Shadow

லக்ஷ்மி விமர்சனம்

Lakshmi-movie-review

பிரபுதேவாவைக் கொண்டு ஒரு நடனப்படம் எடுத்தால் எப்படியிருக்கும் என்ற சிறு பொறி லக்‌ஷ்மியாக வளர்ந்துள்ளது.

லக்‌ஷ்மி எனும் சிறுமிக்கு நடனம் என்றால் உயிர். எங்கும் எப்பவும் நடனம். தனது அம்மாவிற்குத் தெரியாமல், மும்பையில் நடக்கும் நடனப்போட்டியில் கலந்து கொள்கிறாள். லக்‌ஷ்மியின் கனவு என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை.

படத்தின் கதாநாயகியாக சிறுமி தித்யா. பேருந்து நிறுத்தத்தில், சாலையில், குளியலறையில், பள்ளியில், பேருந்தில், டீக்கடையில் (Cafe’teria) என ஆடிக் கொண்டே இருக்கிறார். தெய்வத்திருமகளில் சாரா, தியாவில் வெரோனிகா என அவர் ஆடிஷனில் தேர்வாகும் சிறுவர்கள் அனைவரும் உள்ளத்தைக் கவர்பவர்கள். தித்யாவும் தனது நடனத்தால் கவர்கிறார். அவரது முகம் வடக்கத்தைய சாடையாக இருப்பதாலும், அழுத்தமற்ற திரைக்கதையாலும், ‘நம்ம பொண்ணு’ என்ற உணர்வு எழவில்லை. லக்‌ஷ்மி போட்டியில் ஜெயித்து விடுவாள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் அப்பட்டமாகத் தெரியும் ஒரு விஷயம். அதை ஒன்றும் செய்வதற்கில்லை. ஆனால், அவள் எப்படித் தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறாள், ‘நம்ம பொண்ணு’ இறுதிப் போட்டியில் ஜெயித்தாகி விடவேண்டும் என்ற பதைபதைப்பை வழங்க இயக்குநர் விஜய் தவறிவிடுகிறார். எந்தக் கதாபாத்திரமுமே வலுவாகக் கட்டமைக்கப்படவில்லை.

ஒரு டெம்ப்ளட்டில் சிக்கிக் கொள்வது போலொரு துரதிர்ஷ்டம், இயக்குநருக்கு வேறெதுவுமில்லை. படத்துக்கு ஒரு வில்லன், பள்ளி ஆசிரியையான கோவை சரளாவைக் கொண்டு அசட்டுத்தனமான நகைச்சுவை எனப் படத்தில் தேவையில்லாத ‘ஆணி’கள் நிறைய உள்ளன. உதாரணம், சென்னைக் குழு மேடையில் ஆடத் தொடங்கும் பொழுது, மேடையெங்கும் ஆணிகள் உள்ளன. சென்னைக் குழு ரத்தம் வழிய வழிய ஆடுகிறார்கள். மும்பைக் குழுவைச் சேர்ந்த சிறுவனின் வேலையாம் அது. படம் பார்ப்பவர்களின் நெஞ்சைக் கனக்கச் செய்யவேண்டும் என்ற கலையார்வத்தை எல்லாம் புரிந்து கொள்ள முடிகிறது. அதற்காக ஒரு நியாய தர்மம் வேண்டாமா?

இந்தியாவெங்கும் பார்வையாளர்கள் உடைய ‘ஃப்ரைட் ஆஃப் இந்தியா’ நிகழ்ச்சியாம் அது. மற்ற மாநிலத்துக் குழு ஆடிய பின் கிடைக்கும் எந்த ‘கேப்’பில் ஆணிகள் தூவப்பட்டன எனப் புரியவில்லை. HDR கேமிரா கொண்டு படம் பிடிக்கப்படும் நிகழ்ச்சியில், க்ளோஸ்-அப் காட்சிகளில் தரையில் உள்ள ஆணியோ, குழந்தைகளின் உடம்பில் ரத்தம் வருவதோ, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களை உறுத்தவில்லையாம். ஆனால், பார்வையாளர்கள் மட்டும் பரிதாபப்படவேண்டும் என இயக்குநர் எதிர்பார்க்கிறார். என்ன கொடும சார் இது?

சென்னைக் குழுவின் வெண்ணெய் வெட்டி கோச் விகே எனும் கிருஷ்ணா, மேடையில் எப்படி ஆணி வந்தது, குழந்தைகளின் காயத்துக்கு யார் பொறுப்பேற்பது என்று எதையும் கண்டுகொள்வது இல்லை. ஏதேனும் ஒரு குழந்தை மேடையிலேயே இறந்திருந்தால் கூட, ‘பாருங்க! சென்னை ஜெயிக்கிறதுக்காகத் தன் உயிரையும் பொருட்படுத்தாது ஆடிய இந்த இளஞ்சிங்கத்தைப் பாருங்க. இவருக்கு எத்தனை லைக் ஃப்ரெண்ட்ஸ்?’ என்று கேட்பாராட்டிருக்கு அந்த கோச். அத்தகைய சிறப்பான கோச் கதாபாத்திரத்தில் பிரபுதேவா நடித்திருக்கிறார். இயக்குநர் விஜயிடம், ‘டான்ஸ் படம் பண்ணா வேற லெவல்ல இருக்கணும்’ என்று கேட்டுக் கொண்டாராம் பிரபுதேவா.