஸ் டுடோரியல் சிறப்பாக வந்துள்ளது. இந்தத் தொடரின் கதையைக் கேட்டவுடன், கதையில் இருந்த டிராமா எங்களைக் கவர்ந்தது. இயக்குநர் பல்லவி கங்கி ரெட்டியின் இயக்கத்தில் வரும் முதல் படைப்பு இது. ரெஜினா கஸண்ட்ரா, நிவேதிதா இந்தத் தொடருக்குள் வந்தது எங்களுக்கு மகிழ்ச்சி. அவர்கள் இருவரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர்” என்றார்.

நடிகரும் இயக்குநருமான சுந்தர்.சி, “ஆஹா தமிழுக்கு எனது வாழ்த்துகள், அவர்கள் மூலமாக புது திறமையாளர்களும், கதைகளும் உருவாவது மகிழ்ச்சி. அல்லு அரவிந்த் ஓடிடி தொடங்கப் போவதாகச் சொன்னார். ஆனால், இவ்வளவு துரிதமாக ஆரம்பித்து, அதில் வெற்றி கண்டுள்ளது மகிழ்ச்சி. நானும் விரைவில் ஆஹா தமிழுடன் பணிபுரிய விருப்படுகிறேன். ஒரு ஹாரர் தொடரை எழுதுவது சுலபமான காரியம் அல்ல. ஏனென்றால் ஒவ்வொரு எபிசோடுக்கும் மூன்று உணர்வுபூர்மான காட்சிகளையாவது வைத்து, அடுத்த எபிஸொடுக்கான எடிர்பார்ப்போடு முடிக்க வேண்டும். ட்ரெய்லரைப் பார்க்கும் போது, ஈர்க்கும் வகையில் உள்ளது. ஒளிப்பதிவாளரின் பணி சிறப்பாக உள்ளது” எனப் பாராட்டினார்.