மைத்தடங்கண் மாதேவி வார்துகிலை யான்பிடிக்க
அற்று விழுந்த அருமணிகள் – மற்றவற்றைக்
கோக்கேனோ என்றுரைத்த கொற்றவர்க் கென்னாருயிரைப்
போக்கேனோ வெஞ்சமத்துப் புக்கு
என்று பாரத வெண்பாவில் வருகிறது. இது பாரதம் பாடிய பெருந்தேவனார் என்பவர் எழுதிய நூல்.
வில்லி புத்தூராரும்,
‘மடந்தை பொன்-திரு மேகலை மணி உகவே மாசு
அறத் திகழும் ஏகாந்த
இடம்தனில் புரிந்தே நான் அயர்ந்து இருப்ப, “எடுக்கவோ?
கோக்கவோ?'” என்றான்;
திடம் படுத்திடு வேல் இராசராசனுக்குச் செருமுனைச்
சென்று, செஞ்சோற்றுக்
கடன் கழிப்பதுவே, எனக்கு இனிப் புகழும், கருமமும்,
தருமமும்!’ என்றான்.
என எழுதியுள்ளார். இதில் யார் முதல் என்று தெரியவில்லை.
அதாவது துரியோதனன் மனைவி கர்ணனுடன் சொக்கட்டான் விளையாடுகிறாள். அப்போது துரியோதனன் உள்ளே வருகிறான். அவன் வருவது கர்ணனின் பின் பக்கம், அவள் பார்த்து எழுந்துவிட, கர்ணன் தோல்வியின் அச்சத்தில் அவள் எழுந்தாள் என்று நினைத்து அவளைப் பிடித்து எங்கே போகிறாய் என்று தடுக்க முயல்கிறான். அப்போது அவன் கை மேகலையில் பட்டு முத்துமணியிலான மேகலை அறுந்து விழ, துரியோதனன், கர்ணனைப் பார்த்து, “ஏன் பயப்படுகிறாய்? உனக்கு சந்தேகம் ஏன் நான் சந்தேகப் பட்டேன் என்று. அப்படியானால் இந்த மணியை எடுக்கவா கோக்கவா?” என்று கேட்டான். அப்படியான துரியோதனனுக்கு என் உயிரைப் போர்க்களத்தில் தந்து செஞ்சோற்றுக் கடன் கழிப்பேன் என்று கர்ணன் கூறுகிறான்.
இந்தக் காட்சியமைப்பு, வியாசர் சொன்னதில்லை. வில்லி சொன்னது என்றே வைத்துக் கொள்வோம். சரி இது கர்ணன் சிறந்த நண்பன் என்று சொல்லுவதற்குப் போதுமானதா?
கர்ணன் துரியோதனனுக்குச் செய்த நன்மைகள் என்ன ?
நகுதற்பொருட்டா நட்பு? கர்ணன் துரியோதனனை விட பதினேழு வயதாவது பெரியவன். கர்ணன் வயது குறித்து பதிவில் விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறேன். சபா பர்வம் – பகுதி 69 இலும் காணலாம்.
இளம் வயதில் பீமன் மீது கொண்ட வஞ்சத்தால் துரியோதனன் பீமனுக்கு நஞ்சூட்டுகறான். அதற்கு உடந்தையாக கர்ணன் இருக்கிறான்.
அரக்கு மாளிகையை அமைத்து பாண்டவர்களை அழிக்க துரியோதனன் முயலும் பொழுது கர்ணன் தடுக்கவில்லை. சூதாட்டம் நடத்தி பாண்டவர்களை அடிமைப்படுத்தியபோதும் தடுக்கவில்லை. பாஞ்சாலியை சபைக்கு துச்சாதனன் இழுத்து வந்ததும் கர்ணன் குதூகலம் அடைந்தான்.
சபை நடுவே இழுத்துவரப்பட்டாள் திரௌபதி
// ஆதரவற்ற தங்கள் தலைவர்களைக் காணும் கிருஷ்ணையைக் {திரௌபதியைக்} கண்ட துச்சாசனன், மேலும் அவளை {திரௌபதியை} வலுக்கட்டாயமாக இழுத்து, அவளிடம், “அடிமையே அடிமையே” {தாசி என்று அழைத்தான் என்கிறது ம.வீ.ரா பதிப்பு} என்று சொல்லிச் சத்தமாகச் சிரித்தான். அந்த வார்த்தைகளைக் கேட்ட கர்ணன் மிகவும் மகிழ்ந்து அந்தப் பேச்சை அங்கீகரித்து சத்தமாகச் சிரித்தான். அதே போல, சுபலனின் மகனான காந்தார மன்னன் சகுனியும் துச்சாசனனைப் பாராட்டினான். கிருஷ்ணை {திரௌபதி} இப்படிச் சபை நடுவே இழுத்துவரப்பட்டதைக் கண்டு இவர்கள் மூவர் {துச்சாசனன், கர்ணன், சகுனி} மற்றும் துரியோதனனைத் தவிர்த்து அனைவரும் சோகத்தில் நிறைந்திருந்தனர்.//
அறம் கூறி இச்செயலை எதிர்த்து நிற்கும் துரியோதனன் தம்பி விகர்ணனை இழித்துப் பேசி அவமதிக்கிறான். அவளின் ஆடையைக் களையச் சொல்வதே கர்ணன் தான்.
//ஓ, குரு குலத்தின் மகனே {விகர்ணா}, ஒரு பெண்ணுக்கு ஒரு கணவன் என்றே தேவர்கள் தீர்மானித்திருக்கின்றனர். இருந்தாலும், இந்தத் திரௌபதி பல கணவர்களைக் கொண்டிருக்கிறாள். ஆகையால், இவள் {திரௌபதி} கற்பற்ற பெண் என்பது நிச்சயம். ஆகையால், இவளை {திரௌபதியை} இந்தச் சபையின் முன்பு ஒற்றையாடையில் கொண்டு வருவதோ அல்லது அவளது ஆடைகளைக் களைவதோ ஆச்சரியப்பட வேண்டிய செயல் அல்ல. பாண்டவர்கள் கொண்ட செல்வங்களும், அவளும், பாண்டவர்கள் அனைவரும் சுபலனின் மகனால் {சகுனியால்} நீதியுடன் வெல்லப்பட்டனர். ஓ துச்சாசனா, நீதி மொழிகள் பேசும் இந்த விகர்ணன் சிறுவனே. பாண்டவர்களின் உடைகளையும், திரௌபதியின் உடையையும் களைந்து விடு” என்றான் {கர்ணன்}.//
//”விதுரனின் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்த அந்தச் சபையில் இருந்த மன்னர்கள் ஒரு வார்த்தையும் பேசவில்லை. இருப்பினும், கர்ணன் மட்டும் துச்சாசனனிடம் “இந்தப் பணிப்பெண் கிருஷ்ணையை {திரௌபதியை} உள் அறைகளுக்கு அழைத்துச் செல்” என்றான். இதன் காரணமாக, துச்சாசனன் பார்வையாளர்கள் முன்னிலையில் ஆதரவற்று நாணத்துடன், தனது தலைவர்களான பாண்டவர்களைக் கண்டு பாவமாக அழுது கொண்டிருந்த திரௌபதியை இழுக்க ஆரம்பித்தான்.//
//ஓ சிறந்தவளே {திரௌபதியே}, ஓர் அடிமை, அவனது மகன் மற்றும் அவனது மனைவி ஆகியோர் சுதந்திரமில்லாதவர்கள். அவர்கள் {அடிமைகள்} செல்வம் சம்பாதிக்க முடியாது. அப்படியே சம்பாதித்தாலும் அது அவர்கள் தலைவருடையது. தனது கணக்கில் ஒரு உடைமையையும் சேர்த்துக் கொள்ள முடியாத ஒரு அடிமையின் {யுதிஷ்டிரனின்} மனைவி நீ. மன்னன் திருதராஷ்டிரனின் உள் அறைகளுக்குச் சென்று, அங்கிருக்கும் மன்னரின் உறவினர்களுக்குப் பணிவிடை செய். அதுவே சரியான காரியம் என்று நாங்கள் வழிகாட்டுகிறோம். //
//ஓ இளவரசி {திரௌபதி}, திருதராஷ்டிரரின் அனைத்து மகன்களும் தான் இப்போது உனக்குத் தலைவர்கள், பிருதையின் {குந்தியின்} மகன்கள் அல்ல. ஓ அழகானவளே {திரௌபதியே}, உனக்கான கணவனை நீ இப்போது தேர்ந்தெடுத்துக் கொள்.//
இச்செயல்களால் தூண்டப்பட்ட துரியோதனன், திரவுபதியை தன் தொடை மீது வந்து உட்காரச் சொல்ல, ‘அவன் தொடையை பிளப்பேன்’ என்றும், கர்ணனால் தூண்டப்பட்ட துச்சாதனன் துகில் உரியும் போது, ‘அவன் மார்பைப் பிளந்து அவன் உதிரம் குடிப்பேன்’ என்றும் சபதம் செய்கிறான் பீமன். ‘மற்ற நூற்றுவரையும் அழிப்பேன்’ என்றும் அந்தச் சபதம் நீள்கிறது.
பின்பு விதுரர் நீதிகள் சொல்லி, திருதராஷ்டிரன் பாண்டவர்களைத் திரும்ப அழைக்கச் சொல்லிக் கொண்டிருக்கையில் துரியோதனன் விதுரரை ஏற்காமல் அவரை மறுக்கிறான்.
// எனது பாதையில் வேறு எந்தத் தடையும் இல்லை என்றாலும், பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்} நகருக்குள் திரும்பி வருவதை நான் கண்டால், உணவையும், நீரையும் தவிர்த்து மீண்டும் மெலிந்தவனாகிவிடுவேன். விஷத்தை உட்கொள்வேன் அல்லது தூக்கு மாட்டிக் கொள்வேன், அல்லது நெருப்புக்குள் நுழைவேன் அல்லது எனது ஆயுதங்களைக் கொண்டே என்னை நான் கொன்று கொள்வேன். ஆனால் பாண்டுவின் மகன்கள் செழிப்பாக இருப்பதை என்னால் காண முடியாது’’ {என்றான் துரியோதனன்} //
அதற்கு கர்ணன் துரியோதனனிடம் சமாதானம் கூறுகிறான். “பாரு துரியோதனா, அவங்க திரும்பி வர மாட்டாங்க. வந்தாலும் மறுபடி பகடை ஆடி அவர்களை மறுபடி காட்டுக்கு அனுப்பிடலாம்” எனச் சொல்கிறான். துரியோதனன் மனம் வெதும்பி நிற்க, கர்ணன் மேலும் சொல்கிறான்.
” துச்சாதனா, சகுனி, நாம் போய் பாண்டவர்களைக் கொன்றுவிட்டு வந்துவிடலாம். அப்பொழுத தான் துரியோதனனுக்கு அமைதி கிடைக்கும்.”
//ஆனால், நம்மால் எப்போதும் அவனது நலத்தைக் காக்க (நாம் திருதராஷ்டிரரை நம்பி இருப்பதால்) உடனே செயல்பட முடியவில்லை. நாம் இப்போது, கவசங்களைத் தரித்து, ஆயுதங்களைத் தாங்கி, நமது ரதங்களில் ஏறி, ஒன்றுசேர்ந்து சென்று, காட்டில் வாழ்ந்துவரும் பாண்டவர்களைக் கொல்லச் செல்வோம். பாண்டவர்களை அமைதிப்படுத்தி, அறியமுடியாப் பயணத்திற்கு அவர்களை அனுப்பிவைத்தால்தான், நாம் இருவரும், திருதராஷ்டிரரின் மகன்களும் அமைதியை அடைய முடியும். அவர்கள் {பாண்டவர்கள்}, துயரத்தில் இருக்கும்வரை, சோகத்தில் இருக்கும் வரை, உதவியற்று இருக்கும் வரை, அந்தக் காலம் வரை மட்டுமே நாம் அவர்களுக்குச் சமமானவர்கள்! இதுவே என் மனம் {கருத்து}” என்றான்//
மாபெரும் வில்லாளி, உலகமகா வீரன் என்று தன்னத்தானே சொல்லிக்கொள்ளும் கர்ணன் செய்யும் செயல் தான் அது. மனம் தளர்ந்து, கவசங்கள் அற்று இருக்கும் பாண்டவர்களை போய் கொன்றுவிட்டு வந்துவிடலாம் என்ற பிரமாதமான யோசனை உதிக்கிறது கர்ணனுக்கு.
துரியோதனாதியர்களின் பாவச் செயலுக்கு உடந்தையாக இருந்தது மட்டுமல்ல. பல இடங்களில் தூண்டி விடுபவனும் அவனே என்கிறது மகாபாரதம். ஆதாரங்களில் சில மேலே பார்த்துவிட்டோம்.
சரி, கர்ணன் தீயவன், ஒத்த குணமுடையவர்கள் நண்பர்களாகிவிட்டார்கள். ஆனால் அதனாலென்ன அவன் நட்பில் என்ன பிழைத்துப் போனான் என்ற கேள்வி வரும் இல்லையா?
நண்பனின் அழிவிற்கு துணைபோவது மட்டுமில்லாமல், அவன் அழிவிற்கு வித்திடும் செயல்களை முன்னின்று தூண்டி விடுவதுமா நட்பின் அடையாளம்?
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.
உயிர் காக்கும் நண்பனா கர்ணன்? இல்லை. அவன் தற்புகழ்ச்சிப் பேசுபவன். அவனால் ஒரு போதும் துரியோதனனுக்கு நடந்த தீமைகளை நிறுத்த முடியவில்லை. நண்பனுக்கு அழிவு வரும் போது அவனை அதில் இருந்து விலக்கி அவனை நிலைபெறச் செய்து தன்னையும் மீறிய அழிவில் அவனுடன் அல்லல் உறுவதே நட்பு என்பது திருக்குறள். அழிவில் இருந்து விலக்காதது மட்டுமில்லை, எப்பவெல்லாம் துரியோதனன் உயிருக்கு ஆபத்தோ அப்போதெல்லாம் கர்ணன் எங்கே போனான் என்றே தெரியாது. முதல் ஆளாய்ப் புறமுதுகிட்டு ஓடியது கர்ணனே!
முதலில் துருபதனைப் பிணையாகத் துரோணர் கேட்டபோது கௌரவர்களுடன் சென்று போரிட்டுத் தோற்றோடியவன் கர்ணன். சரி அடுத்து சுயம்வரத்தின் போதும் தோற்றோடினார்கள். அது போகட்டும் எல்லாரும் தோற்றோடினார்கள், கூடவே கர்ணனும் ஓடினான்.
சரி, இந்தப்பாண்டவர்கள் வனவாசம் போனார்கள் இல்லையா? அவர்கள் படும் துயரைப் பார்த்து ரசிக்க சகுனியும் கர்ணனும் துரியோதனனும் திட்டமிடுகிறார்கள்.
//ஓ! மன்னர்களில் புலியே {துரியோதனா}, தானம் பெறுவது, செல்வத்தை அடைவது, அல்லது நாட்டை அடைவது ஆகியவற்றைவிட, எதிரிகளின் துயரைக் கண்டு ஒருவன் அடையும் இன்பம் பெரியதாகும்.//
இதை கர்ணனும் சகுனியும் துரியோதனனுக்குச் சொல்வதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் இப்படிச் சொன்னது கர்ணன் என்று அடுத்தப் பகுதியிலேயே தெளிவாக்கப் பட்டிருக்கிறது.
//வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “கர்ணனின் வார்த்தைகளைக் கேட்ட பிறகு, மன்னன் துரியோதனன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான்//
இப்பொழுது காட்டுக்குப் போக கர்ணன் ஒரு வழி சொல்றான். “நாம காட்டுக்கு அங்கிருக்கும் மாடுகளைக் கணக்கெடுக்கப் போறோம்னு (கோஷா யாத்திரை) உங்கப்பா கிட்ட சொல்லு. அப்பத்தான் ஒத்துப்பார்” என்கிறான். அப்படியே எல்லாரும் பெரிய படையோட கிளம்பிக் காட்டுக்குச் செல்குறார்கள். வந்த இடத்துல சும்மா இருந்தார்களா?
அங்கே இருந்த புண்ணிய தடாகத்தின் கரையில் தருமன், ராஜ ரிசி என்னும் வேள்வியை செய்கிறான். அருகே களியாட்ட மண்டபங்களைக் கட்டச் சொல்லி துரியோதனன் சொல்கிறான். அது புனிதமான இடம் என்பதால் கந்தர்வர்கள் தோன்றி அவனைத் தடுக்கிறார்கள். அவர்களை விலக்கச் சொல்லி தன் படையினருக்கு உத்தரவிட்டான் துரியோதனன். ‘நீங்கள் மரணத்துடன் விளையாடுகிறீர்கள்’ என்று கந்தர்வர்கள் எச்சரிக்கிறார்கள்.
மீறி படைகளை அனுப்பினான் துரியோதனன். சித்திரசேனன், கந்தர்வர்களின் தலைவன், ‘அவர்களைத் தண்டியுங்கள்’ என்று கந்தர்வர்களுக்கு உத்தரவிடுகிறான். ஆரம்பத்தில் வீரத்துடன் போரிட்ட கர்ணன், கந்தர்வர்களுக்கு சேதம் உண்டு பண்ணினாலும் அவர்கள் பலராய் ஒன்று கூடித் தாக்க வரும் போது தன்னைக் காத்துக் கொள்ள துரியோதனன் தம்பி விகர்ணனின் தேரில் ஏறி ஓடுகிறான்.
//இப்படிப் பல்லாயிரம் கணக்கான கந்தர்வர்கள் ஒன்றுகூடி அவனது தேரைத் தாக்கி, நொடிப்பொழுதில் அதைத் {அத்தேரை} தூள் தூளாக்கினர். இப்படி அவனது {கர்ணனின்} தேர் தாக்கப்பட்ட போது, கைகளில் வாளுடனும் கேடயத்துடனும் கர்ணன் அதிலிருந்து குதித்து, விகர்ணனின் தேரில் ஏறி, தன்னைக் காத்துக் கொள்ள குதிரைகளை வேகமாகச் செலுத்தினான்.” //
துரியோதனனை நிர்க்கதியாக விட்டு, துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று தன்னுயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தான் கர்ணன். நட்பின் சிகரமான மாவீரன்.
உண்மையில் வீரத்துடன் ஓட மறுத்து நின்றவன் துரியோதனன். அவனைக் கந்தர்வர்கள் கொடிக்கம்பத்தில் கட்டிக் கைதியாக்கினார்காள். தோற்று ஓடியவர்களில் சிலர் சென்று பாண்டவர்களிடம் சொல்ல, கௌரவர்கள் மீதான பீமனின் கோபத்தையும் கேலியையும் தடுத்து தருமன் அவர்களைக் காப்பாற்ற பீமனையும் அருச்னனையும் அனுப்புகிறான்.
வில்லி பாரதத்தில் இந்த இடத்தில் பீமன் சொல்லும் சொல் அற்புதம்.
விரி குழல் பைந்தொடி நாணி வேத்தவையில் முறையிடுநாள்,
‘வெகுளேல்!’ என்று,
மரபினுக்கும் நமக்கும், உலகு உள்ள அளவும், தீராத
வசையே கண்டாய்!
எரி தழல் கானகம் அகன்றும், இன்னமும் வெம் பகை முடிக்க
இளையாநின்றாய்!
அரவு உயர்த்தோன் கொடுமையினும், முரசு உயர்த்தோய்!
உனது அருளுக்கு அஞ்சினேனே!
“அன்று திரௌபதி முறையிட்டால், அப்போ உனக்கு கோபம் வரல என்னைக் கோபப்படாதேன்னு தடுத்த, சூதாட்டம் ஆடி தீராப் பழியைக் கொண்டாய். இவ்ளோ கொடுமை செய்து கானகத்துக்கு அனுப்பினவனோட பகையை முடிக்கவும் விடாம தடுக்கிற. அண்ணே அந்த துரியோதனன் கொடுமைக்கு நான் அஞ்சவில்லை. உன்னுடைய தருமத்திற்கு அஞ்சுகிறேன்” என்கிறான்.
அங்கே அத்தனை கந்தர்வர்களையும் தனியாளாக அருச்சுனன் எதிர்கொள்கிறான். முக்கியமாக பயந்து மற்றவர்களைத் தவிக்கவிட்டு தனியே குதிரையில் ஓடவில்லை. கந்தர்வர்கள் மாயையினால் துரியோதனனை வானில் தூக்கிச் சென்ற போதும் அவர்களைத் தடுக்கிறான். துரியோதனனைக் காப்பாற்றுகிறான்.
இது போலவே விராட பர்வத்திலும். கர்ணன் துரியோதனனைத் தூண்டி விடுகிறான்.
//. ஓ! மன்னா {துரியோதனா}, துயரப்பட்டுக்கொண்டிராமல் நாம் விராடனின் நகரத்திற்குச் சென்று, அவனது கால்நடைகள் மற்றும் பல்வேறு வகையான பிற சொத்துக்களையும் கொள்ளையடிப்போம்” என்றான் {கர்ணன்}.//
ஆநிரைக் கவர்ந்து வருகிறார்கள் துரியோதனாதியர்கள். அவர்களை ப்ருஹன்னளையாக இருக்கும் அருச்சுனன் ஒருவனே எதிர்த்துப் போராடுகிறான்.
//பாண்டுவின் மகனான பார்த்தனால் {அர்ஜுனனால்} அடிக்கப்பட்ட கணைகளால் தாக்கப்பட்டு, சிதைக்கப்பட்ட விகர்த்தனன் மகன் {கர்ணன்}, போர்க்களத்தின் முன்னணியை விட்டு அகன்று, ஒரு யானையால் வீழ்த்தப்பட்ட மற்றொரு யானை போல {அந்தப் போர்க்களத்தைவிட்டு} விரைந்து ஓட்டமெடுத்தான்.”//
மறுபடியும், கர்ணன் தன்னைத் தான் காத்துக் கொள்ளப் போர்க்களத்தில் இருந்து புறமுதுகைக் காட்டி ஓட்டமெடுக்கிறான்.
இது மட்டுமா?
கர்ணனின் கொடை என்று பலராலும் பேசப்படும் கவசகுண்டலங்கள், நண்பனை ஆலோசிக்காமல் இழந்தான். அது துரியோதனனுக்குப் பேரிழப்பு. இருக்கட்டும். செய்த சபதத்துக்காகப் பண்டமாற்று செய்து சக்தியாயுதம் பெற்று கவசத்தை அளித்தான் அதை விட்டுவிடலாம்.
போர் தொடங்க நாள் குறித்தாகிவிட்டது. ஆலோசனைகள் அனைத்திலும் துரியோதனன் அத்தனை நம்பிக்கை கர்ணன் மீது வைத்தான். கர்ணனால் மட்டுமே அருச்சுனனைக் கொல்ல முடியும் என்பதில் அவன் உறுதியாக இருந்தான். பாரதியாரின் இந்தப் பாடலை நினைவு கொள்ள
வேண்டும்.
காண்டகு வில்லுடையோன் அந்தக்
காளை அருச்சுனன் கண்களிலும்
மாண்டகு திறல் வீரன் வீமன் தட
மார்பதிலும் எனதிகழ் வரைந்துளதே
மற்றவர்கள் பற்றி துரியோதனன் கவலைப்படவில்லை. அவனது கவனம் இருவர் மீதுதான். பீமன் தனக்கு நிகரான கதாயுதப் போராளி. ஆகையால், அருச்சுனனை எதிர்ப்பது எப்படி என்பது மட்டுமே துரியோதனின் கவலை. அதைச் சரி செய்ய கர்ணன் ஒருவனால் மட்டுமே முடியும் என்று நம்பினான்.
கர்ணன் ஏன் அர்த்தரதனாக இருக்க வேண்டும் என்பதற்கான காரணங்களை பீஷ்மர் மேலுள்ள சுட்டியில் காணலாம். அவர் கர்ணனின் தற்புகழ்ச்சியை அறவே வெறுத்தார் என்பதையும் (கர்ணனின் தற்புகழ்ச்சி).
தன் தற்புகழ்ச்சியால் எதிரிகளைக் குறைத்து மதிப்பிட்டு துரியோதனனுக்கு தவறான நம்பிக்கையை வழங்கினான்.
அதனால் கர்ணன் செய்தது என்ன? முதல் பத்து நாள் போரில் பங்கேற்கவே இல்லை. மேலே சொன்ன எந்த இடத்திலாவது அவன் அதிரதனுக்குரிய இலட்சனத்தோடு இருந்தானா என்று பார்த்தால் இல்லை. அந்தக் காரணத்தாலேயே அவனை அர்த்தரதனாக்கினார். அதை எதிர்த்து பீஷ்மர் களத்தில் இருந்த பத்து நாட்கள் போரிடவே போகவில்லை கர்ணன். பீஷ்மரும் அதை விரும்பவில்லை. தற்புகழ்ச்சிக் கொண்டு தன்னை பீஷ்மரோடு ஒப்பிட்ட கர்ணனை அவரால் ஏற்க முடியவில்லை.
//அதை நீ கேட்பதே உனக்குத் தகும். ஓ! பூமியின் தலைவா {துரியோதனா}, ஒன்று கர்ணன் முதலில் போரிடட்டும், அல்லது நான் முதலில் போரிடுகிறேன். அந்தச் சூதமகன் {கர்ணன்}, போரில் தனது ஆற்றலை என்னுடன் ஒப்பிட்டுக் கொண்டு தற்பெருமையாகப் பேசுகிறான்” என்றார் {பீஷ்மர்}.
கர்ணன் {துரியோதனனிடம்}, “கங்கையின் மகன் {பீஷ்மர்} உயிரோடுள்ளவரை, ஓ! மன்னா {துரியோதனா}, நான் போரிடவே மாட்டேன். பீஷ்மர் கொல்லப்பட்ட பிறகே நான் போரில் ஈடுபட்டு அர்ஜ்ஜுனனிடம் போரிடுவேன் //
இது தான் அவன் துரியோதனன் நட்புக்குச் செய்த மாபெரும் களங்கம். மறுபடியும் சொல்கிறேன். துரியோதனன் போர் தொடங்கியதே கர்ணன் தன்னைக் காப்பான் என்ற நம்பிக்கையில்தான். அந்த நம்பிக்கைக்குத் துரோகம் செய்தவன் எப்படி நல்ல நண்பனாக முடியும்?
அடுத்து, தான் களமிறங்கியதும் பல முறை துரியோதனனைத் தவிக்க விட்டு தான் தப்பி ஓடுகிறான். முக்கியமாக அபிமன்யூவிடம். ஆனால் தற்புகழ்ச்சிக்கு மட்டும் குறைவில்லை. ஆனமட்டும் அதை செய்கிறான். கிருபர் அதைக் கேலி செய்தும் சொல்கிறார்.
// ஓ! கர்ணா, குரு தலைவனின் {துரியோதனனின்} முன்னிலையில் நீ அதிகமாகத் தற்புகழ்ச்சி செய்து கொள்கிறாய். ஆனால் உண்மையில் உன் ஆற்றலோ, (தற்புகழ்ச்சி நிறைந்த உனது பேச்சுகளின்) எந்த விளைவுகளோ எப்போதும் காணப்பட்டதில்லை. (14) பாண்டுவின் மகன்களுடன் போரில் நீ மோதுவதைப் பல நேரங்களில் நாங்கள் கண்டிருக்கிறோம். அந்தச் சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றிலும், ஓ! சூதனின் மகனே {கர்ணா}, பாண்டவர்களால் நீ வெல்லப்பட்டாய்.(15) கந்தர்வர்களால் திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்} (கைதியாகக்) கொண்டு செல்லப்பட்ட போது, அந்தச் சந்தர்ப்பத்தில் முதல் ஆளாக ஓடிய ஒரே ஆளான உன்னைத் தவிரத் துருப்புகள் அனைத்தும் போரிடவே செய்தன [1].(16)///
கர்ணப் ப்ரேமிகளால் நீதிமானாகவும், அறம் காப்பவனாகவும், வீரனாகவும் நட்பின் இலக்கணமாகவும் கருதப்படும் கர்ணனின் இச்செயல்கள் குறித்துக் கேட்டால் வாய் திறவார். அறத்தின் வழி நடக்கும் சாதாரண மனிதன் கூட மேலே குறிப்பிட்ட தீச்செயல்களை ஏற்கமாட்டான். கர்ணன் மன்னன், சூரிய புத்திரன் ஆயினும் எங்கே போனது அந்த அறம்? நண்பனை அழிக்கும் தீமையை ஏன் தடுக்க வில்லை கர்ணன்? ஏன் நண்பனை அநாதரவாக விட்டு ஓடினான்?
எந்த நிலையிலும், கர்ணனால் கைவிடப் பட்டபோதும் அதை நினைக்காமல் கர்ணனைக் கடைசி வரை தன்னுயிர்த் தோழனாகக் கொண்ட துரியோதனன் நட்பு பெரியதா ? இல்லை தன் உயிரை மதித்து நண்பனை விட்டு ஓடியவனும், தன் நண்பனை அதர்மத்தில் இருந்து காக்கத் தவறியவனுமான கர்ணன் நட்பு பெரியதா?
– ஐயப்பன் கிருஷ்ணன்