

ஒரு திருநங்கை அரசு அலுவலரைக் கொன்ற கார்ப்பரேட் முதலாளியைக் கைது செய்கிறார் காவல்துறை அதிகாரி ரங்கராஜ். அவ்வழக்கில் இருந்து மிகச் சுலபமாக வெளியில் வரும் வில்லன், ரங்கராஜின் கர்ப்பவதி மனைவியான அனுவைக் கொல்கிறான். கோபத்தில் ரங்கராஜும் வில்லனைக் கொன்று விட, காவல்துறையும், வில்லனின் ஆட்களும் நாயகனைத் தேடுகின்றனர். மகளுடன் தலைமறைவாகித் தனது பூர்வீக ஊரில் தஞ்சமடைகிறார் ரங்கராஜ். அவரது அப்பாவுக்கும், வில்லனின் அப்பாவுக்கும் உள்ள தீர்க்கப்படாத சிக்கலொன்றும் சேர்ந்து நாயகனைத் துரத்துகிறது. அச்சிக்கல் என்னவென்றும், அதிலிருந்து ரங்கராஜ் எப்படி வெளிவருகிறார் என்பதும்தான் படத்தின் கதை.
இடைவேளை வரை ஒரு கதையும், அதன் பின் வேறொரு கதையுமாகத் திரைக்கதை பயணிக்கிறது. ஆசிரமத்தில் வளரும் நேர்மையான காவலதிகாரி, ஆசிரமத்திலேயே ஒரு குழந்தையைத் தத்தெடுக்க விரும்பும் அவரது காதல் கதை என படத்தின் முதற்பாதி ரசிக்க வைக்கிறது. சேதுபதி படத்து விஜய் சேதுபதியை ஞாபகப்படுத்தும் விதமாக இருந்தது ரங்கராஜின் இன்ஸ்பெக்டர் பாத்திரம். படத்தை எழுதி இயக்கி, நாயகனாக நடித்துள்ளார் ரங்கராஜ்.
கரீம் பாயாக மறைந்த நடிகர் டெல்லி கணேஷ் நடித்துள்ளார். அவரது வயோதிகமும் சோர்வும் அவரது கலகலப்பான ஸ்க்ரீன் பிரசென்ஸ்க்குத் தடையாக உள்ளன. முதற்பாதி நாயகியாக, அனு எனும் பாத்திரத்தில் நான்சி நடித்துள்ளார். அவரது கதாபாத்திர வார்ப்பை இன்னும் சிறப்பாக வார்த்திருக்கலாம். ஒரு நாயகி என்றளவிலேயே அவர் திரையில் தோன்றி மறைகிறாரே அன்றிக் கதாபாத்திரமாக மனதில் பதியவே இல்லை. இரண்டாம் பாதியில், கனவதியம்மாளாக ஸ்ருதி நாராயணன் நடித்துள்ளார். வீரப் பெண்மணியாக வந்து படத்தைத் தொடக்கி வைக்கும் ஸ்ருதி, இரண்டாம் பாதியில் வரும் ஃப்ளாஷ்-பேக் காட்சிகளில் காதல் மனைவியாகக் கவர்கிறார்.
போலீஸ் மீசை வைத்து, மீசையில்லாமல், தாடியுடன், கொடுவா மீசையுடன் என நான்கு வித கெட்டப்களில், தந்தை – மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் ரங்கராஜ். ஒரு பழிவாங்கும் கதையாக முடியும் படத்தின் இறுதியில், வீரத் தமிழன், தமிழ் மண், விவசாயம், இங்கே கார்ப்பரேட்களுக்கு அனுமதியில்லை என முழங்கிப் படத்தை முடித்துள்ளனர். கார்ப்பரேட்க்கு எதிரான வீரத்தமிழனின் நெஞ்சுரத்தையே தலைப்புக் குறிக்கிறது.

