Shadow

உறியடி 2 – மனதைத் தொந்தரவு செய்யும்

uriyadi-teaser-launch

2டி நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில், சாவனீர் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் ‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது.

இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தா பேசுகையில், “இந்த படம் ரசிகர்களைத் திருப்திப்படுத்தாது. ஆனால் அவர்களின் உறக்கத்தைக் கெடுக்கும். அதுபோன்ற வீரியமுள்ள படைப்பு இது” என்றார்.

படத்தின் இயக்குநர் விஜய் குமார் பேசுகையில், “இசையமைப்பாளரைத் தேர்வு செய்யும் முன் ஒரு மூன்று விஷயங்களை மனதில் கொள்வோம். ஈகோ இருக்கக் கூடாது; திறமை இருக்க வேண்டும்; டெடிகேஷன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்போம். இந்த மூன்றும் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவிடம் இருந்தது. இந்தப் படத்தில் மூன்று பாடல்கள் மற்றும் ஒரு செய்யுள் இசையமைத்திருக்கிறார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஜேனரில் இருக்கும். முதன்முறையாக இந்தப் படத்தில் இரண்டு பாடல்களைக் கோவிந்த் வசந்தா பாடியிருக்கிறார்.

நடிகர் சூர்யா ஏன் உறியடி 2-வைத் தயாரிக்க வேண்டும் என்று நிறைய பேர் கேட்கிறார்கள், கேட்க நினைக்கிறார்கள். நடிகர் சூர்யா மக்கள் மீதும், சினிமா மீதும் பேரன்பு கொண்ட மனிதன்.

எங்கள் மீது அவர் வைத்த நம்பிக்கையை உறியடி 2 படம் காப்பாற்றும். இந்தப் படம் மக்களுக்கான படம் என்ற நம்பிக்கையையும் காப்பாற்றும். அத்துடன் இந்தப் படத்திற்காக நீங்கள் செலவழிக்கும் நேரத்தையும், பணத்தையும், புத்திசாலித்தனத்தையும் 100 சதவீதம் மதிக்கும் ஒரு படமாக உறியடி-2 இருக்கும். படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நன்றியைக் கூறிப் படைப்பை எனதாக்கிக் கொள்ள விரும்பவில்லை” என்றார்.

நடிகர் சூர்யா பேசுகையில், “கேரளாவில் நடைபெற்ற ஒரு விழாவிற்கு சென்றிருந்தேன். அங்குதான் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவைச் சந்தித்தேன். அவருடைய இசையையும் வீடியோவையும் பார்த்தேன். அதில் ஒரு ஈர்ப்பு இருந்தது. அவர் படத்தைப் பற்றி கூறிய வார்த்தை, ‘இந்த படம் உங்களை எண்டர்டெயின் பண்ணாது. ஆனால் டிஸ்டர்ப் பண்ணும்’ என்று கூறியது முற்றிலும் உண்மை.

இதுவரை திரையில் நான் என்ன செய்திருக்கிறேனோ அவை எல்லாம் இயக்குநர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் கற்பனையில் உருவானது. எங்களுக்கான அடையாளம், இமேஜ் இதெல்லாம் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பால் பெறப்பட்டதே! இந்நிலையில் அவர்களுடைய வேலையில் சென்று குறுக்கீடு செய்யவும், ஆலோசனை சொல்லவும், என்னை நான் தகுதிப்படுத்திக் கொள்ளவில்லை என்றுதான் நினைக்கிறேன். அது தேவையற்றது என்றும் நினைக்கிறேன். ஆனால் நல்ல விஷயங்களை ரசிக்கப் பிடிக்கும். நல்ல விசயங்களுக்குத் துணையாக உடன் நிற்கப் பிடிக்கும். எனக்கான நிலையிலிருந்து, என்ன வகையான உதவிகளைச் செய்ய முடியுமோ, அதைத்தான் இந்தப் படத்திற்குச் செய்திருக்கிறேன். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவுடன் தொடர்ந்து 2டி நிறுவனம் பயணிக்கும். அத்துடன் எங்கள் நிறுவனத்தில் முதன்முதலாக அவர் இரண்டு பாடல்களைப் பாடியிருக்கிறார் அதுவும் எங்களுக்குப் பெருமையான விஷயம்.

2டி நிறுவனம் 10 படங்களுக்கு மேல் தயாரித்திருக்கிறது என்றால், அதற்கு காரணம் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் மற்றும் அவரது குழுவினரின் உழைப்பு தான். இயக்குநர் விஜய் குமார், என்னைப் போலவே அவரும் ஒரு இன்ட்ரோவெர்ட் (introvert). மனதில் நினைத்ததை டக்கென்று வெளிப்படுத்த மாட்டார். விவாதிக்க மாட்டார். அனைத்தையும் புரிந்துகொள்வார். ஒரு அறிமுகத்திற்கு பிறகு இயக்குநர் விஜய் குமாரின் உறியடியைப் பார்த்தேன். அதன் பின்னர் அவருடைய முதல் சந்திப்பிலேயே நான் எப்படி ராஜா சாருடன் பழகுகிறேனோ அதேபோல் இயக்குநர் விஜய் குமாரிடமும் பழகினேன். ஒருவர் சினிமாவுக்காக இவ்வளவு உண்மையாக இருக்க முடியுமா என்ற பிரமிப்பையும் ஆச்சரியத்தையும் என்னுள் ஏற்படுத்தினார்.

ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு அதனுள் எவ்வளவு தூரம் உண்மையாக பயணிக்க முடியும் என்பதையறிந்து, அந்தளவிற்கு பயணித்து அதை வெளிக்கொணர்பவர் விஜய் குமார். அவர் சினிமாவிற்காகக் குடும்பத்தை விட்டுப் பிரிந்து, குழந்தைகளை விட்டுப் பிரிந்து, அவ்வளவு நேர்மையாக இருக்கும் ஒருவரை நான் விஜய்குமாரிடம் பார்த்தேன். எங்க அப்பா படப்பிடிப்பு தளத்திற்கு வந்ததில்லை. எனக்காக யாரிடமும் வாய்ப்பு கேட்டது கிடையாது. ஒரு இயக்குநரைச் சந்தித்தது கிடையாது. கதை கேட்டது கிடையாது. தயாரிப்பாளரைச் சந்தித்தது கிடையாது. இருந்தாலும் நான் ஒரு நடிகரின் மகன் என்ற அடையாளம் எனக்கிருக்கிறது. இப்படி எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் உறியடி என்ற படத்தை எடுத்த விஜய் குமார் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அதை நான் பாராட்டுகிறேன். திரையில் ஒரு ஒரு உண்மை வெளிப்பட்டது. அதன் ஆயுள் அதிகம்.

உறியடி 2 ஏன் வரவில்லை என்ற வினா எழுந்தது. உறியடி வந்து நான்கைந்து வருடங்களுக்கு பிறகு, 2டி நிறுவனத்தின் மூலமாக உறியடி 2 உருவானதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் எண்டர்டெயின் பண்ணாது. டிஸ்டர்ப் பண்ணும். யோசிக்க வைக்கும். எப்போதும் போல் ரசிகர்களை நியாயமான தீர்ப்பை வழங்கும் படி கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.