

நடிகை வனிதா விஜயகுமார் எழுதி, இயக்கிக் கதையின் நாயகியாக நடித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr) திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr) திரைப்படத்தில் ராபர்ட், வனிதா விஜயகுமார், ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், செஃப் தாமு, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இவ்விழாவில் பேசிய இயக்குநர் வனிதா விஜயகுமார், “அம்மாவிற்குப் பிறகு அம்பிகா, ஷகிலா ஆகிய இருவரைத்தான் அம்மாவிற்கு நிகராகப் பார்க்கிறேன். ஷகிலா இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். என்னை இயக்குவது அம்பிகா தான். இந்தப் படம் தொடர்பான பணிகள் எதுவாக இருந்தாலும் அம்பிகா அக்காவிடம் அனுமதி வாங்கிவிட்டு தான் செய்தேன். இன்று வரை பல தருணங்களில் எனக்கு ஆதரவாகச் செயல்படுபவர் அம்பிகா அக்கா தான்.
வசந்தபாலனின் படங்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகை. அவருடைய எழுத்துக்கும் நான் மிகப்பெரிய ரசிகை. அவர் இயக்கத்தில் வெளியான ‘அநீதி’ திரைப்படத்தில் நடித்திருந்தேன். அவருடைய எளிமை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரிடமிருந்து மனிதநேயத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். அவர் அமர்ந்திருக்கும் மேடையில் நானும் இயக்குநராக அமர்ந்திருப்பதைப் பெருமிதமாகக் கருதுகிறேன். என் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் நன்றி.
நல்ல இயக்குநர், பெரிய இயக்குநர், சிறந்த இயக்குநர் என யாராக இருந்தாலும் ஒரு படத்திற்கு அவர்தான் கேப்டன். அந்த வகையில் என் மீது நம்பிக்கை வைத்துப் பணியாற்றிய ஸ்ரீகாந்த் தேவாவிற்கும் நன்றி. இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த் தேவாவின் பெயருக்கு முன் ‘ரொமான்ஸிக்கல்’ என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.
இயக்குநர் பி.வாசு சாரிடம் ‘பொண்ணு வீட்டுக்காரன்’ உள்ளிட்ட பல படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றி இருக்கிறேன். அந்தத் தருணத்திலேயே என்னிடம் திறமை இருக்கிறது என்று கண்டுபிடித்து பாராட்டியவர் பாத்திமா பாபு அக்கா. அவர்களுக்கும் நன்றி.
சமூக வலைதளங்களில் என்னைப் பற்றிய விமர்சனங்களை படிப்பேன். ஆனால் கண்டுகொள்ள மாட்டேன். இந்தப் படத்தில் ஷகிலா பேசுவது போல் ஒரு டயலாக் இருக்கும். ‘ஒரு பொண்ணு கர்ப்பமாக இருக்கும் போது அம்மாவை விட புருஷன் கூட இருக்கணும்’ எனப் பேசுவார். இது என்னுடைய வாழ்க்கையில் அனுபவித்த விஷயம்.
ஜோவிகாவின் தயாரிப்பில் நான் ஒரு திரைப்படத்தை இயக்குவேன் என்று நினைத்து கூடப் பார்த்ததில்லை. ஜோவிகா கதாநாயகியாக அறிமுகமாகிறார். அவர் இரண்டு படங்களில் நடிப்பதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு இருக்கிறார். தெலுங்கில் சூப்பர் ஹிட் படங்களைத் தயாரித்த சுமந்த் ஆர்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எம்.எஸ். ராஜூ ஜோவிகாவை அறிமுகப்படுத்துகிறார். அந்தப் படத்திற்கான படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் தொடங்குகிறது” என்றார்.

