Shadow

ஆல்ஃபா விமர்சனம்

Alpha-movie-review

ஆல்ஃபா என்பது தலைமை பொறுப்பில் உள்ள ஆளுமையைக் குறிக்கும் சொல். குறிப்பாக, தனது கூட்டத்தில் தலைமைப் பதிவு வகிக்கும் மிருகத்தை அப்படிச் சொல்வார்கள். படத்தின் மையக்கருவும் அதுதான். ஆல்ஃபா என்ற அங்கீகாரம் தரப்படுவதல்ல, உறுதியை நிரூபித்துப் பெறப்படுவது.

20000 வருடங்களுக்கு முன் ஐரோப்பாவில், ஓர் இனக்குழு காட்டெருது (Bison) வேட்டைக்குச் செல்கிறது. அக்குழுவின் தலைவன் தன் மகன் வேகேடாவை வேட்டைக்கு அழைத்துச் செல்கிறான். தன் மகனுக்கு அவர் சொல்லும் பாடம், தலைவர் பதவி தரப்படுவதல்ல, சக்தியை நிரூபித்துப் பெறப்படுவது.

கேடாவின் சிறு பலவீனத்தால் அவன் காட்டெருதால் தூக்கி வீசப்படுகிறான். மலை முகட்டில் இருந்து, இடையில் பாறையில் விழும் கேடாவை அவனது குழு இறந்துவிட்டதாக நினைத்துவிடுகிறது. அவர்களைப் போலவே வழுக்கைத் தலை கழுகொன்றும் நினைத்து கேடாவின் இரத்தம் வழியும் வாயைக் கொத்துகிறது. கழுகின் தலையைப் பிடித்து மலையில் மோதி அதனிடமிருந்து தப்பிக்கிறான் கேடா. அவன் இருக்கும் இடத்தில் இருந்து மேலேயும் போக இயலாது, கீழேயும் போக இயலாது. அப்படியொரு இக்கட்டான அந்தரத்தில் சிக்கிக் கொள்கிறான்.

படத்தில் காட்டப்படும் நிலப்பரப்புகள் அசத்தலாக உள்ளன. கண்ணைக் கவரும், இயற்கை செறிவு நிறைந்த அந்நிலப்பரப்புகள் திரிசங்கு சொர்க்கத்தைக் கண்ணில் காட்டிப் பிரமிக்க வைக்கின்றன. அதே நிலப்பரப்பு, குளிர் காலத்தில் நரகத்தையும் காட்டுகின்றன. ஐஸ்லாந்து, வான்கோவர், ட்ரம்ஹெல்லர், பேட்ரிஷியா ஆல்பர்டாவில் இருக்கும் டினோசார் ப்ரொவன்ஷியல் பார்க் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். மார்ட்டின் (Martin Gschlacht)-இன் ஒளிப்பதிவிற்காகப் படத்தைக் கண்டிப்பாகப் பார்க்கலாம். இரவில், குகைக்கு வெளியே பறக்கும் மூதாதையர்களான மின்மினிப்பூச்சிகள் திரையை விட்டு நம் கண்கள் முன்னே பறப்பது போல் உள்ளது 3டி எஃபெக்ட்டில்.

கேடாவாக நடித்திருக்கும் கோடி ஸ்மிட்-மெக்பீ (Kodi Smit-McPhee) நன்றாக நடித்துள்ளார். படத்தில், ஒரு ஓநாயுடன் அவர் மேற்கொள்ளும் பயணம் சிலிர்ப்பூட்டுவதாய் உள்ளது. சர்வைவல், தைரியம், உறுதி என கேடா முழுத் தலைவனாய்ப் பரிணமித்தாலும், அவனை முழுமையாக்குவது அவனது மனிதாபிமானமே! எஞ்சி நிற்கக் கொடிய மிருகங்களைக் கொல்வதுதான் முதற்பாடம். ஆனால் கேடா, ஓநாயின் வாயைக் கட்டிவிட்டு அதற்கு உதவி செய்கிறான், அடிப்பட்டிருக்கும் அதைக் கழுதைப்புலிகளிடம் இருந்து காப்பாற்றுகிறான், வேட்டையாடிய உணவை வறுத்துப் பகிர்கிறான், குளிரில் இருந்து காப்பாற்ற தனது கழுத்தணியைப் போர்த்துகிறான். நட்பாகிவிடும் அந்த ஓநாயை இறுதியில் சுமந்துசெல்கிறான்.

கதை என்று பார்த்தால் பெரிதாக ஒன்றுமில்லை. படத்தில் ஓநாய்க்கும் மனிதனுக்குமான நட்பை மட்டுமே பிரதானப்படுத்தி விஷுவல் ட்றிட் அளித்துள்ளார் இயக்குநர் ஆல்பர்ட் ஹ்யூஸ் (Albert Hughes). மனிதன் மற்ற உயிரினங்களுடன் வளர்த்துக் கொண்ட உறவுதான் அவனது வளர்ச்சிக்கு வழிவகுத்தது என மார்கன் ஃப்ரீமேனின் வாய்ஸ் ஓவர் படத்திற்கு நல்லதொரு அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கிறது. மனிதனின் வளர்ப்புப் பிராணிகளாக நாய் எப்படி மாறியது என்ற பரிணாமத்தைப் படம் அழகாய்க் கோடிட்டுக் காட்டுகிறது.